இலங்கை பிரதான செய்திகள்

கைப்பற்றப்பட்ட 928 கிலோ போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிப்பு

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 928 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்திச் சபை வளாகத்தில் இடம்பெற்றது. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த கப்பல் ஒன்றிலிருந்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இதன் பெறுமதி 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

காவல்துறையினரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களிடம் இருந்துவந்த சந்தேகத்திற்குத் தீர்வாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், கைப்பற்றப்படும் போதைப்பொருள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பகிரங்கமாக அழித்தொழிக்கும் முறைமையொன்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாந்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.