இந்தியா பிரதான செய்திகள்

7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: மத்திய பல்கலைக்கழகங்கள் சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா?

கடந்த 7 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மை பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள், முதன்மை கல்வி நிறுவனங்களில் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுதான் இந்தத் தற்கொலைகளுக்குக் காரணமா?

2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தத் தகவலை மக்களவையில் இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

ஏ.கே.பி.சின்ராஜ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த, கல்வி அமைச்சரும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சருமான தர்மேந்திர பிரதான் எழுதுப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது .

தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் பட்டியல் சாதிகளை (SC) சேர்ந்தவர்கள், 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை (OBC) சேர்ந்தவர்கள். மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில், பட்டியல் பழங்குடிகளை சேர்ந்த 3 மாணவர்களும் சிறுபான்மை பின்னணியைச் சேர்ந்த 3 மாணவர்களும் அடக்கம்.

கடந்த 7 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் 58% பேர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்

2014-2021 காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களில், ஐஐடி மாணவர்கள் 34 பேர், ஐஐஎம் மாணவர்கள் 5 பேர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர். அவர்களில் 4 பேர் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தைச் சேர்ந்தவர்கள்.

மொத்தமாகப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 37 மாணவர்கள் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகங்களில் 30 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

சாதிப் பாகுபாடு சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்

“இந்திய அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும், மாணவர்களின் மீதான சாதியப் பாகுபாடு பார்ப்பது மற்றும் துன்புறுத்துவது போன்ற சம்பவங்களைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்துள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறைகள், 2019-ம் ஆண்டு மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மாணவர்களுக்கு கற்றலில் உதவி அளிப்பது, பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது,” என்று பதிலளித்தார் இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல்
படக்குறிப்பு,ஆதாரம்: மக்களவையில் இந்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்

இவற்றோடு, மாணவர்களுடைய மனநலப் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு மேற்கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றியும் பேசிய அமைச்சர், “மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு, கோவிட் பரவல் மற்றும் அதற்குப் பிறகான மனநல ஆரோக்கியம் குறித்த உளவியல் ஆதரவை வழங்குவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கி மனோதர்பன் என்ற முன்னெடுப்பை இந்திய அரசு எடுத்துள்ளது,” என்றும் கூறினார்.

கூடுதலாக, நிறுவனங்கள் மகிழ்ச்சி, ஆரோக்கியம் குறித்த கருத்தரங்குகள், யோகா, விளையாட்டு போன்றவற்றை நடத்துகின்றன.

மேலும், “சக மாணவர்கள், வார்டன், பராமரிப்பாளர்கள் ஆகியோர், மாணவர்களின் மனச் சோர்வு அறிகுறிகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்,” என்று தன்னுடைய பதிலில் தர்மேந்திர பிரதான் கூறினார்.

ரோஹித் வெமுலா

பெங்களூரு ஐஐஎஸ்சியில் அகற்றப்படும் சீலிங் ஃபேன்கள்

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விடுதி அறைகளில் தற்கொலை செய்துகொண்ட 4 பேரில் மூவர் தங்கள் அறையிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு இறந்துள்ளார்கள். இதனால், நாட்டின் புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் சீலிங் ஃபேன்கள் அகற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக டேபிள் ஃபேன் அல்லது பக்கச் சுவற்றில் பொருத்தும் மின்விசிறிகளை மாற்ற நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தி பிரின்ட் தெரிவித்துள்ளது.

அவர்கள் அதிகாரிகளுக்கு கேள்விகளை அனுப்பியபோது, சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் ஒரு பகுதியாக சீலிங் ஃபேன்களை அகற்றுகிறோம் என்று மின்னஞ்சல் மூலமாக பதிலளித்ததாக தி பிரின்ட் தெரிவித்துள்ளது. தி பிரின்ட் தெரிவித்துள்ள செய்தியின்படி, ஆலோசகர்கள் மாணவர்களை அழைத்து நலம் விசாரிப்பது அவர்களுடைய செயல்பாடுகளின் ஒரு பகுதி என்று அவர்களிடம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் மாணவர்களின் தற்கொலைகள் குறையப்போவதில்லை என்று மூத்த மாணவ தலைவர்கள் கூறுகின்றனர்.

