நெதர்லாந்தின் மனிதநேயச் செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச்சங்க ஆதரவுடன் ஈழத் தமிழர் திரைப்படச் சங்கம் (பிரான்ஸ்) 7 குறும் படங்களை Roermond (The Netherlands) இல் கடந்த சனிக்கிழமை திரையிட்டது.
7 குறுந் திரைப்படங்களையும் பார்த்தவுடன் இவைபற்றிக் கட்டாயம் எழுதவேண்டுமென்ற உணர்வுக்கு ஆட்பட்டேன். Bilboquet (பி.சுரேந்திரன், லண்டன்), Click (பிரபாகரன், ஈழம்), Your destination (சத்தீஸ் , பிரான்ஸ்), Pray forபிரான்ஸ் ( எஸ்எல்ஜனா, பிரான்ஸ்), கந்தகமேடு(பிரசன்னா, நியுசிலாந்து), Innocent girl (நெதர்லாந்து) ஆகியபடங்கள் மேற்குறித்த விழாவிற் காட்டப்பட்டன.
சினிமா என்னும் கலையின் மூலக் கூறுகளைச் சரியாக உள்வாங்கிக் கொண்ட ஆரம்ப நிலைப் படைப்பாளிகளின் படைப்புக்களைக் கண்ணுற்ற பொழுது,இவர்கள் தொடர்ந்து பயணம் செய்யும் போது அற்புதமான சினிமாவை உருவாக்குபவர்களாக மாறுவார்கள் என்றநம்பிக்கை உருவாகிறது.
எந்தவொரு கலைப்படைப்பையும் பற்றிய ஆழமான பார்வை ஒன்றை முன்வைக்க வேண்டுமென்றால் அவற்றைப் பல முறைபார்க்க வேண்டும். இப்படங்களை இன்னுமொரு முறை பார்ப்பதற்கு இப்பொழுது சந்தர்ப்பம் இல்லை. அதனால் இக்குறிப்பை நான் எனது முதல் மனப்பதிவில் இருந்தே எழுதுகிறேன். கலையின் வெற்றி அதனுள்ளடக்கத்திலும் அதனைச் சொல்கிற படைப்பாளியின் பிரக்ஞையினூடாக உருவாகிற வடிவத்திலும் (சொல்லப்படும் முறை) அவருடைய கலைசார்ந்த தொழில் நுட்ப அறிவுத்திறனிலும் தங்கியிருக்கிறது. இவையாவும் செயற்கையாகவன்றி இயல்பாக ஒன்றிழையவேண்டும்.
இவ்வேழு குறும்படங்களும் எடுத்துக் கொண்ட கருக்கள் மிகவும் கனதியானவை. இவை பொழுது போக்குக்குரியவை அல்ல. தாம் எடுத்துக் கொண்ட கருவைக் குறுகிய நேரத்தில் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில் இப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. இவ்வகையில் சினிமா என்ற கலை வடிவத்தின் தொழில் நுட்பக் கூறுகளிலும் மிகுந்த கவனமெடுத்து இக்குறும்படக் கலைஞர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். ஒளிஅமைப்பு, கமராக்கோணம், படத்தொகுப்பு, நடிப்பு, பின்னணி இசை, உரையாடல் மொழி போன்ற விடையங்கள் நன்கு கவனமெடுத்துச் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு படமும் தமக்குரிய தனித்துவத்துடன் இருந்தன.இவை எமது உணர்வுகளைத் தொட்டன.
