இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

இஸ்லாமியத் தீவிரவாதம்: நாகரிகங்களுக்கிடையிலான மோதலா? நாகரிகத்துக்குள்ளான மோதலா?

விதுர பிரபாத் முணசிங்க – கௌஷல்யா ஆரியரத்ன

முன்னுரை

நாம் இன்னும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருக்கின்றோம்.3 மனிதர்கள் என்ற வகையில் அழிவுகளின்போது உணர்ச்சிவசப்படுவது இயல்பானதொரு விடயமாக இருக்கின்றபோதிலும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற உடனடி எதிர்ச்செயற்பாடுகள் எமக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது நன்மையான பெறுபேறுகள் அல்ல என்பதற்கு எமது அண்மைக்கால வரலாறு சான்று பகர்கின்றது. சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான பத்தாண்டுகள், 1983 இல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடுமளவுக்குப் போதுமானதல்ல. உணர்ச்சிவசப்பட்டுத் தேடும் பதில்களைவிட ஆழமாகச் சிந்திப்பதனைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்ததும் அவ்வாறு புறக்கணித்துக்கொண்டு இருக்கின்றதுமான ஒரு சமூகத்துக்கு இச்சந்தர்ப்பத்தில் நாம் அதிகளவில் ஈர்க்கப்படாத அக்கடினமான செயற்பாட்டினையே முன்மொழிகின்றோம்.

அறிமுகம்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பை ISIS அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ISIS என்று நாம் கண்டது, மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படுத்தப்பட்ட, பல்வேறு மேற்கு மற்றும் ஆபிரிக்க வலய நாடுகளில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாத அமைப்பினையேயாகும். பிற்காலங்களில் ஈராக் மற்றும் சிரியா போன்ற சில மத்திய கிழக்குநாடுகளில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் கேள்விப்பட நேர்ந்த செய்திகள் எம்மை கதிகலங்கச் செய்தன. அவற்றின் சில வீடியோக்களில் காட்டப்பட்டுள்ள விடயங்கள், நாம் நாகரிகம் என்று நம்புகின்ற பல சித்தாந்தங்களைச் சவாலுக்குட்படுத்துகின்றன. ஒரு சமயத்தில், அவர்களது பிடியில் சிக்கிய

பாரியளவு ஆண்களை வரிசையாக நிற்கச்செய்து கழுத்தை வெட்டிக் கொலை செய்வதனை நாம் காண்கிறோம். மற்றுமொரு செய்தியில் அவர்களது பிடியிலிருந்து தப்பியோடிவந்த ஒரு பெண்பிள்ளை அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்படுகின்ற விதத்தினை விபரிக்கின்றது. இணையத்தளத்தினூடாக வலம் வருகின்ற மற்றுமொரு வீடியோவில் ஈராக்கின் மொசூல் நகரில் பண்டைய இடிபாடுகள் மற்றும் கலைப்படைப்புக்கள் என்பன அவர்களது பளுவான சம்மட்டித் தாக்குதலின் மூலம் இடிந்து விழுகின்றமையைக் காணலாம். இவையனைத்தும் நாங்கள் நாகரிகம் என்று கருதக்கூடிய நியமங்களுக்கு அப்பாற்பட்டதும் எம்மால் பொருண்மைக்குள் உள்ளடக்க முடியாததுமான செயற்பாடுகளாகும். 21ஆம் திகதி முதன்முறையாக இலங்கையில் நாமும் அத்தகையதோர் அனுபவத்திற்கு முகங்கொடுத்தோம். எந்தவழியில் சிந்திக்கின்றபோதிலும் எதற்காகச் செய்யப்பட்டது என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு காரணத்துக்காக அப்பாவிப் பெண்கள், மனிதர்கள், குழந்தைகள் கொலை செய்யப்பட்டமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அன்று நாம் தொலைக்காட்சித் திரைகளில் கண்ட அத்தகைய மிலேச்சத்தனம் இன்று எமது அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது. உண்மையில் எமது வாழ்வின் அடிப்படையாக விளங்குவதாக எம்மால் நம்பப்படுகின்ற தார்மீகக் கோட்பாடுகள் இத்தனை இழிவான முறையில் மீறப்படுகின்றதோர் உலகம் எம் மத்தியில் தோற்றம் பெற்றுக்கொண்டிருப்பது எவ்வாறு? இதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

இக்கேள்விக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரபல்யம் வாய்ந்ததும் எளிமையானதுமான ஒரு பதில் உள்ளது. அது யாதெனில், நாம் வாழ்கின்ற நாகரிகத்தைவிட வேறுபட்டதொரு கோட்பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்ட நாகரிகமடைந்த ஒரு குழுவினுடைய செயற்பாடுகள் என்பதாகும். உண்மையில் இது ஆறுதலளிக்கக்கூடியதொரு பதிலாகும். அவர்கள் நம்மைப் போன்றவர்களல்லர் என்பதைத் தெரிந்துகொள்வதே சிறந்ததோர் ஆறுதலாகும். இன்னொரு வகையில் அந்த இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் எங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அதன் மூலம் வழி ஏற்படுகின்றது. இப்போது எமது முஸ்லிம் அயலவர்கள் அந்த வெளிநாட்டு நாகரிகத்தின் பங்காளியாக மாறுகின்றனர். தற்போது அவர்களது ஆடை அணிகலன்கள், நடைப்பாங்குகள், வாழ்வியல் முறைமைகள், சடங்கு விதிகள் ஆகிய அனைத்தும் எம்முடையதல்லாத நாகரிகமாக, அதாவது அநாகரிகமாகக் கருதி நீக்கப்பட்டு வருகின்றது. ‘அடுத்த ஜென்மத்தில் மிருகமாகப்பிறப்பினும் பரவாயில்லை முஸ்லிமாக மட்டும் பிறந்து விட வேண்டாம்.’ என்று கூறப்பட்ட போஸ்ட் ஒன்று முகப்புத்தகத்தில் பிரபலமாக வலம் வந்துகொண்டிருந்தது. தற்போது முஸ்லிமல்லாத முகப்புத்தக சமுதாயத்தின் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளவாறு, முஸ்லிம்கள் தமது பிள்ளைகளுடன் தம்மை வெடிக்கச்செய்துகொள்வது மரணத்துக்குப் பின்னர் சுவனத்தில் எழுபத்திரெண்டு கன்னியர்களுடன் பாலியல் இன்பம் அனுபவிக்கும் நோக்கத்திலாகும். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் எமக்கு மறந்துபோயுள்ள விடயம் யாதெனில், இந்த முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது சமூகத்தில் எம்முள் வாழ்ந்தவர்கள் என்பதாகும். அக்காலத்தில் அவர்கள் தொடர்பில் இவ்வாறானதொரு சிக்கல் எங்களுக்குக் காணப்படவில்லை. திடீரென அவர்கள் எமது நாகரிகத்திலிருந்து தூரமாகியவர்களாக மாறியது எவ்வாறு? அவ்வாறெனின் நாம் பல நூற்றாண்டுகளாக அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தது எவ்வாறு? அவ்வாறின்றேல் இந்தக் கதை புதிதாகத் தோன்றியதா? அவ்வாறாயின் அக்கதை யாருடைய தயாரிப்பு? அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் தேவைப்பாடுகள் மற்றும் வரலாற்று நிலைமைகள் என்ன?
அத்தகைய கதைகளை வரவேற்பதனூடாக நாம் அடைந்துகொள்ளும் நன்மைகள்ஃ தீமைகள் எவை? அது யாரேனும் ஒருவரால் உருவாக்கப்பட்டதொரு கதையாக இருப்பின் 21ஆம் திகதி உண்மையில் நிகழ்ந்தது என்ன? அவர்கள் உண்மையில் நாகரிகம் என்ற வகையில் நிலையான உலகில் யாரேனும் ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாத மிலேச்சத்தனமான செயற்பாட்டில் ஈடுபடவில்லையா?

மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளை எழுப்புகின்ற கருத்தாடல் ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். இந்த அதிர்ச்சிகரமான சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொன்றைச் சிந்திப்பதுகூட சங்கடமாக உள்ளது. இருப்பினும், எம்மூடாக அவ்வாறானதொரு கருத்தாடல் துவங்கப்படவேண்டியிருப்பது எம் முன்னிலையில் வெளிக்கொணரப்படவிருக்கும் புதிய யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கு அக்கருத்தாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதனாலாகும். எனவே, சிரமத்துடனேனும் இச்சந்தர்ப்பத்தில் தூரமானதாகக் கருதப்படும் குறுகிய கலந்துரையாடல் ஒன்றினூடாக இக்கருத்தாடலை ஆரம்பிப்போம்.

நாகரிகங்களுக்கிடையிலான மோதல்

நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான கருத்து முதன்முறையாக 1993 காலப்பகுதியில் சாமுவேல் ஹங்டிங்டன் என்பவரால் ‘Foreign Affairs’ என்ற இதழுக்காக எமுதப்பட்ட“The Clash of Civilization”  என்ற ஆக்கத்திலேயே முன்வைக்கப்பட்டது. பின்னர், அவரால் அவ்வாக்கம் புத்தகமாக மெருகூட்டப்பட்டு 1996 இல் வெளியிடப்பட்டது. ‘உலக அரசியல் புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது’ என்று கூறியே அவர் தனது ஆக்கத்தை ஆரம்பிக்கின்றார். அவரால் இந்த வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது பனிப்போர் முடிவுக்கு வந்த சந்தர்ப்பமொன்றிலாகும். 1991 இல் அவருடைய மாணவராகவிருந்த பிரான்சிஸ் புகுயாமா தனது The End of History and The Last Man என்ற நூலைப் பிரசுரித்ததன் மூலம் வரலாறு நிறைவுபெற்றுள்ளதாகக் கருத்து வெளிப்படுத்தியுள்ளார். பனிப்போர் இடம் பெற்ற காலப்பகுதியில் உலகத்தில் மோதலானது கருத்தியல் ரீதியிலான இரு வேறுபட்ட தலைமையகங்களுக்கிடைலேயே இடம்பெற்றது. ஹங்டிங்டன் தனது நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையினை முன்வைப்பது இந்த மோதல் நிறைவு பெற்றதொரு சந்தர்ப்பத்திலாகும். அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

‘இந்த நவீன உலகில் மோதலினுடைய தோற்றுவாய் கருத்தியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பது எனது கருதுகோளாகும். (இந்த யுகத்தில்) மனித இனத்துக்கிடையில் சக்தி வாய்ந்ததொரு பிரிவினையை ஏற்படுத்துவதும் மோதல்களுக்கான பிரதான மூலகாரணியாக விளங்குவதும் கலாசாரமாகும்…. நாகரீகங்களுக்கிடையிலான மோதல் உலக அரசியலில் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.’ (ஹங்டிங்டன் 1993: 22)
அவர் உலகத்தை ஒன்பது நாகரிகங்களாகப் பிரித்துக் காட்டியுள்ளார்.4

மேற்குலக- பழைமைவாத- இஸ்லாமிய- ஆபிரிக்க- லத்தீன் அமெரிக்க- சீன- இந்து- பௌத்த- ஜப்பானிய நாகரிகங்களே அவை.

பிரதானமான அரசியல் மோதல் தோற்றம் பெறுவது மேற்குலக மற்றும் மேற்குலகல்லாத நாகரிகங்களுக்கிடையிலேயே என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இஸ்லாமிய நாகரிகத்தை ஏனைய நாகரிகங்களைவிட எதிர்மறையானதொரு மனப்பாங்குடன் கலந்துரையாடுகின்றார்.

அவரது முன்வைப்பின்படி மேலைத்தேயம் தனியானதொரு நாகரிகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, கனடா, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா மற்றும் ஓசனியா ஆகியன மேலைத்தேய நாகரிகத்துக்குட்பட்ட நாடுகளாகும். இந்த நாகரிகம் கிறிஸ்தவம், அறிவொளிக்காலம், கைத்தொழில்மயமாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் என்பவற்றினூடாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த மேலைத்தேய நாகரிகத்துக்கு முழுமையாக மாற்றமான நாகரிகமாக இஸ்லாமிய நாகரிகத்தை அவர்கள் நோக்குகின்றனர். பேர்னாட் லெவிஸ் என்பவருக்கேற்ப ஹங்டிங்டன் கருதுவதாவது அடுத்துவருகின்ற உலக ஒழுங்குக்கான போர் ஏற்பட்டிருப்பது மேலைத்தேய நாகரிகம் மற்றும் இஸ்லாமிய நாகரிகம் என்பவற்றுக்கிடையிலாகும். இந்த மோதலை சிலுவைப்போர் காலகட்டம் வரையில் பரவலடைந்த 1300 வருடங்களுக்கு மேற்பட்ட காலங்கள் பழைமை வாய்ந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

‘இது நாகரிகங்களுக்கிடையிலான மோதலன்றி வேறெதுவுமில்லை… இது யாதெனில் எமது பண்டைய போட்டித்தன்மையான யூத-கிறிஸ்தவப் பாரம்பரியத்துக்கும், எமது மதச்சார்பற்ற நிகழ்காலத்திற்கும், அத்துடன் அவையிரண்டினதும் உலக பரிமாணப் பரவலுக்கும் எதிரான எதிர்வினையாகும்.’ (லெவிஸ் 1992: 28)

இங்கு உருப்பெறுகின்ற ஆய்வுக் கட்டுரைக்கேற்ப மேலைத்தேய நாடுகள் அனைத்தும் இத்தகைய கிறிஸ்தவ கடந்தகாலப் பாரம்பரியம், நவீனத்துவம், அறிவொளிக்காலம், கைத்தொழில் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. நாகரிகங்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்படுவது அதன் குணாம்சங்களைத் தாங்கியுள்ளவரும் அதன் பாதுகாவலருமாகிய மேலைத்தேய மற்றும் இஸ்லாமிய நாகரிகங்களுக்கிடையிலெனின் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் மேலைத்தேய நாடுகள் கொண்டுள்ள மேலைத்தேயப் பெறுமதிக்கு எதிரான கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதும் நிலை ஏற்படுகின்றது. இந்த ஆய்வுக்கட்டுரைக்கேற்ப தமது நம்பிக்கைக்கு ஒத்துப்போகாதவர்களை கீழ்த்தரமான முறையில் கொலை செய்தல், தமது சமயத்தின் குறிக்கோளுக்குப் புறம்பான கலைப்படைப்புக்கள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களை அழித்தல் ஆகிய செயற்பாடுகளை நாகரிகங்களுக்கிடையிலான மோதல் என்ற கருத்துருவாக்கத்தில் அமைத்துக்கொள்ள முடியும். ஆயினும் இந்தக் கருத்துருவாக்கத்தில் காணப்படுகின்ற அரசியல் நம்மால் புறக்கணிக்கப்படக் கூடாது.

