168
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் தொன்மங்களும் பாரம்பரியங்களும் கடுமையாக அழிக்கப்பட்டு – மறைக்கப்பட்டு வந்த நிலையில் நல்லாட்சியிலும் இந்த நிலை தொடர்கிறதா என மக்கள் மத்தியில் பெரும் விசனம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகங்களில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டு வந்த நிலையில் தென்னிலங்கையில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களும் அழிக்கப்படுகின்றன. சிவபூமி என திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட ஈழ திருநாட்டில் கதிர்காம் மற்றும் சிவனொளிபாத மலை சைவ தொன்மை வாய்ந்த இடங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன.
வரலாற்று ரீதியாகவும் பல்வேறு தமிழ் சிஙகள, உலக அறிஞர்களாலும் உணரப்பட்ட இப் பாரம்பரியங்கள்மீது கடந்த பல வருடங்களாக மூடி மறைத்தல்கள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது, புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை திட்டமிட்ட முறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு சைவ மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன முறுகல்களும் இன மேலாதிக்கங்களும் கடுமையாக நிலவி வந்த நிலையிலும் இவ்வளவு காலமும், சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது திடீரென கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது. நல்லாட்சியில்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அல்லது நல்லாட்சிக்கு எதிராக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தற்போதைய அரசும் அது சார்ந்த அமைச்சர்களும்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
Spread the love