குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றுக் கொண்டு 20க்கும் மேற்பட்ட மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் ராஜபக்ஸ குடும்பத்தின் கள்வர்கள் எவருக்கும் தண்டனை விதிக்கப்படவில்லைவும் விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மோசடிகளில் ஈடுபட்ட எவருக்கும் தண்டனை விதிக்கப்படாது எனவும் இந்த அரசாங்கத்தினை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக குரல் கொடுத்தமைக்காக தாம் வெட்கப்படுவதாகவும் உண்மையில் தாமே தம்மை செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தை இந்த அரசாங்கம் தாக்குதவதாகவும், மஹிந்த அரசாங்கம் சொல்லித் தாக்கியதனை இந்த அரசாங்கம் சொல்லாமல் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.