இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் எதிரொலியாக மாநிலத்தின் பல இடங்களில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீநகரில் உள்ள ஒரு கிராமத்தில் வானி தனது அணியினருடன் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து; அந்த கிராமத்தை முற்றுகையிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் மீது தீவரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள படையினரும் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த என்கவுன்ட்டரில் புர்ஹான் வானி மற்றும் அவரது இரு நண்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீநகர், புல்வாமா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து ஒருபிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகரில் நேற்றிரவு ஊரடங்கு உத்தரவுக்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலையில் இருந்து கைபேசி, இணைய சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.