குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமைவாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வட மாகாண சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் றொசான் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
இன்று(26-04-2019) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சர்வமத குருமார்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்ற வருகிறது. காவல்துறை தலைமையகத்தின் பணிப்புக்கமைய இவ்வாறான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனத் தெரிவித்த அவர்
வடக்கு மாகாணத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பங்களிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் வருகின்ற 29 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்சம் பதற்றம் இன்றி பாடசாலைகளுக்கு சென்று தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் மகிந்த குணரட்ன,கிளிநொச்சி பொலீஸ் அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்க சர்வ மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்
#police # northernprovince #mullaitheevu #eastersundayLK
Add Comment