Innocent girl என்னும் குறும்படம் போர்க்களத்தில் படங்களை எடுக்கும் செய்தியாளர் அல்லது படப்பிடிப்பாளர் பற்றியது. குறித்த படப்பிடிப்பாளர் காட்டுப்பகுதி யொன்றில் மரங்களுக்கிடையிற் படம் எடுப்பதற்காகப் பதுங்கி இருக்கும்போது இராணுவத்திடம் இருந்து தன்னையும் தன் உடமையையும் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ஒரு சிறுமியைக் காண்கிறார். அச்சிறுமியைத் துரத்தி வந்த இராணுவத்தினன்( அவன் தமிழ் மொழியிலேயே பேசுகிறான்)அச்சிறுமியின் கையிலிருந்த பையைப்பறித்து கொண்டு அவளைச் சுட்டு விடுகிறான். (எனது கவனிப்புச் சரியென்றால் அச்சிறுமி படமெடுப்பவரையும் கண்டுவிடுகிறாள் ஆனால் இராணுவத்திற்கு அதனைக் காட்டிக் கொள்ளாமற் பையைக் கொடுக்காமற் போராடுகிறாள்.)இச்சம்பவத்தைப் படப்பிடிப்பாளர் படம்பிடிக்கிறார்.
பிற்பாடு படப்பிடிப்பாளருக்கு குறித்த அக்கணத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கு வெளிநாடொன்றில் விருதுகிடைக்கிறது. விருது வழங்கப்பட அழைக்கப்படும்போது அதனைப் பெறாமல் அரங்கத்தில் இருந்து வெளியேறி அறையொன்றுக்குட் சென்று அதனை மூடி உள்ளிருந்து அழுகிறார்.தொழில்சார் விழுமியங்களுக்கும் மனிதாபிமானத்திற்குமிடையிலான போராட்டம் பற்றிய விடைகாண முடியாத கேள்வியை நினைவுபடுத்தும் குறும்படம் இது.ஏற்பாட்டாளர்களின் ஒலி அமைப்பில் இருந்த குறைபாட்டால் இக்குறும்படத்தின் உரையாடல்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை யென்றாலும்படம் தனது செய்தியைச் சொல்வதிற் பின்னிற்கவில்லை. . சினிமா என்னும் ஊடகம் காட்சியூடகம். கண்டும் உணரமுடியாதவற்றைச் சொல்வதற்குத்தான் உரையாடல் தேவைப்படும். குறித்தகுறும்படங்களில் அளவுக்கதிகமான உரையாடல்கள் பாவிக்கப்படவில்லை என்பதுடன் பாவிக்கப்பட்ட உரையாடல்களின் மொழி எங்களுடையதாகவும் இருந்தது.
Bilbuquet என்னும் படம் நவீன தொடர்பு மற்றும் ஊடகசாதனங்களின் ஆளுகைக்குள் சிக்கித் தனித்தீவுகளாகிவிடும் மனிதர்களைப் பற்றியது. இவ்வாளுகைக்குள் இருக்கும் குடும்பம் ஒன்றில் சிறுமி ஒருத்தி Bilbuquet என்னும் விளையாட்டுப் பொருளை வைத்துக் கொண்டு விளையாடுவதற்கு அம்மா அப்பா அண்ணா அக்கா எனயாவரையும் நாடுகிறாள். அவர்களோ தமது தீவிலிருந்து வெளிவருவதில்லை. சிறுமியோ தனித்து வாடிப்போகிறாள். திடீர் என மின்சாரம் நின்றுபோகிறது. மெல்ல மெல்லக் குடும்பத்தினர் தமது உலகங்களில் இருந்து வெளியேவந்து,வாழும் அறையினுள் ஒன்று கூடுகின்றனர். சிறுமியின் விளையாட்டுப் பொருளை எடுத்து விளையாடத் தொடங்குகின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் ஊடாட்டம் ஏற்படுகிறது. சிறுமியின் முகத்திற் புன்னகை மலர்கிறது. இது தற்காலிகமானதுதான் ஏனேனில் மீண்டும் மின்சாரம் வந்துவிடுகிறது. இத்தகைய சூழலில் வளர்கிற சிறுமியும் பின்னாளில் தனித் தீவாகத்தான் போகிறாள் என்பதும் வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஆனால் இதுகட்டாயம் சொல்லப்பட வேண்டுமா? அல்லது உணர்த்தப்பட வேண்டுமா? இல்லை. ஆனால் இத்தகைய பிரக்ஞைகள் நெறியாளரின் நுண்ணுணர்வுக்கு வலுச் சேர்ப்பவையாக இருக்கும்.