குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அநுராதபுரம் சிறையில் பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வு எனும் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மகசீன் சிறைச்சாலையில் உள்ள 42 அரசியல் கைதிகளும் நாளை மூன்றாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுப்படவுள்ளனர். இதற்கான கடிதத்தினை சிறைச்சாலை அத்தியட்சரிடம் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டமானது, அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்குமானது எனத் தெரிவித்தே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து ஒன்றரை வருடங்களாகின்றது எனத் தெரிவித்த அவர்கள் அமைச்சர் மனோகணேசனும் முன்பு போல தங்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தின் தவறுகளிலிருந்து தமிழ் இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தரிவித்த அவர்கள் சமூக விடுதலைக்காகவும், தங்களது விடுதலைக்காகவும் அவர்கள் போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.