டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என நீதிபதி ஜோன் பிரிமோமோ (John primomo) அமெரிக்காவின் சன் அன்ரனியோ நகரில் நடைபெற்ற புதிய குடிமக்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அதிகமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட குறித்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பிரிமோமோ, டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் ட்ரம்ப்க்கு வாக்களித்தீர்களோ இல்லையோ என்றாலும் நீங்கள் அமெரிக்க குடிமக்கள் என்றால் அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி. அவர் தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகிறார் எனவும் சிலவேளை ட்ரம்பை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு போராடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் உரிமை உள்ள அதேவேளை நாட்டின் தேசிய சின்னம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும்; நீதிபதி பிரிமோமோ எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில் நீதிபதி பிரிமோமோவை பதவிநீக்கம் செய்யக்கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் அனைவரையும் ஒருங்கிணைக்கவே தான் அவ்வாறு பேசியதாகவும் தன்னுடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல எனவும் தெரிவித்துள்ள நீதிபதி பிரிமோமோ தான் ட்ரம்ப்க்கு ஆதரவாக பேசவில்லை நாட்டின் நன்மைக்காகவே பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.