வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால்   இளைஞன் ஒருவர் மீது  நேற்று இரவு (15.02.19) இராணுவத்தினர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.  வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற சமயம், அங்கு நின்ற இராணுவ வீரர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதன்பின் சம்பவ இடத்திற்கு சென்ற  ஈச்சங்குளம் காவற்துறையினர்  குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் காவற்துறையினரால்  வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்  செல்லப்பட்டு  மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.