குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்த காலத்தை விடவும் தற்போது நாட்டில் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அனுமதியுடன் 11 சுயாதீன உறுப்பினர்களைக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டது எனவும் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டதே தவிர அவர்களிடம் பரிந்துரைகளை கேட்கப்படவில்லை எனவும் எனினும் அவர்கள் பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் அந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட செயலணி என்பதனால் அனைத்து பரிந்துரைகளையும் உதாசீனம் செய்ய முடியாது எனவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதில் அங்கம் வகிப்பதனால் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளே இனவாதத்தை தூண்டுவதாகவும் தற்பொழுது இதில் சில பௌத்த நாயக்கத் தேரர்களும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்த சந்திரிக்கா கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் போக்குவாதத்தை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.