இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வில் மாவீரர் வாரம் நினைவு கூரல் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் இன்று 21 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளது.அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.-மன்னார் நகர சபையின் 9 ஆவது அவர்வு இன்று புதன் கிழமை(21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

மாவீரர்கள் என்பவர்கள் தங்களுக்காகவும்,தமது குடும்பங்களுக்காகவும் உயிர் நீத்தவர்கள் இல்லை. எமது மண்ணுக்காகவும், எமது மக்களுக்காகவும் உயிர் நீத்தவர்கள் அந்த மாவீரர்கள். அவர்கள் மக்களையும் மண்ணையும் நேசித்தவர்கள். அவர்கள் இரவு பகல் பாராது மழை,வெயில் என்று சோராது கள முனைகளிலே போரீட்டு எமது மக்களுக்காக உயிர் நீத்தவர்கள். அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை.

மேலும் நாட்டிலே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.எமது நாட்டில் தற்போது இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். பாராளுமன்றம் ஒரு கேலிக்கூத்தாக அங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.ஒரு உயரிய சபையிலே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாமல் அங்கே அமர்வுகள் இடம் பெற்று வருகின்றது. எனினும் எமது மன்னார் நகர சபையிலே நாங்கள் எமது சபையூடாக ஈட்டப்படுகின்ற வருமானத்தை வைத்து அதனூடாக எமது மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம்.

தொடர்ச்சியாகவும் மக்களுக்கான சேவையை செய்வோம் என கூறிக்கொள்ளுகின்றேன் என தெரிவித்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.அதனைத்தொடர்ந்து நகர சபையின் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் சபையை தொடர்ந்து நடாத்திக்கொண்டு சென்ற போது சபை உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.

-சபையில் உள்ள உறுப்பினர்கள் எவரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் சபை உரையாடல்களை ஒலிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனைக்குறிய குற்றம் என தெரிவித்ததோடு, அத்து மீறி ஒலிப்பதிவு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

-இதன் போது எழுந்த நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் செல்வக்குமரன் டிலான் ஆகியோர் எழுந்து நாங்கள் சபையில் ஆற்றுகின்ற உரையை ஒலிப்பதிவு செய்ய ஏன் முடியாது என வினா எழுப்பினர். இதன் போது பதில் வழங்கிய நகர சபை தலைவர் சபை அமர்வுகளின் போது உறுப்பினர்கள் ஒலிப்பதிவு செய்ய முடியாது.அதற்கான காரணத்தை எழுத்து மூலம் வழங்க முடியும்.

இனியும் ஒலிப்பதிவு செய்தால் அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளுவோம் என தெரிவித்தார்.இதன் போது கருத்து தெரிவித்த நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் எழுத்து மூலம் தரும் வரை நாங்கள் ஒலிப்பதிவுசெய்வோம். என கூறி அமர்ந்தார்.

இதன் போது எழுந்து கருத்து தெரிவித்த நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் சபையில் ஒலிப்பதிவுசெய்தால் என்ன தண்டனையோ அதனை வழங்குங்கள்.அதனை ஏற்க நான் தயார் என கூறி அமர்ந்தார்.எனினும் சில உறுப்பினர்களுக்கும் சபையின் தலைவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கருந்து முரண்பாடு ஏற்பட்டதோடு,பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அமர்வு நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.