ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் இருந்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் 40 நிமிடத்தில் தியானத்தை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் தான் ராஜினாமா கடிதம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டதும் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம்:
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் நீண்ட நேரமாக அமர்ந்திருக்கிறார்.
இரவு சுமார் 9 மணிக்கு, திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், திடீரென இரவு நேரத்தில் அவர் அங்கு சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதைவிட, அவர் அங்கேயே நீண்ட நேரம் அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார். பாதுகாப்பு அதிகாரிகளும், அவரது ஆதரவாளர்களும் அவருக்குப் பின்னால் நின்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டார். மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், பன்னீர் செல்வம் திடீரென தியானத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BBC