குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி மீதான எதிர்பார்ப்பு சிதறிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி உறுதிமொழிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கமும் அடக்குமுறைகள் சண்டித்தனங்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பழுதடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கூட்டு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸ சென்ற வழியிலேயே பயணிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ம் ஆண்டில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததாகவும் எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி சாத்தியமில்லை என்பதனையே இந்த அரசாங்கம் நடைமுறை ரீதியாக காண்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.