219
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனின் குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளதாக சிறுவனின் தாயார் தெரிவித்து இருந்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
எனது கணவர் எம்மை விட்டு நீண்ட காலமாக எம்மை விட்டு பிரிந்து வாழ்கின்றார். எமக்கு மூன்று பெண் பிள்ளைகளும் கடைசி பிள்ளையாக இவனும் உள்ளான். இவன் சிறு வயதில் வாய் பேச கூடியவன் , துடிப்பாக சுறுசுறுப்பாக இருப்பான். நான்கு வயது இருக்கும் போது மாட்டு கன்றுக்குட்டியை பிடிக்க ஓடிய போது தாய் மாடு இவனை இடித்து விழுத்தியது.
அதன் போது அவனது இரண்டு காதுக்காளும் இரத்தம் வந்தது. அதனை அடுத்து இவனை நாம் வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தோம். சிகிச்சை பலனின்றி அவனது இரண்டு காதுகளும் கேட்காமல் போனதுடன் , வாய் பேச முடியாதவனும் ஆகிவிட்டான்.
எமது குடும்பம் மிகவும் வறுமையாக இருந்தமையால் அவனுக்கு மேலதிக சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனது முதல் மூன்று பெண் பிள்ளைகளையும் வறுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து உள்ளேன். இவன் மட்டுமே என்னுடன் உள்ளான்.
இவனையும் கைதடியில் உள்ள நவில்ட் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கு 5ம் ஆண்டு வரை கல்வி கற்றான். புலமை பரிசில் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டான். அப்போது அந்த பாடசாலையில் இருந்த ஆசிரியை ஒருவர் இவனை அரவனைந்து படிப்பித்து வந்தார். அவர் தற்போது பாடசாலையில் இல்லை.
புதிதாக வந்த ஆசிரியை கண்டிப்பு மிக்கவர். அதனால் இவன் பாடசாலை செல்ல விரும்பாது இருக்கிறான். ஒரு முறை வலு கட்டாயமாக பாடசாலை கூட்டி செல்ல முற்பட்ட வேளை பாடசாலை சீருடையை கொழுத்தி விட்டான். பாடசாலை செல்ல மாட்டேன் என அழுது அடம்பிடிப்பான். அதனால் நானும் அவனை அப்படியே விட்டு விட்டேன். நான் கூலி வேலைக்கு செல்பவள். காலையில் நான் சமைத்து வைத்து விட்டு சென்றால் இவன் வீட்டில் இருப்பான். கறி சமைப்பான் அல்லது அயல் வீடுகளுக்கு சென்று வருவான். அப்படியாக அவன் தன் பொழுதை கழித்துக் கொள்வான்.
கொலையுண்ட பெண்ணின் வீட்டுக்கும் செல்கின்றவன். அங்கு சென்று தொலைக்காட்சி பார்ப்பான். அவர்களது சிறு பிள்ளையுடன் விளையாடுவான். அவ்வாறே கொலை நடந்த தினமான கடந்த 24ம திகதி இவன் அந்த வீட்ட சென்று உள்ளான். அப்போது அங்கு இருவர் நின்று அவனை மிரட்டி துரத்தி உள்ளனர். அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்து இருக்க வேண்டும். கொலையாளிகளை என் மகன் கண்டு உள்ளான்.
பிறகு 27ம் திகதி வீதியில் வைத்து யாரோ என் மகனை கொலை செய்வேன் என மிரட்டி உள்ளனர். அதனை நீதிமன்றுக்கு தெரிவித்தோம்.அத்துடன் ஊர்காவற்துறை காவல்நிலையத்திலும் அது தொடர்பில் முறைப்பாடு செய்தோம்.
தற்போது எனது மகனுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து உள்ளது. இருந்தாலும் எனது மகனை தனியே விட்டு விட்டு நான் வேலைக்கு செல்ல முடியாது உள்ளது. அவனை நான் வேலை பார்க்கும் இடத்திற்கு சில வேளைகளில் அழைத்து செல்வேன். சில இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாது. அதனால் நான் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நானும் அவனும் மிகவும் வறுமையில் வாழ்கின்றோம்.
தற்போது இவனுக்கு ஒரு காது சிறியளவில் கேட்கின்றது. எனவே கேட்கும் திறனை அதிகரிக்கும் கருவியை வைத்திய சாலை சென்று பொறுத்தினால் அவனக்கு கேட்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் அதற்கு தற்போது எம்மிடம் வசதியில்லை.
இந்த வழக்கு முடிவடைந்து குற்றவாளிகள் இனம் காணப்படும் வரையில் எனது மகனுக்கு பாதுகாப்பாக நான் கூடவே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் என் வாழ்வாதாரம் பாதிக்கபப்ட்டு நானும் அவனும் வறுமையில் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love