குறைந்த ஒளியில் முகபாவங்களினூடு உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகர்கள் அருமை. ஒளிப்பதிவு நன்று. சிறுமியின் சந்தோசமான முகம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
கிளிக் என்னும் குறும்படம் இதயத்தைத் தொட்டது. பாடசாலையிற் பரிசளிப்பு விழாவிற் பரிசு பெறுகிற சிறுமிகளைப் படமெடுக்க வருகிற படப்பிடிப்பாளனுக்கு முதல் மூன்று பேரைத் தவிர ஏனையவர்களைப் படமெடுக்க வேண்டாமென்று கூறப்படுகிறது. படத்திற்கான பணத்தை வறுமையானவர்களிடம் இருந்து பெறுவது கஸ்டம் எனக்காரணமும் கூறப்படுகிறது. ஆனால் நான்காவதாகவருகிற சிறுமியோ ஆறுதற்பரிசு வாங்கும் போதுதன்னையும் படமெடுப்பார்கள் என்று சந்தோசமடைகிறாள்.
சான்றிதழ் வாங்கும்போது தன்னையும் படமெடுக்கும்படி மிகுந்த தன்னம்பிக்கையுடனும் சிரிப்புடனும் படப்பிடிப்பாளனைப் பார்வையால் வேண்டுகிறாள். அவனும் சற்றுதாமதித்தாலும் பின்கமராவிலிருந்து ஒளியை உமிழச் செய்கிறான். அச்சிறுமியோ படத்தைப் பெறுவதற்கு எவ்வளவு காசு தேவைப்படும் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். அதனைச் சேமிக்கவும் செய்கிறாள்.
பாடசாலையில் எடுக்கப்பட்ட படங்கள் பிள்ளைகளிடத்துப் பகிரப்படும் போது அவளின் படங்கள் அவற்றுள் இல்லை. கவலையுடன் திரும்பும் போது அவளது சகமாணவன் பேப்பரினாற் செய்யப்பட்ட கமராவினால் அவளைப்படமெடுத்து கையினாற் கீறப்பட்ட பரிசு பெறும்படத்தை அவளுக்கு கொடுக்கிறான். அவள் படப்படிப்பாளனை எவ்வளவு தன்னம்பிக்கையுடனும் சிரிப்புடன்பார்த்தாளோ அதே அளவு சிரிப்புடனும் சந்தோசத்துடனும் தனது சகமாணவனிடத்திலிருந்து அப்படத்தைப் பெறுகிறாள் அவனையும் அதே காகிதக்கமராவால் படமெடுக்கிறாள். இருவரும் சந்தோசமடைகின்றனர். வர்க்க பேதத்தை தன்சிரிப்பாற் கொன்ற அந்தச்சிறுமியின் சிரிப்பு மனதை வியாபித்துநிற்கிறது.
நானாகநான் என்னும்படம் கணவன் மனைவிக்கு இடையில் வரும் முரண்பாடுகளினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதைக் குறியீடாகச் சொல்கிறது. கணவனும் மனைவியும் இணைந்து சந்தோசமாக ஒரு ஓவியத்தை வரையத் தொடங்கினாலும் ஓவிய உருவாக்கத்தின் போக்கில் அவர்களுக்கிடையில் மெல்ல மெல்ல முரண்பாடு தோன்றுகிறது. தாங்கள் வரையத் தொடங்கிய ஓவியத்தைத் தாங்களே பாழ்படுத்துமளவுக்கு அவர்களின் முரண்பாடு முதிர்கிறது. தாங்கள் வரைந்த ஓவியத்தின் மீது வண்ணங்களைச் சகட்டு மேனிக்கு வீசுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களின் பிள்ளைவருகிறாள். திரும்பி அவளைப்பார்க்கிறார்கள். அவள்முகத்தில் இவர்கள் வீசிய வர்ணங்கள் வழிந்திருக்கின்றன. வார்த்தைகள் எதுமின்றியே நகர்ந்த இப்படம் கனதியான கேள்விகளை எழுப்புவது.
