ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உறைப்பனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
பல இடங்களில் மைனஸ் 0.8 அளவில் குளிர் நிலவுவதால் மக்கள் வெளியே வர அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 சென்டிமீட்டர் அளவுக்கு பனி பொழிந்துள்ளது. இங்கு மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.
காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதாலும், பனி மூட்டம் சூழ்ந்துள்ளதாலும் நான்காவது நாளாக இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.