Home கட்டுரைகள் கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீா், வேலியே பயிரை மேய்வதாக மக்கள் குற்றச்சாட்டு– மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீா், வேலியே பயிரை மேய்வதாக மக்கள் குற்றச்சாட்டு– மு.தமிழ்ச்செல்வன்

by admin

கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீா், வேலியே பயிரை மேய்வதாக மக்கள் குற்றச்சாட்டு – மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீா், வேலியே பயிரை மேய்வதாக மக்கள் குற்றச்சாட்டு– மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீரானது வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள ஆற்றுக்குள் விடப்படுவதால் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரும் சுகாதார சீா்கேட்டுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, சுற்றுப்புறச்  சூழல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என பிரதேச பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். மேற்படி நடவடிக்கையானது வேலியே பயிரை மேய்வது போன்றுள்ளது எனவும்  மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற அனைத்து நீா் கழிவுகளும் வைத்தியசாலைக்கு பின்புறமாக காணப்படுகின்ற கிளிநொச்சி குளத்திற்கு நீரை கொண்டு வருகின்ற ஆறாகவும், கனகாம்பிகை குளத்திலிருந்து  வான்பாய்கின்ற நீரை  வெளியேற்றுகின்ற ஆறாகவும் காணப்படுகின்ற ஆற்றுக்குள் விடப்படுகின்றது.

குறித்த ஆறு  கனகாம்பிகை குளத்திலிருந்து ஆரம்பித்து வைத்தியசாலைக்கு பின்புறமாக டிப்போ இரத்தினபுரம்  வீதியை கடந்து கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. இதேவேளை கிளிநொச்சி குளத்திற்கு இரனைமடு குளத்திலிருந்து  நீா்ப்பாசன வாய்க்கால் ஊடாகவும் நீா் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நான்காம் வாய்க்கால் முதல் பத்தாம் வாய்க்கால் வரை  நீா்ப்பாசனத்திற்காக நீா் விநியோகிப்படுகிறது. இந்த நீா்ப்பாசன வாய்க்கால்கள்  மருதநகா். பெரியபரந்தன்,தாரணிகுடியிருப்பு, உருத்திரபுரம் குஞ்சுப்பரந்தன் என பல பிரதேசங்களை கடந்து செல்கிறது.  வாய்க்காலில் வயல் நிலங்களுக்கு நீா் விநியோகிப்படுகின்ற போது பொது மக்கள் குளிப்பது. முதல் ஆடு மாடு உள்ளிட்ட விலங்குள் குடிப்பது வரை பல  செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதனைத் தவிர மிக முக்கியமாக கிளிநொச்சி குளத்திலிருந்தே நீா்பெறப்பட்டு நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு கிளிநொச்சியின் குடிநீா் விநியோக திட்டம் நடைப்பெற இருக்கின்றது.

இது இவ்வாறிருக்க இந்தக் குளத்திற்கு மேற்படி ஆற்றின் ஊடாக வைத்தியசாலை கழிவு நீா் கழிப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் நவீன முறையில் நீா் சுத்திகரிப்புச் செய்தாலும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுநீரில் உள்ள இராசயனங்கள் மற்றும் நுண் கிருமிகள் குடிநீருக்குள் கலந்துவிடாதா? அல்லது வாய்க்கால் நீரில் குளிக்கின்ற போது மனித உடலுக்குள் வைத்தியசாலை கழிவு நீரில் உள்ள இராசயனங்களால்  பாதிப்புக்கள் ஏற்படாதா?  என மக்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனா். குறித்த விடயம் தொடா்பில் வைத்தியசாலை அதிகாரிகள், மாவட்ட, பிரதேச செயலக அதிகாரிகள்,  கரைச்சி பிரதேச சபையினா். சுகாதார பிரிவினா் என பலரின் கவனத்திற்கும் பிரதேச பொது மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

2009 இற்கு முன்னரும் வைத்தியசாலை கழிவு நீா் பிரச்சினை காணப்பட்டது என்றும் தற்போதும் காணப்படுகிறது என்றும் குறிப்பிடும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் கடந்த காலத்தை விட தற்போதே  அதிகளவு  துா்நாற்றமும், கழிவு நீா் வெளியேற்றமும் காணப்படுகிறது காரணம் வைத்தியசாலை தற்போது முன்னரை விட பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனா்.

கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை விடுதிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறுகின்ற எல்லா கழிவுநீரும் மேற்குறித்த ஆற்றுக்குள் விடப்படுகிறது. இந்த ஆற்றை அண்டியதாக நெருக்கமாக பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனா். ஆற்றுக்குள் காணப்படுகின்ற கழிவு நீா்  மிக மோசமான துா்நாற்றைத்தை வீசுகிறது. பகல் வேளைகளில் அதிகளவான வெயில் சூழலில்  கழிவு நீருக்குள் இருந்து புளுக்கள் வெளியேறுகின்றது எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனா்.

இதனை தவிர மேச்சலுக்கு செல்கின்ற தங்களுடைய ஆடு மாடு என்பன ஆற்றுக்குள் உள்ள நீரை குடிப்பதனால் வயிற்றோட்டம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாவதாகவும் இதனை தீா்ப்பதற்கு பல ஆயிரங்களை செலவு செய்வதாகவும் பிரதேச மக்கள்  கவலை தெரிவிக்கின்றனா். அத்தோடு ஆற்றோரம் உள்ள வீடுகளில் வாழ்கின்ற மக்கள் பகல் வேளைகளிலும் மின் விசிறி அல்லது நுளம்பு  வலையை பயன்படுத்த வேண்டியுள்ளது எனவும் காரணம் ஆற்றில் கழிவு நீரால் அதிகளவு நுளம்பு பெருக்கமும் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்ற கழிவு நீா் வைத்தியசாலை வளாகத்தினூள் பிரத்தியேமாக அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளிலிருந்த வெளியேறி ஆற்றில் சோ்கிறது. ஏனைய விடுதி கழிவு நீா்  நேரடியாக ஆற்றுக்குள் வெட்டிவிடப்பட்டுள்ளது.

சுகாதாரபிரிவின் சுகாதார பரிசோதகா்கள் பொது மக்களின் வீடுகளில்  சிறியளவில் தேங்கி நிற்கும் கழிவு நீரை சுட்டிக்காட்டி டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக உள்ளதாக  குற்றப்பணம் போன்ற தண்டணைகளை விதிக்கின்றனா். ஆனால் மிகப் பெரியளவில்  இடம்பெறுகின்ற இந்த கழிவு நீா் விடயத்தில் கண்டும் காணாதது போன்றுள்ளனா். என மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

நோய் ஏறபடுகின்ற சூழலை கட்டுப்படுத்துகின்ற வைத்தியசாலையினா், நோயை தீா்க்கின்ற வைத்தியசாலையினா் இது போன்ற செயல்களில் ஈடுபடலாமா எனவும்  குறித்த ஆற்றோரம் வாழ்கின்ற மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். அத்தோடு இந்த கழிவுநீா் கிளிநொச்சி குளத்தை சென்றடைகிறது எனவும்  கிளிநொச்சி குளத்து நீரையே சுத்திகரித்து கிளிநொச்சிக்கு குடிநீா் வழங்கும் செயறிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடும் மக்கள் இந்த நீரை நம்பி குடிக்கலாமா அதற்கான உத்தரவாதத்தை யார்“ வழங்வார்கள் என்றும் கேட்கின்றனா்.?

எனவே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீா் விடயத்தில் வேலியே பயிரை மேய்கின்ற ஒரு செயற்பாடு போன்றே நடவடிக்கைகள் அமைந்துள்ளது எனவும், எனவே  உரிய அதிகாரிகள்  பொது மக்களினதும் பிரதேசத்தினதும் சுகாதார நன்மைகைள கருத்தில் எடுத்து மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக உரிய  கழிவகற்றல் பொறிமுறையை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த பொது மக்கள் வினயமாக கோருகின்றனா். தவறின் வீதிக்கு இறங்கவேண்டியதனை தவிர வேறு வழியில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனா்.