இக்குறும்படம் ஒரு விரிந்த சினிமாவாக உருவாகும் போது குடும்பம் என்னும் அமைப்பினுள் கணவன் மனைவிக்கிடையிலான முரண்பாடுகளின் மூலங்களாகஎவை இருக்கின்றன? அதில் ஆணாதிக்கத்தின் செல்வாக்கு எப்படியிருக்கிறது என்பது போன்ற கேள்விகள்வரும். பிள்ளை வளர்ப்புத் தொடர்பான முன்னறிவின் அவசியம், குடும்ப வேலைகளிற் தேவைப்படுகிற வேலைப்பகிர்வினதும் கூட்டு வேலையினதும் அவசியம், வாழும் சூழலின் கலாசாரத்தின் தாக்கம் போன்றவையும் இங்குகவனம் கொள்ளப்பட வேண்டியவை. பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்காமலும் தனிமனித உணர்வுகளைப் போற்றிப் பேணக் கூடியதாகவும் இருக்கக்கூடிய குடும்ப அல்லது குடும்பமற்ற விழுமியங்கள் தொடர்பான தேடல் நெறியாளருக்கு நல்லதொரு சினிமாவை எடுக்கஉதவும்.
You destination என்ற படம் சப்பாத்துக்களின் அசைவைமட்டுமே வைத்துக் கொண்டு ஓரிடத்தில் இராணுவப் படுகொலைக்கு உள்ளாகும் ஒரு சமூகம் எப்படி அதேயிடத்தில் எதுவுமே நிகழாதது போல மீண்டும் வாழ்வை ஆரம்பிக்க விதிக்கப்படுகிறது என்பதைச் சொல்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைச் சப்பாத்துகளின் அளவுகளையும் வடிவங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு அருவமான பாத்திரங்களை உருவாக்கிச் சொன்ன இக்குறும்படம் பூடகமானது.
Pray for பிரான்ஸ் என்னும் படம் பிரஞ்சுப் பார்வையாளர்களுக்கானதாகத் தோன்றினாலும் அதிகாரத்தின் குறிப்பாக அரசுகளின் இரட்டை வேடத் தைக்காட்டுகிறது. பாரிஸ் நகர இசையரங்கமொன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து உரையாற்றும் பிரான்சுப் பிரதமர் பயங்கரவாதிகளுக்கு இசை பிடிப்பதில்லை எனப் பிரஞ்சு மக்களுக்குச் சொல்கிறார்.அவர் அவ்வாறு சொல்கிற சமகாலத்தில் பிரஞ்சுப் படைகள் வீசுகிற குண்டுகளால் உலகின் இன்னொரு பகுதியில் இசைக் கலைஞர்கள் கொல்லப்படுவதை நெறியாளர் காட்டுகிறார். அரச பயங்கரவாதம் பற்றி நேரிடையாகவும் தீவிரவாதத்தின் விளைநிலம் எது என்பதைப் பூடகமாகவும் சொல்கிறபடம் இது.
அரசு செய்கிறது என்பதற்காக எந்தத் தீவிரவாதியும் போரில் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களை அதுயாராக விருந்தாலும் கொல்வது அறமல்ல என்பதும் சொல்லப்படுவது நெறியாளனின் பிரக்ஞைக்கு வலுச் சேர்க்கும்.சினிமாவாக இப்படத்தின்அளிக்கைமுறைஅருமையானது.
