மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு குறித்த பகுதியிலுள்ள ராணுவ முகாமின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு 78 குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்டிருந்தனர்.
குறித்த வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள காணி ஒன்றில் உரிமையாளரால் குழி ஒன்று வெட்டப்போதே அங்கு மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. மேலும் தோண்டப்பட்ட அந்தக் குழியில் எரிக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதனால் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1990ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன பலர் குறித்த இராணுவ முகாமிற்கே கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாகவும், இவை அவர்களது எச்சங்களாக இருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.