இலங்கை பிரதான செய்திகள்

2008 – 2015 ஆம் ஆண்டிற்குள், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் ரூபாய் நட்டம்…

2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டமை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையூடாக அம்பலமாகியுள்ளது.

அதில் 8.7 பில்லியன் முறிகள் கொடுக்கல் வாங்கல் ஊடாகவும் மேலும் 7.7 பில்லியனுக்கும் அதிகத் தொகை பங்குச்சந்தை முதலீடுகள் ஊடாகவும் ஏற்பட்ட நட்டம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையான முறைமைக்கு மாறாக முன்னெடுக்கப்பட்ட முதலீட்டினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மிகப்பெரும் நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுவதுடன், 2290 மில்லியன் ரூபா தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ளது.

நாட்டில் அரச/தனியார் கலப்பு மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிதியம், இலங்கை மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்றது.

ஊழியர் மேசலாப நிதியத்தின் முதலீடுகளில் 92 வீதம் திறைசேரி முறிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், 3.3 வீதம் பங்குச்சந்தையில் முதலிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடியைப் போன்று பங்குச்சந்தையில் இடம்பெற்ற ஊழல் மோசடியில் இந்த விசேடமான நிதியம் சிக்கியது.

2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை சர்ச்சைக்குரிய காலப்பகுதியில் இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக மாத்திரம் இந்த நிதியத்திற்கு 8716.48 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் ஆறு நிறுவனங்கள் மாத்திரம் மேற்கொண்ட முதலீடுகளால் மாத்திரம் 7,778.32 மில்லியன் ரூபா நட்டம், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் வௌிக்கொணரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வௌிக்கொணரப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்திய சில கொடுக்கல் வாங்கல்கள் வருமாறு…

Brown & Co. PLC நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீடு செய்தமையால், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 1304.24 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

Ceylon Grain Elevators PLC நிறுவன முதலீடுகளால் 651.91 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

Galadari Hotels Lanka PLC நிறுவன முதலீடுகளால் ஏற்பட்ட நட்டம் 620.62 மில்லியன் ரூபாவாகும்.

Colombo Dock Yard முதலீட்டினால் ஏற்பட்ட நட்டம் 1868.73 மில்லியன் ரூவாவாகும்.

Bukit Darah PLC நிறுவன முதலீட்டினால் 1707.18 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

Carson Cumberbatch PLC நிறுவன முதலீட்டினால் ஏற்பட்ட நட்டம் 1.6 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை, பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத நிறுவனங்களிலும், முதலீட்டுக் கொள்கைகளுக்கு முரணாக ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளமை தடயவியல் கணக்காய்வு அறிக்கையூடாக வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமைய, ஊழியர் சேமலாப நிதியத்தின் 4475 மில்லியன் ரூபா, எந்தவொரு கொள்கை ரீதியிலான வழிகாட்டல்களும் இன்றி, இவ்வாறு பட்டியலில் இல்லாத நிறுவனங்களில் 2011ஆம் ஆண்டிற்கு முன்னர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு இரண்டு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், மத்திய வங்கியின் நிதிச்சபை ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முதலீடு நிதிச்சபையினால் பின்னர் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிர்வாகியான மத்திய வங்கிக்கு வௌியேயுள்ள தரப்பொன்றிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளுக்கு அமைய, தேசிய அவசியம் எனக்கருதி ஊழியர் சேமலாப நிதியத்தினால் பெரும்பாலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் நெருக்கமாக செயற்பட்டுள்ளதாக பலரை மேற்கோள்காட்டி தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.