முடிவுறாத பனிப்போர்

ஹங்டிங்டனுடைய ஆய்வுக்கட்டுரை பனிப்போருடைய நிறைவுடன் கட்டியெழுப்பப்படுகின்ற நவீன உலக அரசியலுக்குள்ளான மோதல்களின் இயல்பு எத்தகையதாகவிருக்கும் என்ற பிரச்சினைக்குப் பல்வேறுபட்ட நபர்களால் வழங்கப்பட்ட பதில்களை உள்ளடக்குகின்றது. இது முடிவுறாதவொரு பனிப்போரை நம்பியதொரு உலகத்தினால் அதனைத் தொடரும் வகையில் அதேபோன்று முடிவுறாத இன்னுமொரு மோதல் தொடர்பான கருத்துருவாக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகும். எட்வட் சய்த் என்பவரின் கருத்தின்படி அது கருத்தியல் சார்ந்த யுத்தத்தின் முடிவில் மேற்குலகினால் பனிப்போர் முழுவதிலும் பராமரிக்கப்பட்ட மேற்கத்தேய மீயுயர் தன்மையை மீண்டும் வேறுபட்டதொரு முறையில் நிலைநிறுத்தும் பொருட்டு வித்தியாசமானதொரு மோதலை மீளுருவாக்கம் செய்வதாகும்.5 இதன் மூலம் மீண்டும் மேற்கத்தேய மீயுயர் தன்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதுடன், மேலைத்தேய அரசியல் செயற்பாடுகளை நியாயத்துவப்படுத்தவதற்கான வாய்ப்பும் மீண்டுமொரு முறை கிட்டுகின்றது. ஹங்டிங்டனுடைய ஆய்வுக்கட்டுரையின் முடிவில் அவரால் மேற்கத்தேய மீயுயர் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் மேலைத்தேயத்தினால் பின்பற்றப்படவேண்டிய அரசியல்சார் வியூகங்கள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதானது அதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

‘….அவர்களும் சுயாதீன சம்பிரதாய பண்பாடுகள் மற்றும் விழுமியங்களுடன் நவீனத்துவத்தை இணைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். மேற்குலகுக்கு ஒப்பான வகையில் அவர்களது பொருளாதார மற்றும் இராணுவ இயலுமைகள் விருத்தியடைந்துள்ளன. அதனால் சுயாதீனமான அதிகாரச் செயற்றிட்டங்கள் மேலைத்தேயத்துடன் ஒத்துப்போயுள்ளதாக அமைகின்றன. இருப்பினும், அதன் பெறுமானங்கள் மேற்குலகைவிட பாரியளவு மாற்றங்களைக்கொண்டதும் மேற்கத்தேயமல்லாததுமான நவீன நாகரிகங்களுடன் மேற்குலகு இணைந்து செயலாற்றவேண்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நாகரிகங்கள் தொடர்பில் தமது விருப்பங்களை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு மேற்குலகினால் அவர்களது பொருளாதார மற்றும் இராணுவப் பலத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கின்றது.’ (ஹங்டிங்டன் 1993:49)

எட்வர்ட் சய்த்தின் கருத்துக்கேற்ப, இங்கு பரிந்துரை செய்யப்படுவது வேரொரு வகையில் பனிப்போரை மீண்டும் கொண்டு நடாத்துவதாகும். அதனூடாகப் பனிப்போர் காலத்தில்போன்று மேற்குலகினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் நன்மைகளில் பாதுகாவலனாக நிற்றல் என்பனவற்றில் மேற்கத்தேயம் முன்னிற்பது நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஹங்டிங்டன் கருத்தாக்கம் செய்கின்ற மேற்குலகம் மற்றும் உண்மையிலேயே நிலைபெற்றுள்ள மேற்குலகம் ஆகிய இரண்டுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்று காணப்படுகின்றது. இவர் மேற்கத்தேய நாகரிகத்துக்குரியதாகக் கருதுகின்ற புவிசார் அரசியல் அலகுகளுக்குள் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய அளவுக்கு இஸ்லாமியப் பண்பாடு உள்ளடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக அவரால் மேற்கத்தேயம் மற்றும் மத்திய ஐரோப்பா ஆகியன மேற்கத்தேய நாகரிகத்துக்குரிய பிராந்தியமாக வகைப்படுத்தப்படும்போது ஜேர்மனில் உள்ள பாரியளவு துருக்கி மற்றும் பாகிஸ்தான் குடித்தொகை, பிரான்சில் உள்ள அதிகளவு வடஆபிரிக்கக் குடித்தொகை, சுவீடன் அல்லது சுவிட்ஸர்லாந்தில் முஸ்லிம் குடித்தொகை என்பன புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு வகையில் முதிர்ச்சியடைந்த, நவீன, கிறிஸ்தவ நாகரிகத்தின் கேந்திர மையத்தில் அமைந்துள்ள நாடுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள நாகரிகத்துக்கு எவ்வகையிலும் பொருந்தாத செயற்பாடுகளை அவர் புறக்கணிக்கின்றார். இது பற்றிப்பேசியுள்ள தலால் அஸாத் கூறுவது யாதெனில், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியை உள்ளடக்குதல் தொடர்பான கருத்தாடலில் முன்வைக்கப்பட்ட வாதமே ஐரோப்பிய நாடுகள் தொடர்பில் உள்ளடக்கப்படமாட்டாது என்பதாகும். அதாவது அதன் வேர்கள் ஆசியாவுடையதாக அமைந்துள்ள துருக்கியினரை ஐரோப்பாவுக்குள் உள்ளடக்குவதனூடாக ஐரோப்பிய நிலை குலைக்கப்படும் என்று கூறப்படுகின்றபோது இரண்டாவது உலகமகா யுத்தத்தில் பாரிய இனப்படுகொலைகளை மேற்கொண்ட நாசி கட்சியினுடைய நாடாகிய ஜேர்மனி ஐரோப்பாவுக்குள் அமைந்துள்ளமை அதன் ஐரோப்பிய நிலைக்கு சிக்கலாகக் கருதப்படுவதில்லை என்பதாகும். (அஸாத் 2003: 161- 162). இன்னொரு வகையில் நாசி கட்சியினரூடாக பாரிய யூத இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அது ஆரிய மற்றும் யூத நாகரிகங்களுக்கிடையிலான மோதலாக எவராலும் வடிவமைக்கப்படவில்லை. மேற்கத்தேய நாகரிகத்துக்குள்ளான மோதல், நவீனத்துவ மோதல், மேன்மைத்துவத்துக்கான மோதல் என்னும் வகைகளிலேயே அது புரி;ந்துகொள்ளப்பட்டது. அவர்களது ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்குக் காலனித்துவங்களின்போது மேற்கத்தேய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப் படுகொலைகள் அவர்களை மேற்கத்தேய நாகரிகத்துக்குள் உள்வாங்குவதற்கு சிக்கலாக இருக்கவில்லை. ஆயினும், துருக்கி, ஆர்மேனியாவில் மேற்கொண்ட படுகொலைகள் அவர்களை ஐரோப்பாவுக்குள் உள்வாங்கும்போது அவர்களது ஐரோப்பிய நிலையினைக் கேள்விக்குறியாக்குகின்ற ஒரு காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனூடாகத் தென்படுகின்ற விடயம் யாதெனில், இந்த மேற்குலகினை, முஸ்லிம் அல்லது ஏனைய நாகரிகங்களிலிருந்து பாகுபடுத்தி முன்வைத்தல் தெளிவான அரசியல் பாகுபாடுகளாகும் என்பதாகும்.

