இலக்கியம்

புவி தினம் – த.நிறோஜன்…

புவிக்கு ஒரு தினம்…
அது புவிக்கு மட்டும் தானோ?
புவி சுமக்கும் நமக்கெல்லாம் இல்லையோ?

ஆசிரியர் தினம்,
சிறுவர் தினம்,
மகளீர் தினம் என்பவையின்
முக்கியம் உணர்ந்தவர்களும்
இறந்த தினங்களுக்கு
இரத்த முகாம் கொடுப்பவர்களும்
இறந்து கொண்டே
எம் உயிர் காக்கும்
இப் புவிக்கோர் தினம்
வரும் போது
மறந்து விடுகிறார்களே!

தினங்கள் வித்திட்ட நோக்கம்
அந் நோக்கம் மறந்து போன நோக்கம்
பேரும், புகழும்
பொருளாதார தரமும் என
சுய நல லாபத்தின் மீதே
பலருக்கு ஏக்கம்.

புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
பொது நலப் புவி
கொடுக்கத்தானே போகிறது
என்றுதான் மறக்கிறார்கள்.

யார் மறந்தாலும்
புவிக்கு இந் நாட்கள்
சொர்க்கம் தான்
நரக வாசிகள் முடங்கி கிடப்பதனால்…

விளைச்சலுக்கு நல் உரம்
இடுவது போல்
கொடும் விளைவுகள்
இல்லாத நாளைக்கும்
இன்னொரு புவி நாளின்
வருகைக்கும்
நல்லெண்ணங்களை
புவி மடியில் விதைத்திடுங்கள்.

த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.

புத்தகங்கள்

அறிவை திறக்கும் வித்தகம்
அதை அடக்கியது புத்தகம்
புத்தக பூச்சியாகாதீர்கள்
நீங்களே ஒரு புத்தகமாகுங்கள்.

வாசிக்க கிடைத்த வரம் அது
வாசிப்பில்லா மனிதருக்கு பூரணம் ஏது?
சேமிக்க வேண்டிய செல்வமும்
தேட வேண்டிய பொருளும்
புத்தகமல்லவோ?

காகிதத்தில்
ஞானம் வருகிறது என்றால்
நம்புவீரோ?
புத்தக காகிதங்களில் வருகிறது
வாசித்துப்பாருங்கள்
நம்புவீர்.

கல்வி என்பது
கொடுக்கப்படும் தானம்
கல்வியை தரும்
புத்தகமே நம் ஞானம்.

எழுத்துமட்டுமல்ல புத்தகம்
எழுத்தில் சேராத
எம் பண்பாட்டு அறிவும்
புத்தகமே
அதை பயன்படுத்தும் சமூகம்
நூலகமே!

ஓய்வு நேரங்களில்
துரோகமில்லா தோழ்மையாக
தொடர வேண்டும் ஒரு புத்தகம்.

பண்பட்ட சமூகங்களின்
எதிர்கால விழுதுகளுக்காய்
பாரம்பரிய ஏடுகளை
தூசி தட்டிடுங்கள்
நடமாடும் மனித நூலகங்களை
போற்றிடுங்கள்
புத்தகங்களை புரட்டிடுங்கள்
அறிவுக் கண்களை திறந்திடுங்கள்.

த.நிறோஜன்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

கோட்டோவியம்,
இ.கிருபாகரன்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.