Home கட்டுரைகள் தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன்:-

தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன்:-

by admin

கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு  நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்…. ‘நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் சாதாரண சனங்களுக்கு இவை எவையும் விளங்குவதில்லை. அவர்கள் தங்களுடைய, உடனடிப் பிரச்சினைகளை யார் எப்படித் தீர்ப்பார்கள் என்றே பார்க்கிறார்கள். சிங்கள பௌத்த மனோநிலையில் மாற்றம் வராத வரை தமிழ் மக்களுக்கும் விடிவு இல்லை, அந்த மாற்றம் இப்போதைக்கு வராது எனவே தமிழ் மக்கள் தங்களுடைய உடனடிப் பிரச்சினைகளை எப்படித் தீர்த்துக் கொள்வது என்பது பற்றியே கூடுதலாகச் சிந்திக்கிறார்கள்’ என்று.

கடந்த பொதுத் தேர்தலின் போது பிரச்சாரத்திற்குப் போன கட்சிச் செயற்பாட்டாளர்கள் சிலரும் மேற் சொன்ன கருத்தையொத்த ஒரு விடயத்தை அவதானித்திருக்கிறார்கள். அதாவது சாதாரண சனங்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கு யார் அதிகம் சலுகைகளைப் பெற்றுத் தருவார்கள் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று.

சில மாதங்களுக்கு முன் உரும்பிராயில் சரஸ்வதி சனசமூக நிலையத்தில் ஒரு நினைவு கூர்தல் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரை நினைவு கூரும் அந்நிகழ்வில் உரையாற்றிய ஒரு செயற்பாட்டாளர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். ‘1980களில் கூலி உயர்வு கேட்டு நாங்கள் பட்டினியோடு போராடினோம். அந்தப் போராட்டத்தின் தன்மையை இப்போதுள்ள இளைஞர்களில் எத்தனை பேர் விளங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. அப்படியொரு போராட்டத்தில் ஈடுபட இப்போதுள்ள இளைஞர்களில் எத்தனை பேர் தயாராக இருப்பார்களோ தெரியவில்லை’ என்று.

அண்மைய மாதங்களில் நிலைமாறு கால நீதி தொடர்பான சந்திப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் ஒழுங்கு செய்யப்படும் சந்திப்புக்களின் போதும் ஒரு விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது சனங்கள் அரசியலில் அதிகம் அக்கறை காட்டாத ஒரு நிலைமை அதிகரித்து வருகிறது. இதுவே ராஜபக்சக்களின் ஆட்சிக்காலம் என்றால் அதற்குக் காரணம் பயம் என்று கூறிவிடலாம். ஆனால் கடந்த சுமார் 16 மாதங்களாக ஒப்பீட்டளவில் அதிகரித்துக் காணப்படும் சிவில் வெளியின் பின்னணிக்குள் வைத்துப் பார்க்கும் போது சாதாரண சனங்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைந்து வருவதாகத் தோன்றுவதற்குக் காரணம் அச்சம் மட்டும்தானா?

தாயகத்தில் மட்டும் தான் நிலைமை இவ்வாறுள்ளது என்பதல்ல. தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்நிலைமை உருவாகி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் அரசியல் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுப்போரின் தொகை படிப்படியாக குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்ட போது தமிழ் டயஸ்பொறாவில் பெரிய அளவு எண்ணிக்கையானோர் பங்கு பற்றியிருக்கவில்லை.

அங்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் சினிமா நட்சத்திரங்களோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொது சனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் தொகை மிகக் குறைவாகக் காணப்படுகிறது.

அதாவது தாயகத்திலும் தமிழ் டயஸ்பொறாவிலும் சாதாரண சனங்கள் அரசியல் நிகழ்ச்சிகளில் அக்கறை காட்டுவது குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாகத் தாயகத்தில் இவ்வாறு அரசியல் ஈடுபாடு குறைவது என்பது எதிர்காலத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்? தமிழ் மக்கள் அரசியல் நீக்கம் செய்ய முற்படும் தரப்புக்கள் வெற்றி பெற்று வருகின்றனவா?

தமிழ் மக்களை யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? முதலாவது அரசாங்கம், இரண்டாவது தமிழ்த் தலைவர்கள், மூன்றாவது அரச சார்பற்ற நிறுவனங்கள், நான்காவது தொழில் நுட்பமும் உலகளாவிய பெருவணிக நிறுவனங்களும்..

முதலாவதாக அரசாங்கம் எப்படித் தமிழ் மக்களை அரசில் நீக்கம் செய்ய முற்படுகிறது என்று பார்க்கலாம்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அந்த மதகுரு சொன்னது போல போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கென்று எத்தனை தமிழ் நிறுவனங்கள் உண்டு?

