இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 120 படகுகளை மீட்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் திருவாடானையைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமநாதபுரம், ராமேசுவரம், எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, சோழியகுடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மீனவர்கள் உள்ளனர். அண்மைக் காலங்களில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக மீனவர்களின் 120 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய் துள்ளனர். இதில், 80 படகுகள் ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமானவை. ஒவ்வொரு படகும் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புடையவை.
இந்தப் படகுகளை மீட்கவும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த நவ.11-ம் தேதி தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள 120 தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி வாதிட்டார். மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்