அமெரிக்கா ஜெனாதிபதியாக தெரிவாகி உள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். 35 வயதாகும் ஜேரட் குஷ்னர் அண்மையில் நடந்த அமெரிக்க ஜெனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரம்பின் மகளான இவான்கா டிரம்பை திருமணம் செய்துள்ள குஷ்னர், முதலீட்டு மேம்பாட்டாளராக உள்ளார்.
இதேவேளை குடும்பத்தினருக்கு பாரபட்சமாக பதவி வழங்குவதற்கு எதிரான சட்டங்களையும், மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகக் கட்சியினர், இந்த நியமனத்தை டிரம்ப் உடனடியாக பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இந்தப் பதவி நியமனத்திற்கு முன்னதாக, தனது மருமகனை ஒரு மிகப்பெரிய சொத்து என்று புகழ்ந்துள்ள டொனால்ட் டிரம்ப், நிர்வாகத்தில் தலைமைப்பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.