உதாரணமாக, வன்னியில் முன்பு புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகள் இயக்கம் ஒரு நடைமுறை அரசை வைத்திருந்தது. அது அங்கு ஒரு தொழில் வழங்குனராகக் காணப்பட்டது. அந்த இயக்கத்தின் நிறுவனங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் செய்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை அரச தரப்பே குறிப்பாக படைத்தரப்பே நிரப்பியிருக்கிறது.  வன்னியில் படைத்தரப்பினரின் சிவில் பாதுகாப்புப் பிரிவு ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்குகிறது. முன்பள்ளிகள், பண்ணைகள் போன்றவற்றை மேற்படி பிரிவு நிர்வகித்து வருகிறது. முன்பள்ளிகளை ஒரு படைப்பிரிவு நிர்வகிக்கக் கூடாது என்று வட மாகாண சபையும் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்றளவும் அங்கு பெருந்தொகையான முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்புப் பிரிவே நிர்வகிக்கிறது. அந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வேதனம் ஏனைய நிறுவனங்களால் நடாத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வேதனத்தை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. இது தவிர அந்த ஆசிரியர்களுக்கு மோட்டார் சைக்கிளும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வன்னியில் படைத்தரப்பானது ஒரு பெரிய தொழில் வழங்குனராகக் காணப்படுகிறது.

இது தவிர அரசாங்கத்திற்கு நெருக்கமான தொழிலதிபர்களால் நிறுவப்பட்ட தொழிற்சாலைகளும் அங்குண்டு. குறிப்பாக ஆடை தொழிற்சாலைகள் மூன்று உண்டு. அவையும் பெரியளவிற்கு தொழில் வழங்குனர்களாகக் காணப்படுகின்றன.

இவ்வாறு தொழில் ரீதியாக படைத்தரப்பில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலைமை வளரும் போது அது அதன் தர்க்கபூர்வ விளைவாக சம்பந்தப்பட்ட தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்து விடுகிறது.

இப்போதுள்ள மைத்திரி – ரணில் அரசாங்கமானது மனித முகமூடியுடன் வருகிறது. இது லிபறல்  ஜனநாயக வாதிகளால் பாதுகாக்கப்படும் ஓர் அரசாங்கமாகும். எனவே ஒடுக்குமுறையானது இப்பொழுது மிகவும் நுட்பமானதாக மாறி விட்டது. இதுவும் தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்ய உதவும். இது முதலாவது

அடுத்தது,தமிழ் அரசியல்வாதிகள். தமிழ்த் தலைவர்கள் மற்றும் தமிழ்க் கட்சிகள் எவற்றிடமும் மக்கள் மைய அரசியல் செயல் திட்டங்கள் எவையும் கிடையாது.தேர்தல் அரசியலுக்கும் அப்பால் செயற்பாட்டு அரசியலுக்கு போகத் தேவையான அரசியல் சித்தாந்த தரிசனம் மிக்க தலைவர்கள் எவரையும் காண முடியவில்லை. எனவே மக்களை வெறுமனே செயலற்ற வாக்காளர்களாக மட்டும் பேணும் ஓர் அரசியற் சூழலும் தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்யக் கூடியது.

அதோடு, இப்போதுள்ள அரசாங்கத்துடன் கூட்டமைப்பின் உயர் மட்டம் பேணிவரும் உறவும் குழப்பமானது. ஒரு பகுதி கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணக்கமாகக் காணப்படுகிறார்கள். இன்னொரு பகுதியினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவ்வாறு தனது அணுகுமுறைகளில் இரண்டு பட்டிருக்கும் ஒரு கட்சியினது . தனது வாக்காளர்களுக்குத் தெளிவான ஒரு வழிகாட்டுதலைக் கொடுக்க முடியாது. இதுவும் தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்வதில்தான் போய்முடியும்.

தமிழ் மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு பார்வையாளர்களாக வைக்கப்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் செயலற்ற வாக்காளர்களாக மாறுவார்கள். இது இதன் வளர்ச்சிப் போக்கில் அவர்களை அரசியல் நீக்கம் செய்து விடும்.

மூன்றாவது என்.ஜி.ஓக்கள். கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டது போல அரசியல் அடர்த்தி மிக்க விடயங்களை என்.ஜி.ஓக்களின் நிக்ழ்ச்சித் திட்டங்களாக மாற்றும் போது அந்த விடயம் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறது. எந்த ஒரு சமூகச் செயற்பாடும் என்.ஜி.ஓக்களிடம் கையளிக்கப்படும் போது இந்த ஆபத்து ஏற்படுகிறது. பெண்ணிய இயக்கங்கள், சமூக செயற்பாட்டு இயக்கங்கள் போன்றன என்.ஜி.ஓ நிதிக்கு கட்டுப்படும் போது இது நிகழ்கிறது. இது ஒரு நுட்பமான கையாளுகை. நிதி உதவி மூலம் குறிப்பிட்ட ஒரு செயற்பாட்டியக்கத்தின் ஓர்மத்தை மழுங்கடித்து விடலாம்.

இவ்வாறு என்,ஜி.ஓக்கள், மற்றும் சிந்தனைக் குழாம்களை உருவாக்குவதன் மூலம் அல்லது ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருப்பவற்றை தந்திரமாக சுவீகரிப்பதன் மூலம் அல்லது அவற்றின் மீது நிதிரீதியாகச் செல்வாக்கைப் பிரயோகிப்பதன் மூலம் என்.ஜி.ஓக்கள் குறிப்பிட்ட சமூக அரசியற் செயற்பாட்டுப் பரப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம். கெடுப்பிடிப்போரின் முடிவுக்குப் பின்னரான உலகச் சூழல் இதுதான். மேற்கு நாடுகள் ஆசிய ஆபிரிக்கா லத்தீன் அமெரிக்கச் சமூகங்களின் மீதான தமது பிடியை பேணுவதற்கு என்.ஜி.ஓக்களை கருவிகளாகக் கையாண்டு வருகின்றன.

இலங்கைத் தீவின் நிலைமாறு கால கட்ட  சமூக அரசியற் பொருளாதாரச் சூழலும்  இத்தகையதுதான். அரசியல் அடர்த்தி மிக்க விவகாரங்களை அதிக பட்சம் என்.ஜீ.ஓக்களிடம் கையளிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட மக்களை அவர்களுடைய வாழ்வியல் யதார்த்தத்திலிருந்து அந்நியப்படுத்தி விடலாம். அதாவது அவர்களை அரசியல் நீக்கம் செய்து விடலாம். இது மூன்றாவது.

நாலாவது, தொழில் நுட்பமும் உலகளாவிய பெருவணிக நிறுவனங்களும். ஒருபுறம் தொழில் நுட்பமானது அரபு வசந்தம் போன்ற சமூக எழுச்சிகளுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு புறம் அது தொழில்நுட்பத்தின் அடிமைகளை உற்பத்தி செய்து வருகிறது. கைபேசிப் பாவனையும், சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் ஆழமான வாசிப்பையும் ஆழமான சிந்திப்பையும் ஊக்குவிக்கின்றனவா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது. எதையும் நுனிப்புல் மேய்கின்ற , மேலோட்டமாக Scroll பண்ணிக் கடந்து போகின்ற ஒரு தலைமுறை எழுந்து வருகிறதா? என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது.

தொழில்நுட்பம் தமிழ்தேசிய அரசியலை அதன் எரிநிலையில் வைத்திருக்க உதவுகிறது என்று கூறுவோரும் உண்டு. அதேசமயம் மெய்யான செயற்பாட்டு வெளியை போலியானதும் சாகசத் தன்மை மிக்கதுமாகியது மெய்நிகர் யதார்த்தத்தினால் பிரதியீடு செய்ய விழையும் ஓர் இளந்தலைமுறை பற்றிய விமர்சனங்களும் உண்டு.

புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்கள் அவற்றின் தொடக்கத்தில் அதிகாரத்துக்கே சேவகம் செய்வதுண்டு. அவை வெகுஜனமயப்பட காலம் எடுக்கும். அரசுகளும், உலகப் பெரு வணிக நிறுவனங்களும் தொழில் நுட்பத்தை ஒரு கருவியாகக் கையாள முடியும். இதன் மூலம் அவர்கள் அடங்காத நுகர்வுத் தாகம் மிக்க நுகர்வோரை அல்லது அரசியல், நீக்கம் செய்யப்பட்ட நுகர்வோரை உற்பத்தி செய்ய முற்படுவார்கள். கோப்பரேற் நிறுவனங்கள் எப்பொழுதும் தமது நுகர்வோரை தேவைக்கேற்ப அரசியல் நீக்கம் செய்ய முற்படுவதுண்டு.2009 மே மாதத்திற்குப் பின் முழு இலங்கைத்தீவும் மேற்கு நாடுகளுக்கு தடையின்றித் திறக்கப்பட்டு விட்டது.
மேலே சொல்லப்பட்ட உரும்பிராய் நிகழ்வின் போது கிட்டத்தட்ட நாலுமணித்தியால நேர இடைவெளிக்குள் ஒரு சிறிய தெருவழியே எட்டு தடவைகள் வெவ்வேறு பேக்கரி வாகனங்கள் வந்துபோயின.ஒரு சிறிய கிராமத்தின் சாப்பாட்டு முறையும் வாழ்க்கை முறையும் மாறி வருவதை இது காட்டுகிறது.பேக்கரிகள் மட்டுமா   கிராமங்களை நோக்கி வருகின்றன? இல்லை, வங்கிகள் வருகின்றன. லீசிங் கொம்பனிகள் வருகின்றன. பிளாஸ்ரிக் உற்பத்திகள் வருகின்றன. கேபிள் தொலைக்காட்சி மூலம் திரைப்படம் வீடு தேடி வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வங்கியாளரும்    சிவில் சமூகச் செயற்பாட்டாளருமான நண்பரொருவர் கூறியது போல ஒரு  நுகர்வுப் பேரலைக்குள் தமிழர்கள்   மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்களா?

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். அதாவது தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்யவிழையும் ஓர் உள்ளூர்ச் சூழலும், அனைத்துலகச் சூழலும் அதிகரித்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கருத்துருவாக்கிகள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்?

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More