‘பாலின பார்வை மாறிவிட்டது; சாதிய பார்வை மாறவில்லை’

“அரசு சமீபத்தில் வழங்கிய புள்ளிவிவரங்கள் கல்லூரிகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டும்தான். இதில், தங்கள் வீடுகளிலும் பிற இடங்களிலும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை,” என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான, முனைவர். ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

“தற்கொலை என்பது அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கொலைகள். ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, இந்த நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளுக்கு இந்திய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், “மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் போன்றவை, மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக விமர்சனம் உள்ளது. இந்த வளாகங்களில் இறந்தவர்களில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் தான் அதிகம் என்பதை சமீபத்திய தரவு தெளிவுபடுத்துகிறது,” என்றும் கூறினார் முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

சாதிய பார்வை மாறவில்லை

“வளாகத்திற்கு வெளியே பெரும்பான்மையாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னும் வளாகத்திற்குள் சிறுபான்மையினராகவே உள்ளார்கள். மேல் சாதியினர், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின மாணவர்களிடையே பாகுபாடு காட்டுகின்றனர். இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாகச் சித்ரவதைக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

முனைவர்.ஜிலுகர ஸ்ரீனிவாஸ், “இந்தக் கல்வி அமைப்பிற்குள் பாலினம் குறித்த பார்வை மேம்பட்டிருந்தாலும், சாதியம் குறித்த பார்வை மாறவில்லை. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் சிறுபான்மைப் பின்னணியில் உள்ள மாணவர்களிடம் எப்படி இருக்கவேண்டும் என்ற புரிதல் இல்லை.

சில வளாகங்களில் புகார் மையங்களும் ஆலோசகர்களும் நிறுவப்பட்டாலும்கூட, பலவற்றில் அப்படியானவை இல்லை. அவை நிறுவப்பட்டிருக்கும் இடங்களிலுமே, போதுமான ஆதரவு என்பது இல்லை,” என்று கூறுகிறார்.

2016-ம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். இது தற்கொலை அல்ல, இந்த அமைப்பு செய்துள்ள கொலை என்று குடிமைச் சமூகம் ஒப்புக்கொண்டதாக பிபிசியிடம் கூறினார் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

‘தற்கொலை செய்துகொள்வதற்கான 3 முக்கியக் காரணங்கள்…’

“மத்திய பல்கலைக்கழங்களில் நடக்கும் மாணவத் தற்கொலைகள் அனைத்திற்கும் சாதியப் பாகுபாடு காரணமாக இருக்காது. ஆனால், பெரும்பான்மை தற்கொலைகளுக்கு இதுவே காரணம்,” என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.

பிபிசியிடம் அவர் பேசியபோது, மாணவர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக கருதுவதற்குப் பின்னால் 3 காரணங்கள் இருப்பதாகவும் அதனால் தம் வாழ்வை அவர்கள் முடித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Student Unions

“முதல் காரணம், கிராமப் பின்னணி. கிராமப் பின்னணியில் உள்ளவர்கள் பல போராட்டங்களுக்கும் சிரமங்களுக்கும் பிறகுதான் இங்கு கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் வளாகத்திற்குள் நுழைந்தவுடன், அடிப்படைப் பாடங்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்காமல், முதன்மைப் பாடத்திட்டங்களுக்கு அவசரப்படுத்தப்படுகிறார்கள். இதன் விளைவாக கிராமப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்கில மொழியும் அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.

இரண்டாவது காரணம், ஆசிரியர்களால் குறிவைக்கப்படுதல். அவர்களின் சாதி, பிராந்தியம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களே மாணவர்களைப் பாகுபாட்டோடு நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களில் இந்தப் பாகுபாடு தெரிகிறது.