வகுப்பாக்கம் என்பது அப்பாவித்தனமானதல்ல

நாம் நன்கு அறிந்துள்ளவாறு ஹங்டிங்டன், நாகரிகமென மாறாநிலை உருப்படிவத்திலான வகுப்பாக்கத்தை மேற்கொண்டுள்ள பிராந்தியங்களில் எத்தனையோ பன்மைத்துவங்கள், சிக்கல் தன்மைகள் மற்றும் பிரிவுகள் நிலவுகின்றன. பேர்லின் பிரதேசத்தில், டர்பன் அல்லது ஒஸ்லோ பிரதேசத்தில் பாரியளவில் மக்கள் பங்களிப்புடன் நடாத்தப்படுகின்ற இந்து மற்றும் இஸ்லாம் சமய வைபவங்கள் மற்றும் ஊர்வலங்கள் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது? மேற்குலக நாகரிகத்துக்கு உரித்தானதாகக் கூறப்படுகின்ற மத்திய ஐரோப்பிய நாடுகள் (ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து மற்றும் குரோஷியா) அந்த நாடுகளில் ஐரோப்பிய நிலையினைக்

கேள்விக்குறியாக்கி செயல்படுத்தியிருப்பது பண்பாட்டுக் காரணமொன்றின் பேரிலா? முற்றுமுழுதாக இஸ்லாத்தில் அதிகளவு ஆன்மீக அறிவு கொண்ட வடிவமைப்பாகிய சூபி இஸ்லாம் இன்று மேற்கத்தேயர்களினால் மாறாநிலை உருப்படிவத்திலான இஸ்லாத்தினைவிட பௌத்த மெய்யியலுடன் நெருக்கமானது என்று ஒருவரால் விவாதிக்க முடியாதா?

எம்மைப் பற்றியே ஹங்டிங்டனுடைய வகுப்பாக்கத்திலிருந்து எடுத்துக்காட்டொன்றை எடுப்போமாயின் அது எவ்வளவு யதார்த்தமற்றது என்பதனை அது பிரதிபலிக்கின்றது. அவர் பௌத்த நாகரிகம் என்ற வகுப்பாக்கத்திற்குள்ளேயே இலங்கையை வைத்து நோக்குகின்றார். அவர் இதற்குள் உள்ளடக்குகின்ற ஏனைய நாடுகளாவன பூட்டான், காம்போடியா, மியன்மார், மொங்கோலியா மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும். ஒரு வகையில் இலங்கை இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருப்பதுடன் இன்னொரு வகையில் மேற்குலகுடன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளது. அது மொங்கோலியாவுடன் அல்லது பூட்டானுடன் பரிமாறிக்கொள்கின்ற பண்பாடுசார் பொதுத் தன்மையொன்று காணப்படுமாயின், அது குறைந்தளவிலான காரணங்கள் தொடர்பானதாக மாத்திரமே இருக்க முடியும்.

அதனடிப்படையில் இஸ்லாம் வேறுபட்டதொரு நாகரிகமாக மாறாநிலை உருப்படிவத்தில் மேற்குலகுடன் நாகரிக மோதலொன்றில் ஈடுபடுவதாக உருவமைக்கப்படுகின்ற ஆய்வுக்கட்டுரை எவ்வளவு பலவீனமானதொன்று என்பது தெளிவாகின்றது. அது மேற்குலக அறிவியல் கருத்தாடல்களில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு மேற்கத்தேய வெகுசன ஊடகமும் நேரடியாக நிகழ்காலISIS அல்லது வேறொரு இஸ்லாமியத் தீவிரவாதமொன்றை நாகரிகங்களுக்கிடையிலான மோதலொன்றாக வெளிப்படையாக வெளிப்படுத்த மாட்டார்கள். ஆயினும் ஹங்டிங்டன் என்பவர் ஐக்கிய அமெரிக்கக் குடியரசினுடைய அரச திணைக்கள ஆலோசகராவார். அவர் வியட்னாம் யுத்தத்திலும், பனிப்போர் காலம் மற்றும் பனிப்போருக்குப் பிந்திய காலத்திலும் அரச திணைக்களத்துக்கான மூலோபாய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான அவரது கருத்துருவாக்கமானது முதன்முறையாக அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய Foreign Affairs என்ற சஞ்சிகையிலேயே பிரசுரிக்கப்பட்டது. இதன்படி ஹங்டிங்டனுடைய சிந்தனைகள் நடைமுறையில் எந்தளவுக்குச் செல்வாக்குப் பெறுகின்றன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஹங்டிங்டனுடைய நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான எண்ணக்கரு கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு பலவீனமடைந்துள்ளபோதிலும் அதிகார அரசியலுக்குள் அது மென்மேலும் வலுப்பெற்றதொரு கருத்தியலாகக் காணப்படுகின்றது. நடுநிலையானவை என்று கருதப்படுகின்ற மேலைத்தேய வெகுசன ஊடகங்கள்கூட அதனைத் தமது பயன்பாட்டினுள் வெளிப்படுத்தாது அந்த மனப்பாங்குகளைப் பிரதிபலிக்கின்றன. இன்னொரு வகையில் அதனை நாகரிக மோதலாகப் பிரதிபலிப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் ஆவலாக உள்ளனர். அது, இந்த இஸ்லாமிய நாகரிகம் என்ற மாறாநிலை உருப்படிவத்தினுள் பாரியதொரு பன்மைத்துவம் மற்றும் உள்ளக முரண்பாடுகளுடன் காணப்படுகின்ற இஸ்லாமிய உலகின் ஏக பிரதிநிதியாகத் தங்களைப் பிரதிபலிப்பதற்கு அதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகின்றமையினாலாகும். இலங்கையிலும் மேற்கத்தேய எதிர்ப்புவாத அரசியல் சிந்தனைகளைத் தாங்கியுள்ள அதிகளவானோர் இந்த மேற்கத்தேய மூலோபாயக் கருத்தாக்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முரண்பாடான வகையில் அவர்களும் நவீனத்துக்கு விரோதமான, அறிவுஞானத்துக்கு விரோதமான மற்றும் மதச் சார்பின்மைக்கு விரோதமான (கழுத்தை வெட்டுகின்ற, பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, கல்வி மற்றும் கலையினைப் பகிஷ்கரிக்கின்ற) நாகரிகத்திற்கு உரித்தான மாறாநிலை உருப்படிவத்திலான குழுவினர் என்ற நோக்கிலேயே முஸ்லிம்களைப் பார்க்கின்றனர். ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பிற்பாடு பிரபல மட்டத்தில் கருத்தாடப்பட்டவையும் இவ்விடயங்களே ஆகும். அதற்கு முன்னர் 2014 ஜூன் மாதத்தில் அளுத்கம நகரிலும், 2018 மார்ச் மாதம் திகன பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு மிகவும் சமீப காலகட்டங்களில் இந்தக் கலந்துரையாடல்களே தீவிரமான முறையில் அரங்கத்துக்கு வந்தமையை இங்கு நினைவுகூர்தல் சாலச் சிறந்ததாகும். தற்போது தீவிரவாத மிலேச்சத்தனமான சிறு பகுதியினர், ஒட்டுமொத்த இஸ்லாமிய நாகரிகமொன்றின் குணவியல்பாக மாறாநிலை உருப்படிவமாக்கி மேற்கத்தேய கதைகளினை, அதனை மெருகூட்டுகின்ற மேற்கத்தேய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற நபர்கள்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்னொரு வகையில் பாரியளவிலான வேறுபாடுகளைக்கொண்ட ஒட்டுமொத்த இஸ்லாமிய நாகரிகத்தைத் தமது தீவிரவாதமாக மாறாநிலை உருப்படிவமாக்கல் மூலம் சொற்பளவிலான தீவிரவாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகின்றது.

