இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் ஈழப் பிரச்சனை பரவலாகப் பேசப்படும். தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டு அதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே கட்சிகளின் நோக்கமாக இருந்துள்ளது.

இப்போது மீண்டும் மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கு இலங்கையில் மீண்டும் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளும் அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பை ஒரே குரலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை ஒழித்துகட்ட கொழும்பிலுள்ள அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தமிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.மு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மாகாண சபை முறை தொடர வெண்டும் என்று தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகாரப் பரவலுக்கு அடித்தளமிடவும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபை முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் தமது அரசு எதிர்க்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் இது தொடர்பில் தமது ஆழ்ந்த காலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

முன்னதாக முக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு மாகாண சபைகள் தொடர வேண்டும், அதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இலங்கைக்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும் என்று தமது கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்காக தமது கரிசனைகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வரும் அதேவேளை, தமிழ் நாட்டில் நீண்ட காலமாகத் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு போதிய அளவும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் இந்தக் கட்சிகள் செய்யவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் காலங்களில் மட்டுமே தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழமும் அதன் மக்களும் நினைவுக்கு வரும் மற்ற சமயங்களில் அதைச் சுலபமாக மறந்து விடுவார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு தனியாக தாயகப் பிரதேசம் அமைய வேண்டுமென்றும் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீர்மானம் இயற்றினாலும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

வெளியுறவு தொடர்பான அனைத்து கொள்கை முடிவுகளும் இந்தியத் தலைநகர் புது டில்லியிலேயே எடுக்கப்படும். மாநில அரசுகள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வழங்க முடியும்.

அண்மையில் இலங்கைக்கு பயணித்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிகாரப் பகிர்வு முறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்திட்ட காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் இதுவரை கருத்து எதையும் வெளியிடவில்லை.

அதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்குபெற்ற இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மாகாண சபை விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டைக் கூறாமல் நழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.