இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஊடக அறிக்கை – பொதுஅமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள்:-

அரசியல் கைதிகளினுடைய விடுதலை தொடர்பாகவும் – வவுனியாவிலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவாக- பொது அமைப்புக்கள் கூடி வடமாகாணம் தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்தையும் – வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் – மறுநாள் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம்.

இத்தகைய போராட்டங்களே – எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரும் நிர்ப்பந்தத்தை ஏற்பட்டுத்தியிருந்தது. இவ்வளவும் நடைபெற்றும் கூட – அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக – எவ்வித சாதகமான பதில்களும் அரசு தரப்பால் வழங்கப்படவில்லை.

ஆனால் – இதேசமயம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுடனும் – அரசியல் கைதிகளின் உறவினர்களுடனும் – ஜனாதிபதி இரு சந்திப்புக்களை நடத்தியிருந்தார். இச் சந்திப்புக்கள் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை எனக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக – வடமாகாணத்தைச் சேர்ந்த 35 ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும் கூட – அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளை சந்திப்பதற்கு மாறாக – ஏனைய சிலரை அழைத்துப் பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையை திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியேயாகும்.

ஜனாதிபதி பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் – ஏற்கனவே பல வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் – எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்பட்டதாக இல்லை. அதே நிலைமைதான் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் வருகைதரும்போது – அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை ‘வாருக்கள் பேசித் தீர்க்கலாம்’ என அழைத்த ஜனாதிபதி – பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் பேசியும் ஆக்கபூர்வமான பதிலெதனையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடுகளைப் பார்க்கின்ற போது – அரசியல் கைதிகளின் விடயமாயினும் சரி – ஏனைய விடயங்களாயினும் சரி தொடர்ச்சியான போராட்டங்களும் அதனூடாக ஏற்படுத்தப்படும் அழுத்தமும் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இவர்களை சிந்திக்க வைக்கும் என நம்புகின்றோம்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – ஒத்திவைப்புப் பிரேரணையுடன் மட்டும் நின்று விடாமல் – பாராளுமன்றத்தைப் பகிஸ்கரித்தோ அல்லது வேறு காத்திரமான போராட்டங்களினூடாகவோ அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தரவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

ஒரு அரசியல் தீர்மானத்தின் மூலமே – அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதுடன் அதற்கு நிரந்தரமான முடிவினையும் எட்டமுடியும். இது அரசாங்கம் கூறுவதுபோல – வெறுமனே ஒரு சட்டப் பிரச்சினையல்ல. அரசியல் கோரிக்கைகளுக்காகப் போராடிய போராளிகள் மேல் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களேயாகும்.

ஆகவே – அக்குற்றச்சாட்டுக்கள் அகற்றப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஜே.வி.பி. காலத்திலும், இந்திய – இலங்கை ஒப்பந்தக் காலத்திலும் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தார்கள் என்று வரலாறு இருக்கும் போது – இப்போது இது ஒரு புதிய விடயமுமல்ல என்பதையும் நாம் சுட்டிக்காட்டுக்கின்றோம்.

எனவே – அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் வேண்டி நிற்கின்றோம். தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
– யாழ்ப்பாணம் –

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.