0

கட்சியின் அனுமதியின்றி வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகத் தன்னிச்சையாகச் செயற்பட்ட வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனை ஆறுமாத காலத்தி;ற்கு கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்குக் கட்சியின் தலைமைக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கும். ஆறுமாத காலத்தின் பின்னர், இந்த விடயம் குறித்து கட்சியினால் தீர்மானிக்கப்படும் என்றும்சிறிகாந்தா கூறியுள்ளார் .
அமைச்சர் டெனிஸ்வரன் விடயம் சம்பந்தமாக முக்கியமாக ஆராய்வதற்காக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு ஞாயிறன்று வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி விவாதித்தது.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடிய கட்சியின் தலைமைக்குழு பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணிவரையில் கலந்துரையாடியுள்ளது.
நீண்ட நேர சந்தி;ப்பின் போது அமைச்சர் டெனிஸ்வரனை ஆறுமாத காலத்திற்குக் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்ததாவது:
வடமாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கட்சயிpன் அனுமதியின்றியும், கட்சியின் ஆலோசனையைப் பெறாமலும் தன்னிச்சையாக டெனிஸ்வரன் கையெழுத்திட்டிருந்தார்.
இது குறித்து, ஏற்கனவே, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அவருக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு காரணம் இருந்தால் தெரிவிக்குமாறு அவரிடம் கோரப்பட்டிருந்தது.
இந்த விடயம் சம்பந்மாக ஆராய்வதற்காகக் கடந்த வாரம் நடைபெற்ற தலைமைக்குழு கூட்டத்திற்கு அழைப்பின் பேரில் அவர் வருகை தந்திருந்தார்.
கட்சியின் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் பெறாமலும், கட்சியுடன் ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டதன் மூலம் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியிருந்தமைக்கு அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.
அக்கூட்டத்தில் இடம்பெற்ற கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினோம்.
ஏற்கனவே கூட்டமைப்பின் நான்கு கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் யாழில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவிற்கமைய, வடமாகாண முதலமைச்சர் தனது தலைமையிலான அமைச்சரவையை புதிதாக அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக இராஜினாமா செய்தால் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை இலகுவாக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த வகையில் அவருக்கு ஒரு நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டு, அவருடைய முடிவைத் தெரிவிக்குமாறு அவரிடம் கோரியிருந்தோம்.
இதனையடுத்து, மறுநாள் இரவு கட்சியினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு தான் இராஜினாமா செய்யும் நிலைப்பாட்டில் இல்லை என்பதை தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும் இதுபற்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் கட்சியின் தலைமைக் குழு கூடி, அவர் தொடர்பான ஒழுங்கு விவகார நடவடிக்கையை விரிவாக ஆராய்ந்து ஈற்றிலே ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம்.
அதன்படி, எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த ஆறு மாத கால முடிவில் கட்சி மீண்டும் அவருடைய விவகாரம் குறித்து ஆராய்ந்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கும் என கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்தார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், குணசீலன், சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், கட்சி தலைமைக் குழு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சிறீகாந்தா, கிரன் உள்ளிட்டவர்களுடன் புலம்பெயர்ந்துள்ள கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love