இலங்கை பிரதான செய்திகள்

சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் – மக்களது பாதிப்பினை கருத்தில் கொள்ளாத தான்தோன்றித் தனமான விஷப் பரீட்சை:-

எமது நாட்டில் ஏற்படவிருக்கும் மின் தட்டுப்பாட்டினை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பிலான திட்டமானது, அப்பகுதி வாழ் மக்களுக்கு சூழல் ரீதியலான பாதிப்பினை உண்டு பண்ணும் அதே நேரம், எமது அயலக நட்பு நாடான இந்தியாவுடன் வீண் முரண்பாட்டினை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய திட்டங்கள் தொடர்பில் அவதானங்களை செலுத்துவதிலிருந்து இலங்கை அரசு தவிர்ந்து கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த காலத்தில் திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அப்பகுதி பொது மக்களும், சூழலியலாளர்களும், அதனது பாதிப்பு தொடர்பில் தங்களது எதிர்ப்புகளை பாரியளவில் வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாகவே, மேற்படி முயற்சியை மேற்கொண்டிருந்த இந்திய அரசுடன் இலங்கை அரசு சாதகமாகக் கலந்துரையாடியதால், இத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில்இ, இதே பகுதியில் மீண்டும் இத்திட்டத்தினை முன்னெடுப்பது என்பது ஒரு விஷப் பரீட்சையாகும். இத்தகைய செயலானது, எமது மக்களது பாதிப்பினை கருத்தில் கொள்ளாத தான்தோன்றித் தனமான செயலாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையம் காரணமாக நுரைச்சோலை பகுதி வாழ் மக்கள் நாளாந்தம் அனுபவித்து வருகின்ற துன்பஇ துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

அதே நேரம் ஏற்கனவே சாம்பூர் பகுதி அனல் மின் நிலைய செயற்பாடுகளை எமது மக்களது பாதிப்புகளை அவதானத்தில் கொண்டு இந்தியா நிறுத்தியுள்ளது. இத்தகைய நிலையில், அப்பகுதியில் அதே திட்டத்தை மீள முன்னெடுக்கின்றபோது, இநதியாவுடனான நட்பினை சிதைத்துக் கொள்கின்ற நிலையும்இ வீண் முரண்பாடுகளை உருவாக்குகின்ற நிலையும் ஏற்படும் என்பதால், அது எமது நாட்டுக்கு ஆரோக்கியமான நிலைமையாகாது.

எனவே மேற்படித் திட்டத்தினைக் கைவிட்டு, ஏற்கனவே எமது நாட்டில் திட்டமிடப்பட்டிருந்த மாற்று மின் உற்பத்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றை செயற்படுத்த அரசு முன்வர வேண்டும். அந்தவகையில், வடக்கில்கூட காற்றலை, நீரலை, கிளிசீரியா, சூரியக் கதிர் போன்ற மாற்று மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவை தொடர்பில் ஆராய்ந்து, அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்த அரசு முன்வருவதே மின் பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளாகுமென டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers