இலங்கை பிரதான செய்திகள்

ஒரே நாடு என்பது OK ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்?

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.

யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.

வடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.

எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்?

இப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.

அதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.

அவசியமில்லைதான், ஆணைக்குழு தலைவரே! ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில் உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.

ஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள். தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று, முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,

இலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம். நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா? எமக்கு முடியாதா?

ஏன்?, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.