மூன்றாவதாக வழிகாட்டிகளை நியமிப்பதில்லை. கல்வி பயிலும் காலகட்டத்தில் மேற்கொள்ளும் ஆய்வுக்கான வழிகாட்டிகளை நியமிப்பதில்லை. அப்படியே நியமிக்கப்பட்டாலும், அவர்கள் சரியாக வழிகாட்டுவதில்லை. ‘ஆடு, மாடு வளர்க்கும் மக்கள் இன்று வகுப்பறைகளில் அமர்ந்திருக்கிறார்கள். உங்களுக்கு எதற்கு கல்வி?’ என்று பேசுகிறார்கள்.

இந்த மூன்று காரணங்களால் சில மாணவர்கள் பாரபட்சமாக உணர்கிறார்கள். அதோடு சேர்த்து, உதவி கிடைக்காதது, ஊக்கமின்மை போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்,” என்று கூறினார்.

‘பன்றி வளர்க்கும் உனக்கு எதற்கு கல்வி’

“2008-ம் ஆண்டு, முனைவர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமார் குறிப்பாக இந்தக் காரணங்களுக்காகவே தற்கொலை செய்துகொண்டார். அவர் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய உதவித்தொகையைப் பெறுவதற்காகச் சென்றபோது அவரிடம், ‘பன்றி வளர்க்கும் உனக்கு எதற்கு கல்வி’ என்று கேட்கப்பட்டது.

தற்கொலை

உதவித்தொகை கிடைக்காததால் கடன் பட்டார். அவருக்கு உதவ முடியாத நிலையில் அவருடைய குடும்பத்தினர் இருந்தார்கள். தீர்வு எதுவும் தெரியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டார்,” என்கிறார் முன்னா.

2016-ம் ஆண்டில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டதற்கு இதேபோன்ற சமூக அரசியல் ரீதியிலான பாகுபாடும் துன்புறுத்தல்களுமே காரணம் என்றும் அவர் கூறினார்.

“கல்லூரியில் உள்ள சாதியப் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை அரசியல் ரீதியாக ரோஹித் எதிர்த்ததால், அவர்கள் ஒரு மாணவர் குழுவைக் குறி வைத்தார்கள். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தனக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை எதிர்த்து 3 மாதங்கள் போராடினார். இந்த அநியாயங்களுக்குத் தீர்வு கிடைக்காது என்று தெரிந்து, ரோஹித் தற்கொலை செய்துகொண்டார்,” என்று நிலைமையை விளக்கினார் முன்னா.

‘உதவித்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை’

முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, உதவித்தொகை விவகாரத்தில் அதிகமாகத் தெரிகிறது என்று அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவர் முன்னா கூறினார். ‘பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு இலவசக் கல்வி வழங்குவோம். நீங்கள் போய்ப் படிக்கலாம்,’ என்று அரசு கூறும்போது, ‘பட்டியல் சாதிகளும் பழங்குடிகளும் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள், அவர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது, வளாக உணவகத்தில் பகாசுரனைப் போல சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதால், சாப்பிட மட்டுமே வருகிறார்கள், படிக்க வருவதில்லை,’ என்பதுதான் பலரின் கருத்தாக இருப்பதாகக் கூறுகிறார் முன்னா.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல்

“உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அரசு அவர்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகையை அரசு வழங்குவதில்லை. உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஆவதால், அவர்களால் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களால் கட்டணம் செலுத்த முடியாததால், தேர்வு எழுதத் தகுதியற்றவர் என்று கூறி ரத்து செய்யப்படுவதாக நோட்டீஸ் அனுப்புகிறார்கள். இதனால், மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்,” என்று நிலைமையை விளக்கினார்.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்ள அனைத்து பின்னிணைப்பு பதவிகளும் காலியாக இருப்பதாகக் கூறுகிறார் முனைவர்.ஜிலுகர ஸ்ரீனிவாஸ். மேலும், பட்டியல் சாதிகள், பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை அதில் நிரப்பினால், இந்த நிறுவனங்களில் ஒருவித ஒற்றுமை நிலவும். அவர்கள் சுவாசிக்கச் சிறிது இடம் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

  • பிரித்விராஜ்
  • பிபிசி செய்தியாளர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.