குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலைச் சதி முயற்சி ஓர் திட்டமிட்ட நாடகமாகும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் நோக்கில் இவ்வாறு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் சுமந்திரனுக்காக கொலை அச்சுறுத்தல் பற்றி நீதிமன்றில் எதுவும் கூறப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் சுமந்திரன் கொலைச் சதி முயற்சி குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்தே நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெய்யாகவே சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டிருந்தால் அது குறித்து நீதிமன்றில் காவல்துறையினர் அறிவித்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் உண்மையை கண்டறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
காலத்திற்கு காலம் இவ்வாறான அச்சுறுத்தல்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி ஜெயகுமாரி சம்பவம் தொடர்பிலும் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் படை முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.