உலகம் சினிமா பிரதான செய்திகள்

20 ஆண்டுகள் கடந்த டைட்டானிக்கும், திரைமொழி ஆளுமையும், மூழ்காத சில நினைவுகளும்:-

முகமது ஹுசைன்:-

டிசம்பர் மாதம் 19-ம் திகதியுடன் டைட்டானிக் படம் வெளிவந்து இருபது வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டன. அந்தத் துரதிர்ஷ்டக் கப்பலின் பயணத்தின் மூலம் நம்மைச் சீட்டு நுனியில் மூன்று மணி நேரம் அமரவைப்பது சவாலான காரியம். ஆனால், அதனை நிகழ்த்திக் காட்டியது அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரைமொழி ஆளுமைக்குச் சான்று. உண்மைக் கதாபாத்திரங்களுக்கிடையே தன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவவிட்டதன் மூலம் இதனை அவர் சாத்தியப்படுத்தியிருப்பார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில பாத்திரங்களைக் ஒவ்வொன்றாக தரிசிப்போம்.

மரணத்தைத் தழுவும் முதுமை

பனிப் பாறையில் மோதிய கப்பலைக் கடல் மெல்ல விழுங்க ஆரம்பிக்கும். அந்தப் பரபரப்பான சூழலில் ஒரு முதிய தம்பதி தங்கள் அறையில் அமைதியாகப் படுக்கையில் படுத்திருப்பர். அந்த மூதாட்டியின் விரல்கள் அவர் கணவனின் பத்து விரல்களை இறுகப் பற்றியிருக்கும். அந்த அறைக்குள் கடல் நீர் புகும். அந்த முதியவர் சிரமத்துடன் தலையைச் சற்றுத் திருப்பி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிடுவார். அவர்கள் வாழ்ந்த வாழ்வின் மொத்த திருப்தியையும் அந்த மூதாட்டியின் விழிகளை மூடிய இமைகள் வெளிப்படுத்தும். சில வினாடிகளில் அந்த அறையைக் கடல் தனதாக்கிக்கொள்ளும். சில நொடிகளே படத்தில் வரும் இந்தக் காட்சியை நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து சென்றிருக்க முடியாது. உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால், அவர்களுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தது. இருப்பினும், அவர்கள் மனிதாபிமானத்துடன் பிறரைக் காப்பாற்றும் முயற்சியில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றனர். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தன் படைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்கள் காதலுடன் தழுவியவண்ணம் மரணிப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். விபத்து பரிசளிக்கும் மரணத்தை ஏற்கும் இஸாடர் ஸ்டராஸ், இடா ஸ்டராஸ் முதுமைத் தம்பதி கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை.

கப்பல் தலைவன்

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவருக்கு எல்லா வித வாய்ப்புகளும் இருந்தன. இருப்பினும், அந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்றுத் தன்னை மாய்த்து, தன் ஆளுமையைக் கம்பீரமாக நிரூபிப்பார். கப்பல் தலைவன் எட்வர்ட் ஜான் ஸ்மித்தாக நடித்த நடிகர் பெர்நார்ட் ஹில் தோற்றத்திலும் ஜான் ஸ்மித்தை ஒத்திருப்பார். பாத்திரத் தேர்வுக்கான கேமரூனின் பொறுமையான நேர செலவுக்கு  இது ஓர் உதாரணம். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது சற்று சர்ச்சைக்குரியதாகத்தான் இன்னும் உள்ளது. படமாக்கப்பட்டது உண்மை என்று ஒரே ஒரு நபர் சொல்கிறார். உயிர் பிழைத்த சில பயணிகள் பாதுகாப்பு உடையணிந்து அவர் நீந்தியதைப் பார்த்தாகச் சொல்கிறார்கள். ஒரு சிறுவன் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்தாகச் சொல்கிறான். ஜேம்ஸ் கேமரூன் படத்துக்கு எது வலுச்சேர்க்குமோ அதை எடுத்துக்கொண்டார்.

டைட்டானிக் வடிவமைப்பாளர்

தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜேக்கைத் தேடி ரோஸும் ஓடிக்கொண்டிருப்பார். சீக்கிரமாகச் சென்று உயிர் காக்கும் படகில் ஏறிக்கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தி சிலுவையின் முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அந்த கப்டன் கதாபாத்திரம் ஆண்ட்ரூஸ். நேர்ந்த விபத்தின் தாக்கத்தை ஆய்வு செய்தபின் வடிவமைப்பில் இருக்கும் குறைபாடு காரணமாக இந்தக் கப்பல் மூழ்கியே தீரும் என்று அவர் சொல்வார். அது உண்மையில் நிகழ்ந்த சம்பவம். படத்தில் இவரது பாத்திரம் மட்டும்தான் கற்பனையிலிருந்து விலகிநின்று உண்மைக்கும் மிக அருகில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