நாகரிகங்களுக்கிடையிலான மோதலுக்குப் பதிலாக நாகரிகத்துக்குள்ளான மோதல்

தாரிக் ரமழான் குறிப்பிடுகின்றவாறு இஸ்லாம் என்பது பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட உருவகமாகும் (Entity). எடுத்துக்காட்டாக இன்று மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் ‘ஷரீஆ’, ‘ஜிஹாத்’ போன்ற கருத்தியல்கள் தொடர்பான பொருள்விளக்கங்கள் பல காணப்படுகின்றன. ‘ஷரீஆ’ என்ற சொல்லைக் கேட்டவுடன் இஸ்லாமிய சட்டம் என்றே நாம் விளங்கிக்கொள்கின்றோம். ஆயினும் ரமழான் குறிப்பிடும் வகையில் ஷரீஆ என்கிற கருத்தியலின் இதயமாக விளங்குவது சூபித்துவ இஸ்லாமிய ஆன்மீக சம்பிரதாயமாகும். அதனுள்ளே, சமாதானத்தை நோக்கிப் பயணிக்கின்ற வழிமுறையாக அது பொருள்கொள்ளப்படுகின்றது. ஜிஹாத் எனப்படுவது தனிப்பட்ட வகையில் தனக்குள்ளும் தனது குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் இ;ச்சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்குக் காணப்படும் தடைகளுடன் போராடுவதாகும். அது புனித யுத்தம் தொடர்பான ஒன்றல்ல. தனக்குள்ளும் தன்னைச் சுற்றியும் சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஆன்மீகப் போராட்டமாகும். அது சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளவற்றை எதிர்ப்பதாகும். ஜிஹாத் என்பது அடிப்படையில் மனிதன் தன்னைத்தானே மாற்றிக்கொள்வதற்கான உள்ளார்ந்த போராட்டமாகும். ஆயினும் இன்று நமக்குத் தெரிந்திருப்பது ஷரீஆ மற்றும் ஜிஹாத் தொடர்பாக தீவிரவாதிகள் முன்வைக்கின்ற பொருள்விளக்கங்கள் மாத்திரமே ஆகும். மாறாநிலை உருப்படிவமாக்கலில் காணப்படும் அபாயமும் அதுவேயாகும்.
தீவிரவாதிகளின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் தற்போது நாம் இஸ்லாமிய நாகரிகத்துக்குப் பொதுவான ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனூடாக எமக்குத் தெரிந்துள்ள பெரும்பாலான விடயங்கள் எமது தர்க்கரீதியான அறிவுக்கு உட்படாத வகையில் திரையிடப்பட்டுள்ளது. இஸ்லாம் ஆப்கானிஸ்தானில் 70களின் நடு அரைப்பகுதியில் பனிப்போரினது மோதலில் சிக்கிக்கொண்டது வரையில் ஆசியாவில் மிகவும் சமய சார்பற்றதும் நவீன அரசொன்றினை நிலைபெறச்செய்துள்ளதென்றும் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர்களில் அதிக சதவீதத்தினர் ஆப்கான் யுவதிகள் என்பதுவும் நமது கண்களுக்குத் திரையிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அல்லது ஈரானில் இஸ்லாமியத் தீவிரவாத அரசியல் கூட்டமைப்புக்களுக்கு நூற்றுக்குப் பத்து வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருநாளும் இயலுமாகவில்லை. எகிப்து, டியூனீசியா, துருக்கி, சிரியா மற்றும் அதுபோன்ற நாடுகளிலும் பெரும்பான்மையினர் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பற்ற ஆட்சியொன்றுக்காக முன்வருகின்றவர்கள் அதிபெரும்பான்மையாக விளங்குகின்றனர். எகிப்தில் முபாரக்கினுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வீதியில் இறங்கிய மக்கள் அந்நாட்டு ஜனநாயக சனத்தொகையினரன்றி தீவிரவாதிகளல்லர். சுருக்கமாகக் சொன்னால் அதனை இயக்கமாகக் கொணர்ந்ததுகூட முஸ்லிம் சகோதரத்துவத்தினுடைய தலைவர்கள் அல்லர். இவை அனைத்தும் எம்மால் புறக்கணிக்கப்படுவது எதிர்பாராதவிதமாகவா?

அகில் பில்கிராம் கூறுவதன்படி சாதாரண அறிவுடைய எந்தவொரு நபருக்கும் தென்படவேண்டியுள்ள விடயம் யாதெனில், முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் தீவிரவாதத்தைக் கொண்டவர்களல்லர் என்பதாகும். அவர்கள் அதிகளவில் தமது மதத்துக்கு பக்தியாளர்களாக இருக்கும் வேளையில்கூட தமது சமயக் கொள்கைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்ற முழுமையானதொரு வாதத்தினை வேரூன்றவில்லை. தமது மதத்தின் பெயரில் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான எழுச்சி அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. சவூதி அரேபியாவிலோ அல்லது ஈரானிலோ சமூக அழுத்தத்தைப் பிரயோகித்த ஆட்சியாளர்களினால் தம் மீது விதிக்கப்பட்ட கடினமான இஸ்லாமிய சித்தாந்தங்களின்பால் அந்நாட்டுமக்கள் சார்ந்துள்ளனர் என்று கூறுவதற்கு ஆதாரமேதுமில்லை.

‘எனது கண்ணோட்டத்தின்படி மோதல் காணப்படுவது இந்த முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற பெறுமானங்களுக்கும் அவர்களைவிட மிகச்சொற்ப அளவினராகிய இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையிலாகும்…… அதனால் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இந்த மோதலை மதச்சார்பற்றோருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் ஒன்றாகவே நான் காண்கிறேன். (பில்கிராம் 2011).’

பில்கிராம் குறிப்பிடுவதன்படி, பெரும்பான்மையினரான சாதாரண முஸ்லிம்களின் குரல்கள் அடக்கப்பட்டு அது இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எப்போதும் பிரபல்யத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது. அவர் குறிப்பிடுவதன் பிரகாரம், சமகாலத்தில் மதச்சார்பின்மை என்பது சமயப்பற்றுள்ள அல்லது சமயப்பற்றில்லாத சகல குடிமக்களுக்கும் சமயக் கோட்பாடுகளினதும் நடைமுறைகளினதும் அடிப்படையில் அமையாத ஆட்சி ஒன்றினுள் சமாதானமாக வாழ்வதற்கான புரிந்துணர்வு தொடர்பாகவுள்ள அரசியல் கோட்பாடாகும். அதிக பெரும்பான்மையான முஸ்லிம்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்புகின்றனர்.

எனினும், மேற்குலகு அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் மாறாநிலை உருப்படிவத்திலான இஸ்லாமிய நாகரிகமாக ஒன்றுபடுத்தி, நவீனத்துவம், அறிவுஞானம் மற்றும் மதச்சார்பின்மை என்பவற்றுக்கு விரோதமான சமயத் தீவிரவாதிகளாக அதன் அனைத்து மக்களையும் எண்ணுவதற்கு எம்மைத் தூண்டியுள்ளது. எட்வர்ட் சயித் எடுத்துக் காட்டுகின்ற வகையில், அதன்மூலம் தமக்கு சாதகமான சில இஸ்லாமிய நாடுகளின் ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது மோசமான ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கத்தேய நாடுகள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளன.6 அது, அவர்கள் கூறுவதன்படி மேற்கத்தேய நாகரிகத்தின் அம்சங்களாக அவர்கள் பெயர்குறிப்பிடுகின்ற நவீனத்துவத்தினதும் அறிவுஞானத்தினதும் மதச்சார்பின்மையினதும் பாதுகாவலர்களாக இந்த ஆட்சியாளர்கள் தோன்றி நிற்பதன் காரணத்தினாலாகும். இவ்வாறு பனிப்போர் மேற்கத்தேய அதிகாரச் செயற்றிட்டத்தினை மீண்டும் வேறொரு தோற்றத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய அமெரிக்கக் குடியரசை முதன்மைப்படுத்திய மேற்குலக ஆட்சியாளர்களுக்கு முடியுமாகியுள்ளது. பனிப்போரில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாகத் தோன்றிய, தங்களுக்குச் சார்பான ஊழல் நிறைந்த லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய ஆட்சியாளர்களைப் பாதுகாத்த அதே வாதத்தையே பிரயோகித்து நவீனத்துவ ஆட்சியாளர்களாகத் தோன்றியுள்ள இஸ்லாமிய நாடுகளில் தங்களுக்குச் சார்பான ஊழல்மிக்க ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உண்மையான மோதல் காணப்படுவது இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இத்தகைய நடுநிலையானதும், நவீனத்துவம் கொண்டதும், அறிவுமிக்கதுமான பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் இடையிலாகும். இது நாகரிகங்களுக்கிடையிலான மோதல் அல்ல, இது நாகரிகத்துக்குள்ளான மோதலாகும். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் என்ற போலியான முகத்திரை இல்லாதவிடத்து அதன் அமைதியான பெரும்பான்மையினருக்கு இதனைவிட சகோதரத்துவமிக்க ஆதரவு உலகத்தின் ஏனைய பிராந்தியங்களின் நவீனத்துவ மதச்சார்பற்ற சக்திகளினூடாக கிடைத்திருக்கும். ஆயினும் மதச்சார்பின்மைக்கு விரோதமான, நவீனத்துவத்துக்கு விரோதமான பிராந்தியமொன்றாக அல்லது நாகரிகமொன்றாக இஸ்லாமிய நாடுகள் வகுப்பாக்கம் செய்யப்பட்டிருப்பதன் ஊடாக அது தடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டுக்குள்ளும் மேற்கத்தேய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பெரும்பான்மைக் குழுவினரூடாக முழுக்க முழுக்க மேற்கத்தேய எண்ணக்கருக்களே விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் தீவிரவாதிகளல்லாத முஸ்லிம் மக்களது பிரச்சினை காது கொடுத்துக் கேட்கப்படாமலுள்ளது. நாம் இன்று இஸ்லாம் என்று கருதுவது தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களாகக் கூறப்படுகின்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் போன்ற தீவிரவாதிகள் வழிபடுகின்ற மதத்தை ஆகும். உண்மையில் மோதல் காணப்படுவது தீவிரவாதம் மற்றும் மதச்சார்பின்மை என்பவற்றுக்கிடையிலாகும். இந்த மோதலில் இஸ்லாத்தைப் போன்றே பௌத்த அல்லது வேறு ஏதேனுமொரு மதத்தைச் சேர்ந்த தீவிரவாதியும் அதே குழுவுக்குள்தான் உள்ளடக்கப்படுகின்றான். அதனால் எமது நிகழ்கால நடைமுறையினை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கெதிராக ‘ஏதேனும் செய்வதற்கு’ (இங்கு நாம் கூற முற்படுவது முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினை அழித்தொழிப்பதற்கு அரசால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை அல்ல. மாறாக, நமது அண்டை முஸ்லிம் சமுதாயத்திடம் வன்முறையைக் கட்டவிழ்ப்பதற்காக வழங்கப்படுகின்ற ஆலோசனைகளையே ஆகும்) எமக்கு அழைப்புவிடுக்கின்ற யாராக இருப்பினும் அவர்களும் அறிந்தோ அறியாமலோ இருப்பது இவ்வாறான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நிலையில்தான்.

முடிவுரை

இந்தக் கடினமான நேரத்தில் எமது பொறுப்பு யாதெனில் தீவிரவாதியல்லாத பெரும்பான்மை முஸ்லிம் மக்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதாகும். எம்முடன் பல நூற்றாண்டுகளாக பொதுத் தன்மையொன்றினைப் பகிர்ந்து வாழ்ந்தவர்கள் இந்தப் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தினரே. எம்மை வேறுபட்ட நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்கள் எம்மை வேறுபட்டவர்களாக ஆக்கியிருப்பது யாதேனுமொரு குறிப்பிட்ட அறிவியல் அமைப்பின் அடிப்படையிலாகும். அறிவுருவாக்கம் என்பது அப்பாவித்தனமான செயற்பாடொன்றல்ல. நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான இன்றைய எமது அறிவு நிலை மேற்கத்தேய வடிவாக்கமாக இருப்பது மட்டுமல்ல, அது குறிப்பிட்ட மேற்கத்தேய புவிசார் அரசியல் தேவைப்பாட்டின் பேரில் உருவாக்கப்பட்டதொன்றும் ஆகும். தற்கொலைக் ‘குண்டுதாரி’ தேவைப்பட்டது இந்தப் பிரிவுக் கோட்டைக் குறிப்பதற்காகும். நாம் ஒழுக்க விழுமியங்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துக் கருத்தியல்களையும் சவாலுக்குட்படுத்திய, கழுத்தை வெட்டுகின்ற, பிள்ளைகளைக் கொலை செய்கின்ற, பெண்களைப் பாலியல் அடிமைகளாக்குகின்ற மனித நாகரிகத்தின் படைப்புக்களை அழித்தொழிக்கின்ற நபர் தீவிரவாதியாக இருப்பாரேயொழிய எம்மோடு காலாகாலமாக எத்தகைய மோதல்களுமின்றி வாழ்ந்த முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள். நன்றாகச் சிந்தித்துப் பார்க்கின்றவிடத்து நமக்குப் பழக்கப்பட்ட முஸ்லிம்களுள் பெரும்பான்மையினர் தமது குடும்பத்தை, குழந்தைகளை நேசிக்கின்ற, அவர்களுக்காக மிகச்சிறந்த எதிர்காலத்தினை உருவாக்குவதற்காகப் பாடுபடுகின்ற எங்களைப் போன்ற மனிதர்களேயாவர். இஸ்லாமிய நாகரிகத்தின் சொற்பளவிலான தீவிரவாதிகளைக்கொண்ட குழுவொன்றை உருவாக்கி, அதுவே ஒட்டுமொத்தமுமானது என்று மாறாநிலை உருப்படிவமாக்கியது மேற்கூறிய குறித்துரைக்கப்பட்ட அறிவைக் கொண்டேயாகும். ஆயினும் இன்று பல நூற்றாண்டுகளாக எம்முடன் வாழ்ந்த முஸ்லிம் மக்களைப் புரிந்துகொள்வதற்கு எம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திக்கொண்டிருப்பது, இந்த மேற்கத்தேயக் கதையினையேயாகும். உண்மையில் தீவிரவாதியினுடைய எதிர்பார்ப்பும் அதுதான். இஸ்லாமிய நாகரிகத்துக்குள் இந்த புதிய தீவிரவாதத்துக்குப் பலியாகாமல் சகவாழ்வுடன் வாழ்கையைக் கொண்டுசெல்வதற்குக் கடினமான போராட்டத்தில் திளைத்துள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிப்போமாயின் நிச்சயமாக அது தீவிரவாதிக்குக் கிட்டுகின்ற வெற்றியாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் அது மேற்கத்தேய புவிசார் அரசியல் அதிகாரச் செயற்றிட்டத்தின் வெற்றியாகும்.

