ரபேல் போர் விமான விவகாரத்தில், 5 ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.
அத்துடன் ரபேல் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரை தொடர்பாக, அந்த பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேட்டர் ஜேர்னல் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை தங்கள் நிறுவனத்துக்கு களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இதனால் 5 ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக செப்ரம்பர் 7ம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்துக்கு ஆணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது