229
தமிழ் சிவில் சமூக அமையம்
Tamil Civil Society Forum
08.05.2026
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத் தமிழர்களாகிய நாம் தோற்றுவிட்டோம் என எம்மிற் சிலர் கருதினாலும் சிங்கள-பௌத்த பேரினவாத சிறீலங்கா அரசு இன்று வரை அவ்வாறு நம்பவில்லை.
தமிழ் மக்களாகிய நாம் எதிர்கொண்டு வருகின்ற தமிழ் இன அழிப்பை உணர முடியாதவர்களாக மாறி தம்மீதான தமிழ் இன அழிப்பு வரலாற்றையும் அதை நிகழ்த்தி வருபவர்கள் யாரென்பதையும் மறந்து, எங்களது பாதுகாப்பரணாக நிற்கின்ற தமிழ்த் தேசிய உணர்வை ஈற்றில் கணிசமானவர்கள் இழந்து போகும்போது சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிபந்தனையற்று ஏற்று சிறீ லங்கர்கள் என்ற ஆக்கிரமிப்பு அடையாளத்தினுள் கரைந்து அடையாளமற்றவர்களாக மாறும் அளவுக்கு நமது இனம் தரமிழக்கும் போதுதான் தமிழர்களின் இறுதித் தோல்வி, அல்லது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் உண்மையான இறுதி வெற்றி என்பது தமக்குக் கிடைக்கும் என்பதில் சிறீ லங்கா அரசு தெளிவாகவே உள்ளது.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, எங்களது தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் தத்தமது இறைமைகளை ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இழந்தனர்.
1948ஆம் ஆண்டு “சுதந்திரம் வழங்கப்பட்டது” எனக் கூறப்பட்டாலும், அது எமது தமிழ்த் தேசத்திற்கு உண்மையான விடுதலையாக அமையவில்லை. ஆங்கிலேய அரசின் குறைபாடுள்ள காலனித்துவ நீக்கற் (Defective/Flawed Decolonisation) கொள்கையினால் எங்கள் தேசத்தின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, தமிழ் மக்களின் இறைமை எமது சம்மதமின்றியே அடாத்தாக சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசுக் கட்டமைப்பிற்குள் கைமாற்றப்பட்டது.
1948ல் இத்தீவில் நடைபெற்ற குறைபாடுள்ள இத்தகைய காலனித்துவ நீக்கத்தினால் ஆதிக்கத்துக்கு வந்த சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசின் கீழ், தமிழ் மக்கள் சிங்கள-பௌத்த பேரினவாத அரசின் அரசியல் மற்றும் நிர்வாக மேலாதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒரு உள்நாட்டு காலனித்துவ (Internal Colonialism) நிலைக்குள் வாழ வேண்டிய துயர வரலாற்றினுள் தள்ளப்பட்டனர்.
கடந்த 78 ஆண்டுகளில் தமிழர்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்தும் இனரீதியாக பாரபட்சமாக எம்மினத்தை நடாத்தியும் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்று அடையாளங்களையும், எமக்கான தனித்துவமான பொருளாதாரக் கட்டமைப்பையும் திட்டமிட்ட வகையில் அழித்தும், எங்கள் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தை வகை வகையான முறைகளில் கபளீகரம் செய்தும், அனைத்திலும் மேலாக தமிழ் மக்களைப் படுகொலை செய்தும் சிறீலங்கா அரசு தமிழ் இன அழிப்பை இடைவிடாது தொடர்ந்து வருகின்றது.
நாம் எதிர்கொண்ட இன அழிப்புக் காரணமாக நாங்கள் ஒரு தேசிய இனம் என்ற பிறப்புரிமை அடிப்படையில் எமது உரிமைகளைக் கோரிப் போராடியபோது, எம் மீதான இன அழிப்பினை சிறீ லங்கா அரசு மேலும் மோசமாக, கொடூரமாகத் தீவிரப்படுத்தியது.
சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சமவுரிமைகளைக் கேட்டதற்காக சிறீலங்கா அரசாலும், தொடர்ந்து வந்த அரசாங்கங்களாலும் நாங்கள் ஒடுக்கப்பட்டோம், ஏதிலிகளாக்கப்பட்டோம், எமது தாயகத்திலேயே சிறுபான்மையாக்கப்பட்டோம், அடையாளங்களை இழந்தோம், படுகொலைகளுக்கும் உள்ளானோம்.
இந்த 78 வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் தமிழ் இன அழிப்பின் உச்ச அளவிலான கொடூரமாக முள்ளிவாய்க்காலில் வலிந்து அடைக்கலம் புக வைக்கப்பட்ட எங்கள் உறவுகளுள் 146,679 பேர் 2009இன் முதல் ஐந்தே மாதங்களுள் திட்டமிட்டவகையில் கொடூரமான வழிமுறைகளில் அரசால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டில் உலகில் நிகழ்த்தப்பட்ட முதலாவதும் இற்றைவரை பாரியதுமாகவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் இன்றுவரை எம்மீதான இந்த இனப் படுகொலைக்கான நியாயம் கூட எமக்கு கிடைக்காதது மட்டுமல்ல 8 தசாப்தங்களாகத் தொடரும் தமிழ் இன அழிப்பைக் கூட யாரும் நிறுத்த முன்வரவுமில்லை.
இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. தற்போதைய அரசும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எந்த முற்போக்கான வாக்குறுதிகளை அல்லது நற் சைகைகைளைத் தன்னும் தரவில்லை. 78 வருடங்களாக அரச கட்டமைப்புகளால் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழ் இன அழிப்பின் விளைவுகளெதற்கும் பரிகார நீதி எதையும் செய்யவுமில்லை. தமிழ் இன அழிப்பின் எந்தவொரு செயற்பாட்டைத்தன்னும் தற்காலிகமாகவேனும் நிறுத்தக் கூட இவ்வரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன அழிப்பைத் தாமும் தொடர்ந்தபடி உதட்டளவில் சமத்துவம் பேசி, இந்த அரசும் நாட்களைக் கடத்துகின்றது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்திலிருந்து காலங்காலமாக சிங்கள-பௌத்த தரப்புகளுக்கு கிடைத்து வந்த வாக்குகளையும் தமிழ்த் தேசியச்சார்பிருந்தும் வாக்களிப்பின் போது கடந்த 16 ஆண்டுகால போக்குகளால் ஏற்பட்ட பல்வேறு ஏமாற்றங்களால் தமிழ்த் தேசியத்தைச் சற்றே புறந்தள்ளி வாக்களித்த ஒரு தொகை வாக்காளர்களதும் வாக்குளைப் பெற்று சிங்கள-பௌத்த தேசியவாதக்கட்சியான NPP தமிழர் தாயத்தில் போட்டியிட்ட கட்சிகளில் தனித்தொரு கட்சி பெற்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்றமை எமது பாதுகாப்பு உணர்வான தமிழ்த் தேசிய உணர்வில் ஏற்பட்ட ஒரு சறுக்கல்தான். தமிழரின் கையோங்கியிருந்த நிலையில் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைக் குழப்பியும் பின்னர் முள்ளிவாய்க்கால் அவலங்கள் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட போர் நிறுத்த முன்னெடுப்புகளை எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறீ லங்கா அரசு திட்டமிட்டவாறு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கியும் பேரினவாதப் பரப்புரைகள் மூலம் படைகளுக்கு ஆளணி வலுவூட்டியும், சிங்கள மக்களுக்கு போர் வெறியூட்டியும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு காரணமாகச் செயற்பட்ட JVPயினர் NPP என்ற முகமூடியுடன் வந்த போது ஒரு பங்கு தமிழ் மக்கள் அக்கட்சிக்கு வழங்கிய வாக்குகள் தமிழ்த்தேசியத்தை தமிழ் மக்கள் கைவிட்டுவிடுவர் என பேரினவாதம் கற்பனை செய்யக் காரணமாகியுள்ளது. NPPயின் இந்த வெற்றியின் மூலம் தமிழினம் மீதான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இறுதி வெற்றிக்கான காலம் கனிந்து விட்டதாக எண்ணி, இன்றைய அரசு செயற்பட்டு வருகின்றது.
சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இறுதி இலக்கான, தமிழ் மக்களிடையே ஆழமாக வேரோடியுள்ள தமிழ்த் தேசிய உணர்வு என்ற ஈழத் தமிழரின் கடைசிப்பாதுகாப்புக்கான அடையாளவுணர்வையும் அழித்து சிங்கள-பௌத்த தேசத்தினுள் “இலங்கையர்கள்” என்ற ஒற்றை அடையாளத்துள் தமிழரை தனித்துவமான அடையாளமேதுமற்ற சிறு குழுவாக கரைத்து இறுதி வெற்றியை எய்திடக் காலம் கனிந்து விட்டதாக 2024 தேர்தலின் பின்னர் சிறீ லங்கா அரசும் சிங்கள-பௌத்த பேரினவாதிகளும் அவர்களின் கட்டமைப்புகளும் கருதுகின்றன.
சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கடைசி வெற்றி என்பது, நாம் இன்றும் எதிர் கொள்ளும் இன அழிப்பை உணர முடியாத அறிவிலிகளாக நாம் மாறும்போதும் நாம் எதிர்கொண்ட இன அழிப்பு வரலாற்றை நாமே மறந்து போய் அந்த அவலங்களை எமக்குத் தந்தவர்களையே அவர்கள் மனம் மாறாத நிலையிற் கூட நாம் எமது தலைவர்களாக ஏற்கும் நிலை வரும்போதும் அனைத்திலும் மேலாக எமது இருப்பைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பரணாகத் திகழும் தமிழ்த் தேசிய உணர்வை இழந்து தமிழ்த் தேசம் சிங்கள-பௌத்த மேலாண்மையிடம் சரணடையும் நிலை வரும்போதுதான் தமிழ் மக்களின் இறுதித் தோல்வி வரும் என்பதை நாம் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள்களில் மேலும் ஒரு தடவை தீர்க்கமாக மனங்கொள்ள வேண்டும்.
1948 இலிருந்து பெருங் கொடூரமான இன அழிப்பை எதிர்கொண்டபடி இன்று வரை தமிழனம் நிமிர்ந்து நிற்பதற்கு ஒரே காரணம் எங்கள் ஆன்மாவிற் கலந்துவிட்ட தமிழத் தேசிய உணர்வும் எம்மீதான இன அழிப்புத் தொடர்பான எங்களது விழிப்புணர்வும்தான். தன் அடையாளத்தையும் உரிமைகளையும் காக்க நினைக்கும் எந்த ஒரு இனமும் தேசமும் தோற்றுவிடுவதில்லை.
முள்ளிவாய்க்காலில் எமது உரிமைகளுக்கான சுடுகருவிகள் மௌனித்திருக்கலாம் ஆனால் அவற்றை ஏந்த வைத்த அந்த இன அழிப்பு இன்னமும் நிற்கவில்லை. தமிழத் தேசியம் என்பது கனவோ கற்பனையோ அல்ல அது ஒரு மக்கள் கூட்டம் தன் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் கட்டமைக்கின்ற காப்பரண்.
முள்ளிவாய்க்கால் நினைவுக்காலம் என்பது இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவுகொள்ளும் காலம் மட்டுமல்ல. தமிழ்த்தேசம் மீதான ஒட்டுமொத்த இன அழிப்பையும் எம் தேசிய நினைவில் மாறா வடுவாகப் பதியவைப்பதற்கான நாளுமாக மாற வேண்டும். எமது தேசத்தின் பிறப்புரித்தான சுயநிர்ணய உரிமைக்கான அவாவை அடையும் உறுதியை எம் தேசத்தின் ஆன்மாவில் மேலும் உறுதியாக பதியவைப்பதற்கான காலமுமாகும்.
எம் சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்ள காலம் எத்தனையும் செல்லலாம். அதுவரை இந்த நாள்களை எங்கள் தேசிய உணர்வுகளைப் புடம் போடுவதற்கும் வலிமையுற வைப்பதற்குமான நாள்களாகவும் எங்கள் அடுத்த சந்ததிகளுக்கு எம்மீதான சிங்கள-பௌத்த பேரினவாத அரசின் கொடூரமான இன அழிப்பு வரலாற்றையும் அதன் நினைவுகளையும் கைமாற்றவும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் திட்டமிட்டு சூசகமாக இடம்பெறும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அடையாளங் காணக் கூடியவர்களாக எம்மை தகவமைத்துக் கொள்ளத் தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் தாயகம் முழுவதும் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் தமிழருள்ள ஒவ்வொரு ஊர் ஊராகவும் வீடுவீடாகவும் ஒவ்வொரு தமிழனுமாக அதற்கான பணிகளை நாம் அனைவரும் செய்வதற்கான சங்கல்ப்பத்தை இந்த முள்ளிவாய்க்கால் நாள்களில் நாங்கள் கைக்கொள்வோம். அதற்காக,
1. முள்ளிவாய்க்கால் கஞ்சி: முள்ளிவாய்க்கால் மண்ணில் அரசின் பொருளாதாரத் தடையால், கணிசமான வேளைகளில் ஒரு நேர உணவாக எமது உறவுகள் உட்கொண்ட ஓருணவான முள்ளிவாய்க்காற் கஞ்சியை இந்த நாள்களில் வீடுகளில் நாம் அருந்தி எமது பிள்ளைகளுக்கு எம் கதைகளைக் கூறியும், பொது இடங்களில் முள்ளிவாயக்காற் கஞ்சியை கூடிச் சமைத்து பிறருக்கும் வழங்கியும் நினைவுகளைக் கடத்தும் ஒரு நிகழ்வாக மாற்றுதல் கிராமங் கிராமமாக மடியரிசி சேர்த்து கூட்டாக கஞ்சி காய்ச்சி கூட்டாக இருந்து பகிர்ந்நதுண்டும் அந்த இடத்தில் அனுபவங்களை சிறுவர்களுடனும் இளைஞர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளல்.
2. முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18ல் வீடுகளிலும் பொது இடங்களிலும் நினைவுச் சுடரேற்றி சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இன அழிப்பில் நாம் இழந்தவர்களையும் குறிப்பாக முள்ளிவாய்க்கால மண்ணில் 2009ன் முதல் ஐந்து மாதங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் ஆன்மாவில் வலிகளையும் வலியைத் தந்தவர்களையும் மறக்காதிருக்க உறுதி செய்வோம்.
3. முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவு நிகழ்வு – இயலுமானவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் மே 18ல் நிகழவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஒன்றுகூடி இன அழிப்பு நினைவுகளை மறக்காதிருக்க உறுதி கொள்வோம்.
4. குருதிக் கொடை – இயன்றவர்கள் குழுக்களாகவும் அமைப்புகளாகவும் இந்தக் கிழமையில் குருதிக் கொடை நிகழ்வுகளை ஒழுங்கு செய்வோம்
5. பொது நினைவு நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல் – பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் இக் கிழமை முழுவதும் தினமும் ஒரு வேளையாவது நினைவுச் சுடரேற்றல், தினமும் ஒருவராவது சுருக்கமான நினைவுரையாற்றல்
6. மாணவரிடையே பேச்சு, கட்டுரை, கவிதை நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல்
7. கண்காட்சிகள் – இன அழிப்பை நினைவு கூரும் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்களை வலியுறுத்தும் புகைப்படக் கண்காட்சிகளை ஒழுங்கமைத்தல்
8. சிரமதானங்கள் – இந்தக் கிழமையில் பொது இடங்களிலும், இன அழிப்புடன் அல்லது தமிழத் தேசிய அடையாளங்களுடன் தொடர்புள்ள இடங்களில் சிரமதானங்களை ஒழுங்கு செய்தல்.
9. ஒவ்வொரு கிராமமும் தத்தமது கிராமங்களில் இடம்பெற்ற சகல படுகொலைகள் மற்றும் ஏனைய வகையிலான இன அழிப்பு சம்பவங்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல். இவ்வாறான வரலாற்றை நினைவில் நிற்க வைக்கும் வகையில் பொது நினைவாலயங்கள் அல்லது நினைவுத் தூபிகளை அல்லது கல்வெட்டுகளை அமைத்தல்
தொடரும் இன அழிப்பை அடையாளங் காண்பதும், இன அழிப்பையும் அதை எங்களுக்கு செய்தவர்களையும் சந்ததி தோறும் மறவாதிருப்பதற்கான பணிகளைச் செய்வதும் எம் தேசத்துக்காக நாங்கள் ஆற்ற வேண்டிய பணியென்பதை ஒவ்வொரு தமிழனும் நினைவு கூரும் நாள்களாகவும் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதற்கான நாள்களாகவும் ஆண்டு தோறும் வரும் மே 18ஐயும் அதனோடிணைந்த நாள்களையும் நாங்கள் மாற்றுவோம்.
நினைவுகளே எங்கள் பேராயுதம், தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம்.
(ஒப்பம்) பொ. ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம்
(ஒப்பம்) கு. ஓ. ளு. விஜயகுமார்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம்
(ஒப்பம்) கு. குருபரன்;
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம்
See less
Spread the love

