Home இலக்கியம் சொர்ணாளி இசைக் கருவியும் அதனுடனான பற்றுகையும்!

சொர்ணாளி இசைக் கருவியும் அதனுடனான பற்றுகையும்!

மட்டக்களப்பு கலைஞர்களுடனான நேர்காணல்.

by admin

 

இலங்கையில் தமிழ்ச் சூழலில் விசேடமாக மட்டக்களப்பில் சொர்ணாளி இசை வாத்தியம் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை இசைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ் வாத்திய இசைக் கருவியை குறிப்பிட்ட காலம் தொடக்கம் அதனை தீட்டுக்குரியதாகக் கருதி அதன் தரத்தையும் வாசிக்கும் மனிதர்களையும் புறக்கணிக்கின்ற போக்கே இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதன் மகிமையை உணர்ந்த ஒரு சிலர் சமூகக் கட்டமைப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து அதன் மேல் கொண்ட ஈர்ப்பினால் இன்று வரை இசைத்து வருகின்ற தன்மையினை காணமுடிகின்றது. அவ்வாறு செயற்படுகின்ற விளாவெட்டுவானைச் சேர்ந்த கதிர்காமம் வடிவேல்> கதிர்காமம் இளையதம்பி ஆகிய இரு சகோதர்களிடம் இது பற்றி கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறிய விடயம் பல்வேறு தெளிவுளை ஏற்படுத்துகின்றது.

நீங்கள் எவ்வாறு இந்த சொர்ணாளி இசை வாத்தியத்தை வாசிக்கப் பழகினீர்கள் என்பதை பற்றி குறிப்பிடுங்கள்.

நாங்க மனே எங்கட ஊர்ல முருகன் கோவில்> திருவாசகம்மன் கோவில்> முனிஸ்வரன் கோவில்> பிள்ளையார் கோவில் அப்பிடி நிறைய கோவில் இருக்கு. அந்த கோயில்களுல எங்கட பெரியம்மாட மருமகன் அரசர் என்ற ஒருவர் அவர் குழல் ஊதுற> சின்னத்தம்பி என்று ஒருஆள் தவில் அடிக்குற. அப்ப எங்கட ஊர்ல முதல் களுதாவளை ஆக்களப் பிடிச்சித்தான் தவில் எனைக்கி எடுக்கிறவங்க. அப்ப எங்கட கோவில்ல தவில் இருக்கும் பூசை முடியுற நேரம் நாங்க அங்கபோற. அந்த நேரம் அவங்க ஊதுவாங்க, அடிப்பாங்க. அப்ப நாங்களும் வாசிக்க வேனும் என்ற ஆர்வம் வந்தது. இனி அவையள்ட கேட்டா தருவாங்க அப்பிடி ஊதப்பழகித்தான் எங்கட ஊர்க் கோவில் திருவிழாக் காலத்துல மட்டும் செய்து வந்தநாங்க. மறா எங்கட கீழ்கன்டு பிள்ளைகளையும் தவில் அடிக்க பழக்கி எடுத்திட்டம்.

 

எந்தக் கோவிலில் முதன் முதலாக சொர்ணாளி வாசித்தீர்கள்? எப்படி தொழில் ரீதியாக இதனை செய்வதற்கு முன் வந்தீர்கள்?

எங்கட கோவில் எல்லாத்துக்கும் களுதாவளை ஆக்களத்தான் எடுக்கிறது. நாங்க சம்பளத்திற்கென்டு போறல்ல. தினப்பூசைகளுக்கு எங்கட ஊர்ல நாங்க அடிச்சம். அப்பிடி இருக்கேக்க எங்கட ஒன்பது ஊர் சேர்ந்து செய்யுற திருவிழாக்கும் அவங்கதான் வந்து போற. அவையள்ட கடிதம் குடுத்தாங்க என்டா ஒன்பது நாளும் வந்து செய்வாங்க. அதுக்குரிய சம்பளத்தை குடுப்பாங்க அரிசி சாமானக் குடுப்பாங்க அவைய அவடத்தையே போட்டு சமைச்சிச் சாப்பிட்டுத்து அடிச்சிப்போட்டு போவாங்க. பிறகு LTTE இயக்கம் களுதாவளை ஆக்கள் தவில் அடிக்கப் போகக் கூடாது என்டது. தவில் அடிக்கிற எளிய வேலை நம்ம செய்தா நம்ம சமூகம் பின் நோக்கிப் போகுது ஆனபடியா ஒருத்தரும் போக ஏலா என்டு சொல்லி களுதாவளையில் கொஞ்ச ஆக்கள் திட்டம் போட்டிருந்தாங்க. இங்க கடிதம் போக்காட்டுனதும் சொன்னாங்க இனி நாங்க வரமாட்டம் நீங்க யாரைப்பிடிச்சி என்னவேனும் என்டாலும் செய்ங்க என்டு சொல்லி அவங்க வரஇல்ல.

