குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிலக்கண்ணிவெடி குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை பத்து மாதங்களுக்கு முன்னதாக இணக்கம் வெளியிட்டிருந்த போதும் இந்த பிரகடனத்தை இலங்கையில் அமுல்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கு கண்ணி வெடிகள் மிகவும் அவசியமானவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி இந்த பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
வெளிவிவகார அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகியன கூட்டாக இணைந்து இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தன. இந்த பிரகடனத்தை தற்போதைக்கு அமுல்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கு அதி நவீன சாதனங்கள் கருவிகள் கொள்வனவு செய்து அவற்றை உரிய முறையில் பயன்படுத்தியதன் பின்னர் பிரகடனத்தை அமுல்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கு சில ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.