ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக 36 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசிய அவர் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். அந்தக் குழு 3 மாதத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் தற்காலிக மீன்சந்தை அமைக்கப்படும் எனவும் விரைவில் நவீன முறையில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக மாணவர்களின் எதிர்காலம் கருதி 36 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் எனவும் போராட்டத்தின்போது தீ வைத்ததாக புகாரில் சிக்கிய காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதலைச்சர் தெரிவித்தார்.