அப்ப எங்கட கோவில் நிருவாகத்துல ஞானேஸ்வர மாஸ்டர் என்று சொல்லி அவர் தான் கோவில் தலைவரா இருந்தவர். அவர் சொன்னார் இந்த ஒன்பது ஊர் சேர்ந்து செய்யுற (ஈச்சந்தீவு> நாவக்காடு> மஞ்சாடு> சாலமக்கணி> விளாவெட்டுவான்> கரவெட்டி> சின்னத்தோட்டம்> மகிழவெட்டுவான்> கற்குடா) திருவிழாவுல உங்க உங்க ஊர் சடங்கிற்கு நீங்க பறை மேளமோ ஏதோ செய்யுறன்டா நீங்களே செய்யனும். அப்ப எங்கட ஊர் பூசை நேரம் நாங்க டெக்டர்ல போய் சாமான் எல்லாம் ஏத்தி எல்லாருமாப்போய் காய் கறி எல்லாம் வெட்டிக் குடுத்து பறைமேளம் குழல் எல்லாம் அடிச்சி ஊதி ராப்பூசையும் பகல்பூசையுமா செய்து வந்திட்டம். அப்புடி நாங்க செய்தோனே மற்ற மற்ற ஆக்கள் எங்கள கூப்பிட்டா நாங்க சொன்னம் அது சரி இல்ல இது எங்கட ஊருக்காக செய்தது என்டு போகாமத்தான் இருந்தனாங்க.

அதுக்கப்புறம் எங்கட ஊர்ல அம்மன் கோவில் உற்சவம் அதுக்கு கட்டாயம் பறைமேளம் வேனும் அப்ப நாங்க சரி என்டு சொல்லிட்டம். இங்க இருந்த தவில், குழல எடுத்துப்போட்டு அடிச்சி ஊதித்தான் நாங்க செய்து வந்த. மறுகா அடுத்த ஊர் ஆயித்தியமலையோ கெழுத்திமடுவோ மற்ற மற்ற ஊர்காறாக்கள் எல்லாரும் வந்து தென்டிப்பாங்க பிறகு என்ன செய்யுற சம்பளம் தருவாங்க வாங்கிறத வாங்கிறதுதான் இல்லாட்டி சும்மாவும் வாறான். அப்பிடி வந்து தான் நாங்க செய்தநாங்க. இப்ப களுதாவளை ஆக்கள் வாறாங்க தான் ஆனாலும் எங்கட பொடியன்களும் எல்லாம் செய்வானுகள்.

இந்த குழல் ஊதுகின்ற தொழிலை நீங்கள் செய்யும் போது எதிர் கொண்ட சவால்களை குறிப்பிட முடியுமா?

ஓம் அப்பிடி நாங்க செய்து கொண்டு வந்தப்ப எங்கட சொந்தக்காராக்கள் எல்லாம் சொன்னாங்க இது அந்த சாதி ஆக்கள் தான் செய்யுறது நம்ம செய்ய ஏலாது. இதெல்லாம் செய்தா நம்மளையும் கேவலமா நினைப்பாங்க என்டெல்லாம் சொன்னாங்க. பிறகு நாங்க யோசிச்சம் இப்ப கரையோர ஆக்கள் மட்டும் தான் மீன் பிடிக்கல்ல> நளாக்கள் மட்டும் தான் கள்எறக்கல்ல> மயிர் வெட்டுறதுக்கு வாபர் மட்டும் தான் மயிர் வெட்டல்ல மற்ற மற்ற சில தொழில்கள் எல்லாம் மாறி மாறிச் செய்யுறாங்க. நாங்களும் பாத்தம் இனி இன்னும் ஒருவர் செய்யப்போற இடத்துல நாங்க போய் வலுக்காரமா செய்யவும் இல்ல கேட்டதும் இல்ல வந்து கூப்பிட்டா நாங்க போவம். இருந்தும் இந்தத் தொழில்ல வந்தாலும் சரி போனாலும் சரி என்ற மாதிரித்தான் ஆக்கள் பாக்குறாங்க ஆனா சிலதுகள் நல்ல மாதிரியாக் கவனிக்குங்கள்.

குழல் ஊதும் போது நீங்கள் எதனை கவனிக்கின்றீர்கள்? அவற்றின் தாளங்கள் பற்றி ஏதேனும் கூற முடியுமா?