எனவே இச்சந்தர்ப்பத்தில் இடத்துக்கிடம் காதுகளில் விழக்கூடிய முஸ்லிம் மக்களுடைய ஆடை அணிகலன்கள், உடல் தோற்றங்கள், வாழ்க்கைப்போக்குகள், சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பாக வெறுக்கத்தக்க கருத்துக்களுக்களைக் கூறுகின்ற அல்லது இந்த ஒழுக்கமற்ற இனத்தினரைப் பழிவாங்க வேண்டும் என்றோ ஃ பாடம் புகட்ட வேண்டும் என்றோ எச்சரிக்கின்ற எந்தவொரு நபராலும் 21 ஆம் திகதி நாம் முகங்கொடுத்த பயங்கரமான யதார்தத்திலிருந்து எம்மைத் தூரக் கூட்டிச் சென்றுவிட முடியாது. அவர்கள் மூலமாக நாம் மீண்டும் மீண்டும் முகங்கொடுக்க நேர்வது அத்தகைய சம்பவங்களுக்கு மாத்திரமேயாகும். இன்று நாம் முகங்கொடுத்துள்ள சவால் யாதெனில், எம்மால் புரிந்துகொள்ள முடியாத, எமது தார்மிகப் பெறுமானங்களுக்குப் பொருந்தாத, நாகரிகமொன்றுக்கு எமது அண்டை முஸ்லிம் மக்கள் உரித்துடையவர்களெனக் கற்பிக்கப்படுகின்ற மேற்கத்தேயக் கதைகளை எமது சிந்தையிலிருந்து அகற்றுவது எவ்வாறு என்பதே ஆகும். பல நூற்றாண்டுகளாக எம்முடன் வாழ்ந்த மக்கள் தொடர்பாக மேற்குலகினர் வழங்கியுள்ள சட்டகத்தினைப் பயன்படுத்தி அவர்களை நோக்குவதனைத் தவிர்ப்பதன் மூலம், இஸ்லாமிய நாகரிகத்தில் சொற்பளவாகவுள்ள மிலேச்சத்தனமான தீவிரவாதத்துக்கு பதில் வழங்க முடியும். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் பற்றிய கதைகளைப் புறக்கணித்ததன் பிற்பாடு, ஒரேமாதிரியான சமூக நடைமுறையினை எம்முடன் பகிர்ந்துகொண்டு வாழ்கின்ற, எம்மைப் போன்றே தமது சமூகத்திலுள்ள சொற்பளவினரான தீவிரவாதிகளினால் அழுத்தங்களுக்குட்பட்டுள்ள, அவற்றுடன் போராடுகின்ற, உதவிகள் இல்லாதவிடத்து அமைதிகொள்கின்ற, அல்லது அந்த அதிகாரத்துக்கு அடங்கிப்போகின்ற பொறுமையும் அமைதியும் கொண்ட பெரும்பான்மை மக்களை நாம் சந்திக்கின்றோம். ஏப்ரல் 21ஆம் திகதி நாம் சந்தித்த மிலேச்சத்தனத்துக்கு எதிரான போராட்டமானது அவர்களும் நாமும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டிய போராட்டமாக அமைய வேண்டும். அது அவ்வாறு நிகழாதவரை, வௌ;வேறு மதங்களின் பேரிலான மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுதாரிகளினால் நம் கண்ணெதிரே நேர்கின்ற அவலங்களுக்கு நாமும் பங்காளிகளாவோமேயன்றி எமக்கு வேறெதுவும் எஞ்சப்போவதில்லை.

1 விதுர பிரபாத் முணசிங்க, ஒரு சட்டத்தரணி ஆவார். சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அறநிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

2 கௌஷல்யா ஆரியரத்ன, ஒரு சட்டத்தரணி ஆவார். கோல்ட் ஸ்மித் கல்லூரி- லண்டன் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் அத்துடன் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அறநிலையம் என்பன கூட்டாக செயற்படுத்துகின்ற ‘நவீன சமூக கற்பிதங்கள்’ (New Social Imaginaries)  திட்டத்தில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளராகக் கடமையாற்றுகிறார்.

3 இக்கட்டுரை நாட்டின் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சற்றுலாப் பிரயாண விடுதிகள் பலவற்றில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்ற 2019 ஏப்ரல் 21ஆம் திகதியைத் தொடர்ந்துவந்த சில தினங்களில் எழுதப்பட்டுள்ளது.  அத் தாக்குதல்களினால் சுமார் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேரளவில் காயமடைந்துள்ளனர்.

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2351037781800376/

4 Samuel P. Huntington 1993, “The Clash of Civilizations?”, Foreign Affairs. Summer 1993, Council for Foreign Relations: New York, p.85.

5 சயீத், எட்வர்ட் 1996> https://www.youtube.com/watch?v=aPS.pONiEG8

6 சயீத். எட்வர்ட் 1996> https://www.youtube.com/watch?v=aPS-pONiEG8

உசாத்துணைகள்

Asad, Talal 2003, Formations of the Secular: Christianity, Islam and Modernity, Stanford University Press: California.
Bilgrami, Akeel 2011, https:// www.amacad.org/publication/clash-within-civilization.
Council for Foreign Relations: New York.
Huntington, Samuel p.1996, The Clash of Civilizations and Remaking of World Order, Simon & Schuster: NewYork.
Lewis, Bernard 1993, “ The Roots of Muslim Rage”, The Atlantic Monthly,vol,266, September, 1990.
Ramadan, Tariq 2004, Western Muslims and Future of Islam, Oxford University Press: Oxford.
Said, Edward 1996, https://www.youtube.com/watch?v=aPS-pONiEG8

 

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • இஸ்லாம் அறிமுகமாகி 1400 வருடங்களாக இல்லாத புதிய இஸ்லாமிய தீவிரவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதமும் 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் திடீரென எங்கிருந்து வந்தது ? 2001 செப்டம்பர் 11 தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒரு புதியதொரு அத்தியாயத்தை துவங்கி வைக்கத்தான்.

  அமெரிக்க யூத சதித்திட்டமே அந்த தாக்குதலை நடாத்தியது என்பதை பல நூறு அமெரிக்க அறிஞர்களே உறுதிப்படுத்தி விட்டனர். அதன் பின்பு சில போலி இஸ்லாமியவாதிகளை வலைத்து போட்டுக் கொண்டு இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்பட்டு வரும் சகல தாக்குதல்களுக்கு பின்னாலும் யார் யாரெல்லாம் ஒழிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உலகம் உணற ஆரம்பித்து விட்டது.