கந்தகமேடு என்னும் குறும்படம் ஏனைய படங்களுடன் ஒப்பிடும் போது சற்று நீண்டது ஆனால் இங்கு ஒருகதை சொல்லப்படுகிறது. வன்னியிலும் நியூசிலாந்திலுமாக மாறி மாறி நிகழும் காட்சிகளைத் தொகுத்த விதம் பாத்திரங்களின் உருவாக்கம் நடிகர்களின் நடிப்பு என்பன நன்றாகவந்துள்ளன.புலம்பெயர்ந்த செல்வச் செழிப்புள்ள மேற்கத்தைய தமிழ்க் குடும்ப வகை மாதிரியொன்று உடைத் தேர்வாலும் உடல் மொழியாலும் அழகாக உருவாக்கப்பட்டு விடுகிறது. இதற்கு எதிர் முனையில்,மூடிய பதுங்கு குழிக்குள் நாட்களைக் கழிக்க நேர்கிற வன்னிக் குடும்பம் ஒன்றின் அவலமான வாழ்வு நடிகர்களின் முகங்களாலும் பேச்சாலும் உடையாலும் ஒளியூட்டலாலும் அற்புதமாகக் (இச் சொல்லுத் தரும் முரணணிக்காக என்னை மன்னியுங்கள்) கொண்டு வரப்படுகிறது. பயத்துடன்“அப்பா வெளியால போகாதையுங்கோ என்று கணவனைப் பார்த்துக் கேட்கிற மனைவி பதுங்கு குழிக்குள் ஊர்ந்து வருகிற பாம்பைத்தானே ஆக்ரோசமுடன் அடிக்கிறாள் .அவளின் கோபம் எதன் குறியீடு? பதுங்குகுழிக்குள் சிக்கிய சிறுவனின் குடும்ப ம்குண்டு வீச்சுத் தாக்குதலிற் கொல்லப்பட, சிறுவன்மட்டும் தப்பி வெளிநாட்டுக்கு வந்து வளர்ந்து குடும்பமாகிய நிலையில் பின்னோக்கிச் செல்லும் கதையிது. கால முரண் நாட்காட்டியின் ஓரிதழைக் கிழித்துக்கதை 2039 இல் நிகழ்வதாகக் காட்டுவதன் மூலம் தீர்க்கப்படுகிறது.
பதுங்கு குழியில் இருந்த சிறுவன் குண்டு வீச்சுத் தாக்குதலில் கேட்கும் சக்தியை இழந்துவிட்ட மைபடத்தின் இறுதியிற்தான் (அவன் தந்தையான நிலையில்) பார்வையாளனுக்கு தெரியவருகிறது. அவ்விடத்திலேயே படம்முடிந்தும் விடுகிறது. (பிற்பாடு வரும் சிறுவன் மீட்கப்படும் காட்சியும் பின்ணணிப் பாடலும் தேவையற்றவை என்பது எனது உணர்வு) இக் குறும்படங்கள் அனைத்திலும் வந்த நடிகர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களாகவே மாறியிருந்தனர். அவர்களுக்கு முன் கமரா இருப்பதான உணர்வே அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாகச் சிறுமிகள்.அடடா என்ன கண்கள்!என்னபார்வை!!என்ன உயிர்ப்பு.
இசை நாடக மரப்புக்கூடாக வந்த தாக்கம் காரணமாக தமிழ்ச் சினிமாவில் மிகை நடிப்பு கடந்தகாலங்களில் பல நடிகர்களுக்கு தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. தோலின் மயிர்க்கால்வரை நெருங்கி வரக்கூடிய கமரா இருக்கும் போது நடிப்பென்பது சினிமாவில் நாடகம் போலல்லாது வேறு பரிமாணத்தை எடுக்கிறது. இதனை எம்மவர்கள் உணர்ந்திருப்பது மிக்க நம்பிக்கை தருவது.
இக் குறும்படங்களின் பங்குதாரர்களான அனைத்துக் கலைஞர்களுக்கும் உங்கள் ஆதரவையும் பாராட்டையும் எப்படியாவது காட்டிவிடுங்கள்.
ஈழத்துச் சினிமா இனிஆலமரமாகும்.
தேவஅபிரா
27-12-2016