இதுல பதினெட்டுத்தாளம் இருக்கு பதினெட்டுத்தாளத்துக்கும் பதினெட்டு விதமா ஊதனும். அதுல மூன்று தாளம் மரணவீட்டுக்கு அது கோவிலுக்கு எடுக்கிறதில்ல. சில நோரம் அந்த தாளமும் கொழுவும் பிறகு நாங்க குழல நிப்பாட்டுனா அவங்களும் நிப்பாட்டிடுவாங்க.

தாளம்

பிள்ளையார் அப்பா வா
ஆனை முகனே வா
என்மனதில் வா

பூவில் பிறந்தவளே சரஸ்வதி அம்மா
பூலோக ரட்சகியே சரஸ்வதி அம்மா
நாவில் குடியிருந்து சரஸ்வதி அம்மா
எனக்கு நல்லோசை தாருமம்மா சரஸ்வதி அம்மா
வா அம்மா வா சரஸ்வதி அம்மா வா
காளியம்மா வா
மாரியம்மா வா
பேச்சியம்மா வா

இப்பிடி அந்த தாளத்த ஊதுவம் நல்லா உத்துப் பாத்துக் கேட்டா இந்த பாட்டு விளங்கும் இல்லன்டு சொன்னா விளங்காது. மற்றது ராகமாக உயர்த்துற இடத்துல உயர்த்தி பணிக்குற இடத்துல பணிச்சி அப்பிடிப் போனா கேக்குறத்துக்கு இனிமையா இருக்கும்.

சொர்ணாளி எதனால் வடிவமைக்கப்பட்டுள்ளது தொடக்க காலங்களில் சொர்ணாளியை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைப் பற்றி கூறுவீர்களா?

கருங்காலி> ஆனைப்பல்லு இதுகள்ல தான் முதல் செய்தவங்க இப்ப இப்ப கருங்காலி என்டு சொல்லி மற்ற மற்ற மரங்கள்ல சரிபண்ணி இருக்கானுகள் அதுலையும் நாலுல ஒன்டு ரெண்டுதான் நல்லதா இருக்கும்.

முதல் எல்லாம் கோவில்ல இருந்த சொர்ணாளியத்தான் எடுத்துக் கொண்டு போறது. பிறகு பிறகு கோவில் நிர்வாகம் சொன்னாங்க நீங்க என்னடா கோவில் சாமானக் கொண்டு உழைச்சிச் சாப்பிடுற என்டு இந்தாங்கடா உங்கடது என்டு சொல்லிப் போட்டு இப்ப எல்லாம் நாங்களே வாங்கி வைச்சிருக்கிறம். கோவில் குழல் எல்லாம் இப்ப சாம்பிராணிப்புகை போடுறாங்க. இதுக்கு எங்கட பெத்தப்பன் செவ்வாப் போடியார் என்டு சொல்லி அவர்தான் களுதாவளை ஆனைக்குட்டியர்ட ரெண்டு மேளமும் ஒரு சொர்னாளியும் வாங்கிக் குடுத்த.

இவ்வாறு சொர்ணாளி உடனான தமது வாழ்க்கையை எடுத்துக்கூறிய கலைஞர்களின் கருத்துக்களை பார்க்கும் வேளை பிரதானமாக இரண்டு விடயங்களே இன்றைய நிலையில் சொர்ணாளி வாசிப்போரை அதில் இருந்து அந்நியப்படுத்துகின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது. இன்றைய சூழலில் விலைவாசிகள் ஏறி இருக்கின்ற நிலையிலும் தமக்குரிய சம்பளப்பணத்தை சரிவர பெற்றுக் கொடுக்க மறுக்கின்ற இடைத்தரகர்களும் அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த முடியாமல் சிரமப்படுகின்ற சொர்ணாளிக் கலைஞர்களின் நிலையும் படுமோசமாக இருக்கின்ற போது பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அத் தொழிலை செய்ய வேண்டும் என்ற வலுக்கட்டாயபூர்வமான பிராமனிய ஆதிக்க கோயில்களின் சட்டங்களுமே அவைகள் என்று எண்ணத்தோன்றுகின்றது. எனவே இவ்வாறான குறுகிய மனநிலையில் இனியும் நாம் சிந்திக்காமல் கலைஞர்களை கலைஞர்களாகவே நாம் பார்ப்போமாயின் எமது பாரம்பரிய இந்த சொர்ணாளி இசை மரவை பத்திரப்படுத்திக் கொள்ள முடியும்.

கதிர்காமம் இளையதம்பி கதிர்காமம் வடிவேல்
1955.11.04 1950.12.24

குறிப்பு :- 01.10.2023 சொர்ணாளி இசை விழாவிற்காக எழுதப்பட்டது. தொல்துளை இசைக் குழலின் ஓசை உலகெல்லாம் பரவுகை செய்வோம்.

கு.மதுசாந்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More