டைட்டானிக் உரிமையாளர்

தனது கப்பலை மிகப் பெருமிதத்துடன் சிலாகித்துப் படம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் கப்பல் உரிமையாளர் புரூஸ் இசஸ்மே. விபத்து நேர்ந்தவுடன் இவர் படகில் உயிர் பிழைத்துக்கொள்வார். இவையனைத்தும் உண்மையான ஒன்றுதான். “இன்று அதிகாலை பனிப்பாறையின் மீது மோதி மிகுந்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் மூழ்கிவிட்டது என்பதை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவை பின்னர்” என்று நியூயார்க் நகரில் இருந்த தனது ஒயிட் ஸ்டார் அலுவலகத்துக்குத் தந்தி அனுப்பியிருப்பார். உயிர் பிழைத்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியில் உழன்று 1937-ம் வருடம் 74-ம் வயதில் மறைந்தார்.

தயாரிப்பாளர் தந்த நஷ்ட ஈடு

நிகழப் போகும் ஆபத்தைப் படத்தில் முதலில் வெளிப்படுத்தும் கண்கள் வில்லியம் மெஸ்மாஸ்டர் என்ற கதாபாத்திரத்தினுடையவை. கப்பலின் கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து பனிப்பாறையை முதலில் இவர்தான் பார்ப்பார். ‘பெண்கள், குழந்தைகள், முதல் வகுப்புப் பயணிகள் மட்டும் படகில் ஏறுங்கள்’ என்று கறாராகக் குரல் கொடுப்பார். பின் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிலரை ஏறிக்கொள்ள அனுமதிப்பார். இறுதியில் திமிறும் கூட்டத்தைச் சமாளிக்க வழியின்றி ஒரு நபரைச் சுட்டுக் கொல்வார். அதன் பின் அடுத்த நொடியே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு கடலில் விழுவார். அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். ஆனால், அவர் லஞ்சம் பெற்றதாகக் காண்பித்தது கற்பனை. அதற்காக அவர் குடும்பத்தாருக்குத் தயாரிப்பாளர் நஷ்ட ஈடு வழங்கியது பின்னர் நடந்தது.

அந்த இசைக் குழு

கப்பல் முழுவதும் மூழ்கும்வரை ஒரு இசைக் குழு மனதை உருக்கும் வயலின் இசையை வாசித்துக்கொண்டிருக்கும். இது உண்மையில் நிகழ்ந்த நிகழ்வு. அன்று அவர்கள் இறுதியாகப் பாடிய பாடல் ‘கடவுளுக்கு அருகில், நாங்கள்’ என்பதாகும். அந்த வாத்தியக் குழுவின் தலைவனின் உண்மைப் பெயர் வாலஸ் ஹென்றி ஹார்ட்லி. தன் வருங்கால மனைவியைப் போஸ்டனில் விட்டு விட்டு இவர் தனியாகப் பயணம் மேற்கொண்டிருப்பார். அந்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

நம் நெஞ்சில் நிலைத்த ஜோடி

ஜேக்கும் ரோஸும் கேமரூனின் மாஸ்டர் ஸ்ட்ரோக். நாயகன் நாயகியாக உலாவரும் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையானவை. எந்த உறுத்தலுமின்றி உண்மைப் பாத்திரங்களுக்கிடையே உலாவரும் இந்தக் கற்பனைப் பாத்திரங்கள் மூலமாகத்தான் அவர் படத்தை முன்னெடுத்துச் செல்வார். ஜேக் என்ற பெயரில் கப்பலில் நிலக்கரி உடைக்கும் ஒரு தொழிலாளியும் இருந்தார். படம் பார்த்த பலர் அந்தத் தொழிலாளியின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகுதான் படக் குழு இதுகுறித்து விளக்கம் வெளியிட்டது.

மூழ்காத மனிதம்

ஒரு கோர விபத்தின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்படுவதோ சோகத்தில் முடியும் காதலோ நமக்குப் புதிதல்ல. ஆனால், இந்தப் படம் பார்த்ததும் பேசியதும் உணர்த்தியதும் மனிதம் என்ற ஒன்றை மட்டும்தான். இதனால்தான் ‘டைட்டானிக்’ இனம், மொழி கடந்து உலகப் பார்வையாளர்களின் இதயங்களில் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

‘டைட்டானிக்’ படத்தின் பிரதான கதாபாத்திரங்களான ஜேக் – ரோஸைக் கற்பனையாக உருவாக்கினார் இயக்குநர் கேமரூன்.

மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை டைட்டானிக் மூழ்கிய உண்மைச் சம்பவத்துக்கு நெருக்கமானவை.

கப்பலின் கண்காணிப்புக் கோபுரத்தில் பணியாற்றும் வில்லியம் மெஸ்மாஸ்டர் கதாபாத்திரம் லஞ்சம் வாங்குவதுபோல் சித்தரித்த காரணத்துக்காக அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்கினார் கேமரூன்.

நன்றி – இந்து… mhushain@gmail.com

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers