Home இலங்கை திம்புக் கோட்பாட்டை கருத்த்தில் எடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அன்றைய ஜெயம்பதி விக்கிரம ரட்ண எங்கே?

திம்புக் கோட்பாட்டை கருத்த்தில் எடுத்து இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அன்றைய ஜெயம்பதி விக்கிரம ரட்ண எங்கே?

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன்:-

புதிய அரசியலமைப்பு:- ஜயம்பதி அன்று சொன்னது இன்று கவனத்தில் எடுக்கப்படுகிறதா?

ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் இன்று முக்கியமான ஒருவர். ஜனாதிபதி வழக்கறிஞர் . அரசியலமைப்பு விவகார ஆலோசகர்.  இன்றைய புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டு விடயத்தில் அவரின் பங்காற்றலும் முக்கியமானது. இதைவிட முக்கியம் என்னவெனில் அவர் ஐக்கிய தேசியக் கடசியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் . அரசியலமைப்பு மாற்றம் -இன  முரண்பாட்டுக்குத் தீர்வு  என்ற விடயம் தொடர்பில் தான் அவர் பாராளுமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டார் என்று கருதப்படுகிறது.

அவர் அண்மையில் தெரிவித்த கருத்து இது :-

“இலங்கையில் அரச மதம் என்று ஒன்று இருக்காது .அரசுக்கு மதம் அவசியமில்லை என்பதாகும்.  அரச மதம் என்பது முற்றிலும் வித்தியாசமானது. பாகிஸ்தானில் இஸ்லாம் அரச மதமாக காணப்படுகின்றது”.

“எமது முக்கிய நோக்கம் அரசுக்கு மதம் என்று ஒன்று இருக்கக் கூடாது என்பதாகும். அரசை ஜனநாயகம் மிக்க ஒன்றாக மாற்றுவதே இன்றுள்ள முக்கிய பிரச்சினையாக நாம் கருதுகின்றோம்” இவ்வாறு  அவர் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

திரு   ஜயம்பதி அவர்கள் 2001  ஆம் ஆண்டு மலேசியா தலைநகரில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு  பேசினார். இதில் மலேசியாவின் அரசியல் சர்வதேச விவகார அறிஞர் கமருள்நிசாம் அப்துல்லா தலைமையில் பல   வெளிநாட்டு முக்கியத்தர்களுடன்  பிதா  இம்மானுவேல் அடிகள் , விசுவநாதன் ருத்ரகுமாரன் , கலாநிதி மணிவாசகம் ( தென்னாசியாக் கற்கைகள்- சென்னைப் பல்கலைக்கழகம் ) என்று பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 சமாதான பேச்சுக்களை முன்னெடுத்தல் பற்றிய கருத்தாடல் அது. ஆண்டு 2001.

சட்ட அறிஞர் ஜயம்பதி அவர்கள் குறிப்பிட்டதை  அப்படியே தருகிறேன். :-

“…From the above it is seen that Tamil aspirations contained in the Thimpu principles could be accommodate in a Constitution of a united Sri Lanka .Certain modifications may have to be made in view of the various concerns of the other communities, especially in the light of their experiences of the past. Flexibility on both sides is needed. What is required is not a restatement of the principles in a Constitution but the accommodation of Tamil aspirations reflected in them.

This is difficult, but not impossible. After all, politics is the art of the possible.”  

திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்  தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோட்டபாடுகளின் அபிலாசைகளையும் உள்வாங்கி  ஏனைய சமூகங்களின் அனுபவங்களினூடான  கருத்துகளையும் கவனத்திலெடுத்து ஐக்கிய இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவக்கலாம் என்பதே அவர் அங்கு தனது உரையின் தொகுப்பாகக்  குறிப்பிட்டதாகும்.

 சரி ,

 1985 இல் பூட்டனின் தலைநகரான திம்புவில் இலங்கை அரசுடனான பேச்சில் முன்வைக்கப்பட்ட  நமது தமிழர் தரப்பின் அபிலாசைகள் என்ன என்று ஒருக்கால் மீட்டுப் பார்ப்போம்.

அப்போதிருந்த EROS,EPRLF, LTTE, PLOTE,TELO, TULF,  ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர்.  இந்த ஆறு கடசிகளும் அல்லது அமைப்புகளும் ஒருமுகப்பட்டு ஐந்து விடயங்களை யோசனையாக முன்வைத்தனர்.

 1) தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அவர்களை ஒரு தேசிய இனமாகக் ஏற்றுக்கொள்ளல் .

2) தாய் நாட்டுக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளல்

3) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்

4) இலங்கை தமது நாடு என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைவரதும் பிரஜா உரிமையை ஏற்றுக்கொள்ளல்

5) தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளை  ஏற்றுக்கொள்ளல்

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அனைத்துத் தமிழ் அரசியற் கடசிகளின் உடன்பட்டதுடன் முன் வைக்கப்பட்ட இந்த யோசனைகளை ஜெ ஆர் ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கடைசியில் அரசாங்கம் இதனை நிராகரித்தது.

இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையும் புரிதலும் அன்று பதவியிலிருந்த அரசுக்கு இருக்கவில்லை. இல்லாவிடில் இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் தனக்கிருந்த ஆறில் ஐந்து  பெரும்பான்மைப்பலத்தை வைத்து அரசியல் யாப்பு சீர் திருத்தம் ஒன்றை ஏற்படுத்தி இவற்றை அதற்குள் உட்படுத்திக்  கொண்டிருக்கலாம் என்பது சமாதனப் பணிகளில் ஈடுபட்ட விமர்சகர்களின் கருத்து.

இதில் இன்னுமொன்றையும்  இங்கு சொல்லியே ஆகவேண்டும்..

திம்புப் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்ட தமிழ்குழுக்களுக்கு இந்த ஐந்து விடயங்கள் பற்றிய ஆழமான தெளிவான முறையிலான விவாதமோ கருத்துப்பரிமாறலோ இருக்கவில்லை என்பது  குறிக்கத்தது.

ஜே ஆரின் சகோதரரும் பிரபல சட்டவாதியுமான எச் டபிள்யூ ஜெயவர்த்தன இவற்றைத் திசைதிருப்பும் வகையில் அபிவிருத்தி பற்றி உரையாற்றி முடிந்ததும் தமிழர் தரப்பில் உரையாற்ற சில கணங்கள் எடுத்ததாம் .

திரு அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்தைப் பார்த்துப்  “பேசுகிறீர்களா?” என்று கேட்க அவர் “நீங்களே பேசுங்கள்”, என்று சொல்லவும் அமிர்தலிங்கம் பேசியுள்ளார். இந்தக் கோட்பாடுகளை  விளக்கியுள்ளார்.

உண்மையைச் சொல்வதானால் இன்றைக்கும் அப்படி ஒரு உரையை -அதாவது அன்று பேசப்பட்ட உரையை-  பேசக்கூடியவர் சம்பந்தன் என்கின்ற ஒருவர் தான் என்பதை அரசியலில் நியாயபூர்வமான எண்ணுபவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அதில்  சந்தேகமேயில்லை. ராஜீவ் காந்திக்கே வடகிழக்கில் இணைப்பின் அவசியத்தைக் கையில் வரைந்து  விமானத்தில் விளக்கியவர் அவர் . தற்காலிக இணைப்புக்காவது   ராஜீவை இணங்க வைத்தவர் அவர்.

ஆனால் இன்று  அன்றாடம் வெளி வருகின்ற  செய்திகளைப் படிக்கும்போது  அவர் இன்று அப்படிப் பேசுவாரா என்பதே  -நம் முன் உள்ள கேள்வியாகும்.

அல்லது மீண்டும் அன்றுபோலவே- வடகிழக்கை தற்காலிகமாக இணைய வைக்கிறாரோ தெரியவில்லை.

திம்புப் பேச்சுக்களில் இடம்பெற்ற தோல்விதான்  விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பு வீறு கொண்டு வீச்சாக எழுவதற்கு காரணமாக அமைந்தது .

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் ,

ஐக்கிய இலங்கை என்ற அரசமைப்பிற்குள்ளேயே தமிழர் தரப்பு தனது கோரிக்கைகளை அன்று திம்புவில் முன்வைத்திருந்தது.

நடைமுறைக்குப் பொருந்தக்கூடிய தன்மையை நிராகரித்து ஐக்கியதேசியக் கடசி அரசு வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளையே தனது கவனத்தைச் செலுத்தியது.

அதன் விளைவினை  நாடு அனுபவித்தது. எனவே அரசியலமைப்பில்  பொறுப்புக்கூறவேண்டிய பெருங்கடமை ஐக்கியதேசியக் கட்சிக்கு நிறைய உண்டு.

2001 இல் திரு ஜயம்பதி விக்ரமரத்னவால் சொல்லப்பட்ட -ஏற்றுக்கொள்ளப்பட்ட திம்புப் பேச்சுக்களில் தமிழர் தரப்பின் அபிலாசைகள் என்ற விடயம் – இன்று அவரும் இந்த அரசியலமைப்பு விவகாரத்தில் பங்காற்றும் வேளையில் கவனத்தில் எடுக்கப்படுகிறதா?

ஏனெனில் நான் மேலே குறிப்பிட்டது போல திம்புவில் தலைவர் அமிர்தலிங்கம் பேசிய விடயங்களை இன்றும் பேசக்கூடிய ஒருவரான திரு சம்பந்தனும்  அவருடன் இருக்கிறா அல்லவா? 

இக்குறிப்பு நல்லிணக்கம் பற்றிப் பேசுவோரின் அனைவரதும் கவனத்திற்கு சமர்ப்பணம்.

உசாத்துணை :-

லயனல் குருகே : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைகளும் தீர்வுகளும் (மாற்றுக கொள்கைகள் நிலையம்)

Peace Initiatives Towards Reconciliation and Nation Building in Sri Lanka: An International Perspective

  http://www.dailyceylon.com/101409

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக எஸ் எம் வரதராஜன்:-

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More