இலங்கை பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டைக் காவற்துறையினரின் அடாவடியை அரசாங்கம் கண்டுகொள்ளாதா?

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அயல் வீட்டாருடன் பேசியதற்காக இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நுழைந்து காவவற்துறையினர் அட்டகாசம் புரிந்ததுடன், குடும்ப தலைவரை சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.

இந்த சம்பவம் அராலி மேற்கில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முத்துராசா கண்ணதாசன் என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு வட்டுக்கோட்டைப் காவவற்துறையினரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

அது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த இளம் குடும்பத்தலைவரின் வீட்டில் இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்தவர்களும் உறவினர்களுமான இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளை வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் காவவற்துறையினர் அறுவர் திடீரென்று அவரது வீட்டுக்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வீட்டுக்குள் அழைத்து வைத்துள்ளாய் என வாக்குவாதப்பட்டனர். அதேநேரம், அங்கிருந்த இளைஞர்களுக்கு கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆள் அடையாள அட்டையைக் கேட்டனர்.

அவரது மனைவி ஆளடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், காவவற்துறையினருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி காவவற்துறையினர் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கினர்.

காவவற்துறையினரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு குருதி அளவுக்கதிகமாகப் பீறிடவே அவர் மயங்கிவிட்டார். அதனை அவதானித்த வீட்டில் இருந்த அவரது மனைவி உள்ளிட்ட பெண்கள் கூக்குரலிட்டார்.

அவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அயலவர்களை ஆண், பெண் வேறுபாடு இன்றி தகாத வார்த்தைகளால் காவவற்துறையினர் பேசி தாக்கினர்கள். தமது ஆடைகளைக் கூட காவவற்துறையினர் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

அத்துடன், அத்தனை காவவற்துறையினரும் மதுபோதையில் நின்றனர் என்றும் கூறினார்கள்.

என் கணவர் கடற்றொழில் செய்பவர்.  காவவற்துறையினர் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரை மிக மோசமாக காவவற்துறையினர் கொட்டன் தடிகளால் அடித்தனர் என தாக்குதலுக்கு இலக்கானவரின் மனைவி கூறினார்.

அதேவேளை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்ட பின்னர் அராலிப் பகுதியில் இந்திய காவவற்துறையினரின் பாணியில் வட்டுக்கோட்டைப் காவவற்துறையினர் அடாவடி செய்வதாகப் பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்களின் சைக்கிள் ரயர்களை வெட்டி எறிவது, சைக்கிள் வாற்கட்டையைப் பிடுங்கி எறிவது, சைக்கிள்களை தூக்கி வீசுவது, வீட்டு வாசலுக்கு முன் இருப்பவர்களுக்கு அடிப்பதுடன் கதிரைகளை உடைப்பது, என பொலிசாரின் அட்டகாசம் எல்லை மீறி செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.