வர்த்தக துறையை அபிவிருத்தி செய்வதற்கு தஜிகிஸ்தான் இலங்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் இருப்பதாக தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ராமோன் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ராமோன் தலைமையிலான பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இன்று மேற்கொண்ட இருதரப்பு கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி முயற்சிகள், இரத்தினக்கல் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில், விளையாட்டு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் இருப்பதாக குறிப்பிட்ட தஜிகிஸ்தான் ஜனாதிபதி , இரு நாடுகளுக்குமிடையில் இருக்கும் உறவுகளை மேம்படுத்தும்போது தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி போன்ற துறைகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தவேண்டுமென குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்குமிடையில் நிலவும் உறவுகளை மேம்படுத்தும் ஆரம்ப நடவடிக்கையாக அரசியல், சுற்றுலாத்துறை, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் உடன்படிக்கைகளிலும் சுற்றுலா மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கான வரைபிலும் இருநாட்டு பிரதிநிதிகளும் இன்று கையெழுத்திட்டனர்.
இலங்கை மற்றும் தஜிகிஸ்தானுக்கு இடையிலுள்ள நோக்கங்கள் பொதுவானதெனவும் இருநாடுகளுக்குமிடையில் நிலவும் வர்த்தகம் போதுமானதல்ல என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தஜிகிஸ்தான் அரசாங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் வர்த்தக வாய்ப்புகளை இனங்காண்பதற்கும் முன்வர வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்ததுடன், இருநாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, மலிக் சமரவிக்கிரம, தயாசிறி ஜயசேகர, ஹர்ஸ டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.