குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு 13ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான ஒரு சரத்து கூட இன்னமும் உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என கூறியிருந்தார்.
இந்த விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.என்.பியின் தலைவருமான விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.