  முஹம்மத் நபியின் காலத்தில் இடம்பெற்ற சகல யுத்தங்களிலும் கொள்ளப்பட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் 1250 மட்டுமே. கேவலம் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் மாத்திரம் 6.5 கோடு மக்களை கொன்று குவித்தவர்கள் இன்று இஸ்லாத்தின் மீது பயங்கரவாத்தை சுமத்த முயல்கின்றனர்.

  முதலாம் உலக மகா யுத்தம், வியட்நாம், யூகஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யமன் போன்ற நாடுகளுக்கு எதிரான படையெடுப்பு, ஹிரோஷிமா நாகஸாக்கி மீதான அணுகுண்டு மூலம் என எத்தனை, எத்தனை கோடி மக்களை கொன்று உலகை இரத்தக் கறையாக மாற்றியவர்கள் இஸ்லாத்தின் மீது பயங்கரவாத பழியை போட நினைப்பது வெட்க கேடாகவுள்ளது.

  04/21 தாக்குதலை ஸஹ்ரான் குழு செய்தது. அது மண்ணிக்கப்பட முடியாத குற்றமே. அவனும் இன்னும் சில மூலை சலவைக்கு உற்படுத்தப்பட்ட அப்பாவி முஸ்லிம் வாலிபர்களும் குறித்த தாக்குதலை நடாத்தினர். ஏன் நடாத்த வேண்டும் ? நோக்கம் இல்லாமல் தாக்குதல் நடாத்தி வெடித்து சிதறி உயிரை விட்டார்களா ? குறித்த சஹ்ரான் குழு தாக்குதலுக்கும் ISIS இற்கும் எந்த தொடர்பும் இல்லை என புலனாய்வுத்துறை உறுதியாக தெரிவித்துள்ளது. இங்கு யாராவது மறுத்து சொன்னால் புலனாய்வுத்துறையின் அறிக்கையுடன் அடுத்த Comment இல் வருகின்றேன்.

  சஹ்ரான் பற்றி 93 தடவை பாதுகாப்புத்துறைக்கு அறிவிக்கப்பட்டும் பாதுகாப்புத்துறை ஏன் தூங்கிக் கொண்டிருந்தது? உலகில் எங்கு யார் தாக்குதல் நடாத்தினாலும் அதற்கு ஓர் நோக்கம் இருக்கும். சஹ்ரான் குழு பொருளாதாரத்தை கொள்ளை அடிக்கவோ, நாட்டை பிடிக்கவோ, அரசாங்கத்தை கவிழ்க்கவோ வெடித்து சிதறவில்லையே. அவனது தாக்குதலுக்கு நோக்கமே இல்லை. பிறகு ஏன் தாக்குதல் நடாத்தி தானும் செத்து மடிந்தான். அவனை தயாரித்து வெடிக்க வைத்து விட்டு அதனை சாக்காக வைத்து இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பை முறித்து போடுவதே நோக்கம். இலங்கையில் தான் ஸஹ்ரான் குழுவை களம் இறக்கியவர்கள் உளளனர். முஸ்லிம்களை குறி வைத்தே அதனை செய்தனர். கேவலம் ஏன் வெடிகுண்டை வெடிக்க செய்து செத்து போனான்? நோக்கம் என்ன ? அவனது குழுவை தயார் செய்ததில் பின்னால் ஒளிந்து நிற்கும் உன்மையான சூத்திரதாரிகள் யார் என தேடாமல் (உண்மை குற்றவாளிகளை கைக்குள்ளே வைத்துக்கொண்டு) அப்பாவி முஸ்லிங்களை துன்புறுத்துகின்றனர்.

  ஒன்றை சொல்கின்றேன். தமிழர்களை ஒரு கை பார்த்து பாதாளத்தில் தள்ளி விட்டு இப்போது முஸ்லிம்களை பந்தாடுகின்றனர். போதும் எனும் அளவு முஸ்லிங்களை பந்தாடி பாதாளத்தில் தள்ளி முடித்து விட்டு மீண்டும் தமிழர்களை உரசிப்பார்க்க வருவார்கள். ஆகவே சந்தோஷமடையாதீர்கள்.

  கடவுள் நம்பிக்கையை படிப்படியாக இழந்து வரும் இன்றைய முழு உலகிற்கும் நாஸ்திகம் எனும் புதியதொரு மதம் கிடைத்துள்ளது. கடவுளை நம்பவோ தாம் சார்ந்திருக்கும் வணக்கஸ்லங்களை நாடிச் செல்லவோ, தமது மத போதனைகளை எடுத்து நடக்கவோ இன்றைய உலக மக்கள் தயாரில்லை. கடவுள் கொள்கையற்ற நாஸ்திக சிந்தனைக்கு முன் இன்றைய உலக மதங்கள் தோற்று போய் விட்டன.

  எனினும் நாஸ்திகமோ இஸ்லாத்திற்கு எதிரில் தோற்று போய் நிற்கின்றது. ஒரு நாளைக்கு 05 தடவை விகிதம் வாழ் நாள் பூராகவும் பள்ளிவாசலுக்கு செல்கின்றனர் பெரும்பாலான முஸ்லிம்கள். அதிகாலை தொழுகைக்கு 04.45- 05.00 மணிக்கு பள்ளிவாசல் செல்கின்றனர். உலக அரங்கில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ளாதவர்கள் இறுதியில் இஸ்லாம் மாத்திரமே நிலைத்து நிற்கப் போகின்றது என்ற பொறாமையினால் இஸ்லத்திற்கு எதிராக பல்வேறு சதிகளையும் செய்து தோற்றுப் போய் இறுதியாக கையில் எடுத்திருப்பதே இஸ்லாமிய பயங்கரவாதம்.

  முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தங்களை செய்து மிக பயங்ரமான மனித படுகொலையை செய்தவர்களுக்கு மதம் இருக்க வில்லையா ? ஏன் கிரிஸ்தவ பயங்கரவாதம் என சொல்வதில்லை ?
  மியன்மாரிலும், சீனாவிலும்தாய்லாந்திலும் பெளத்தர்களால் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யப்பட்ட மனித படுகொலைகளுக்கு மதம் இல்லையா ?
  ஏன் பெளத்த பயங்கரவாதம் என சொல்வதில்லை ?
  LTTE யும், ராணுவமும் மாறி மாறி அப்பாவி மக்களை கொல்லவில்லையா ? கஷ்மீரில் இந்திய அரசு செய்யும் அராஜகமும் பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்து வரும் படு மோசமான கொலைகளுக்கு மதம் இல்லையா ? ஏன் பெளத்த, இந்து, யூத பயங்கரவாதம் என கூறப்படுவதில்லை ?

  இஸ்லாத்தின் பெயரால் இடம்பெற்றால் இஸ்பலாமிய யங்கரவாத என மத சாயம் பூசுபவர்கள் ஏன் ஏனைய மதங்கள் அதே தவறுகளை செய்யும் போது அப்படி அடையாளப்படுத்துவதில்லை ?

  இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற போலி பிர்ச்சாரம் இலங்கைக்கு வேண்டுமானால் இப்போது இறக்குமதி செய்யப்பட்டுருக்கலாம். எனினும் 09/11 தாக்குதலோடு இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் விளையாட்டை ஆரம்பித்து விட்டது சதிகாரக் கும்பல்கள். இஸ்லாத்தை வாயால் ஊதிஅணைத்து விட முடியும் என எடை போடுகின்றனர்.