கட்டுரைகள்

நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.. சிலநிமிடங்கள் போதும் அவை சிதைவடய…

சுரேன் சுரேந்திரன்: தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.. சிலநிமிடங்கள் போதும் அவை சிதைவடய...

 

‘கடந்த கால பொய் வாக்குறுதிகள், அனுபவங்கள், கடந்தகால திருப்பு முனைகள் போன்றவற்றின் அடிப்படையில் எம்மை மதிப்பீடு செய்ய வேண்டாம் என கோருகின்றேன். நம்புங்கள், அனைத்து தரப்பினரும் இணைந்து முற்போக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்து புதிய இலங்கையை உருவாக்குவோம்’ என சிறந்த சொற்பொழிவு ஒன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சர் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிகழ்த்தியிருந்தார்.
இணை அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இலங்கை, இந்த உரையின் மூலம் திருப்பு முனைகள் ஏற்படும் என, வாக்குறுதி அளித்து நான்கு மாதங்களிலேயே அதனை மீறியது. நாட்டின் அதி உயர் பதவியை வகிப்பவரே இந்த எதிர்பாராத திருப்பு முனைக்கு காரணமாகின்றார். வாக்குறுதி அளித்து நான்கு  மாதங்களில் பி.பி.சீ சிங்கள சேவைக்கு செவ்வியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்தக் குற்றச் செயல் விசாரணகைளில் வெளிநாட்டு நீதவான்கள், வழக்குரைஞர்களின் பங்களிப்பிற்கு இடமில்லை என கூறுகின்றார்.
இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையீனம் காணப்படும் நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்து பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியது. புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை சிதைவடைந்தது.
2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நோக்கமாக அமைந்துள்ளது.
2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், இலங்கை அரச அதிகாரிகள் நிறுவனங்கள் தொடர்பில் சமூகத்தில் போதியளவு நம்பிக்கை கிடையாது என சுட்டிக்காட்டியிருந்தார். இதன் காரணமாகவே யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதவான்கள், வழக்குரைஞர்கள் ஒத்துழைப்பு இன்றியமையாதது; என அவர் தெரிவித்திருந்தார்.  உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையான நீண்டகாலமாக நிலவி வரும் நம்பிக்கையீனம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நியாயமான சந்தேகங்களுக்க தீர்வாக அமையப் போவதில்லை.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 93ம் இலக்க வாக்குறுதியில், பொறுப்பு கூறுதல் தொடர்பில் தேசிய சுயாதீன நீதிப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் இலங்கை அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதாகவே பரவலாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வெளிநாட்டு,பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், வழக்குரைஞர்கள், சட்டத்தரணிகளின் பங்களிப்புடன் நேர்மையான பக்கச்சார்பற்ற நபர்கள் விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்கச் செய்யப்படுவர் எனவும், உள்நாட்டு ரீதியில் நம்பகமானவர்கள் பங்கேற்கச் செய்யப்படுவர் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் குறித்து தமிழர்கள் இணக்கத்தை வெளியிட்டிருந்தனர். இதன்படி தீர்மானத்திற்கு அமைய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது. தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் மீளவும் திருத்தி அமைக்கப்படாது என உறுப்பு நாடுகள் அறிவித்திருந்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பெரும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தனர்.
புதிய அரசாங்கம் அனைவரினதும் இதயங்களை வென்றெடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபடாது நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்யும் என பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
சர்வதேச உறவுகள் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்வடையும் என மக்கள் கருதினார்கள்.
வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்நாட்டு மனித உரமை ஆர்வலர்கள் எதிர்பார்த்தனா.
அலுத்கம தாக்குதல் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்படும் என முஸ்லிம் மக்கள் இன்னமும் காத்திருக்கின்றார்கள். இந்த சம்பவம் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரித்தது.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்ய பங்களிப்புச் செய்தனர். சந்தேக நபர்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஏனயை சித்திரவதைகள் நிறுத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட வடக்கு கிழக்கு மக்கள் மைத்திரியன் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தனர். இராணுவம் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்த்தார்கள். கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் போது அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடாச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்தது.
பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்பய்படும் எனவும், அதி உயர் பாதுகாப்பு வலய காணிகள் மீள உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும், இடம்பெயர் மக்கள் உரிய இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் எனவும், யுத்த வலயங்களில் அதிகளவு முதலீடு செய்து அந்த மாகாணங்களுக்கு  இந்த அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் கடந்த 18 மாதக் காலப்பகுதியில் சிறுபான்மை சமூகங்களின் எதிர்ப்பார்ப்பு சிதைவடைந்த நம்பிக்கையிழந்த நிலையை எட்டியுள்ளது.
பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு மஹிந்த ராஜபக்ஸவை குற்றம் சுமத்தி அவர் மீது அனைத்து பிழைகளையும் சுமத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் குறைவானவர்களே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்கள். அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. தற்போதைய அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் இதுவரையில் எவ்வித நியாயமான சாவல்களையும் விடுக்கவில்லை.
சமூகங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்குள்ளும் நம்பிக்கையீனம் நிலவுகின்றது. ராஜபக்ச ஆட்சிக் காலத்தைப் போன்றே சில நிலைமைகள் தொடர்க்கின்றன. இதன் எதிரொலியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னினால் இலங்கை குறித்து எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்க உள்ள வாய்மொழி மூல அறிக்கையின் போது காணக்கூடிய சாத்தியங்கள் அதிகமுண்டு.

Add Comment

Click here to post a comment

Leave a Reply