Home இலங்கை கேப்பாப்பிலவு- நந்திக்கடல் மௌனமாக அழுதது. – நிலாந்தன்:-

கேப்பாப்பிலவு- நந்திக்கடல் மௌனமாக அழுதது. – நிலாந்தன்:-

by admin

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த மக்கள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

புதுக்குடியிருப்பிற்கு தெற்கே வற்றாப்பளைக்கு மேற்கே அமைந்திருக்கும் ஓர் ஒடுங்கிய நிலப்பரப்பே கேப்பாபிலவு. கிழக்கே நந்திக்கடல். மேற்கே கொண்டைமடு காட்டையும் உள்ளடக்கிய பெருங்காடு. கடலும், காடும் மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. அதாவது நெய்தலும், மருதமும் மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. நந்திக்கடல் ஈழப்போரின் இசைப்பாடல்களிலும், போர் இலக்கியத்திலும், பாடல் பெற்ற ஒரு சிறுகடலாகும். தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் ஒரு சாட்சி அது. ஈழப்போரிற்கூடாக அதற்குக் கிடைத்த பிரசித்தத்திற்கும் அப்பால் அச் சிறுகடலுக்கென்று ஒரு பொருளாதார முக்கியத்துவம் உண்டு. கறுப்பு இறால் அள்ளு கொள்ளையாக விழையும் ஒரு கடலேரி அது.பருவ காலங்களில் கறுப்பு இறால் பொலியப் பொலியகடலை மேவி இறால்கள் குதிக்கும். அப்பொழுது கடலை பறவைகள் மொய்க்கும். அந்நாட்களில் ஒரு கிலோ இறால் ஒரு ரூபாய்க்கும் விற்கப்பட்டதுண்டு. இறால் மட்டுமல்ல நண்டுக்கும் நந்திக்கடல் பிரசித்தமானது. இவ்வாறாக இறால் பெருகிய ஒரு சிறுகடலில் கடைசிக்கட்ட ஈழப்போரின் போது பிணங்களும் பெருகின. அந்தப் பிணங்களை கொத்தித் தின்ன பறவைகள் கடலை மொய்த்தன. புதுவை இரத்தினதுரையின் கவிதை வரியில் சொன்னால் அந்நாட்களில் ‘நந்திக் கடல் மௌனமாக அழுதது’.

கிழக்கே நந்திக்கடலில் கறுப்பு இறால் பொலியும். மேற்கே கொண்டைமேட்டுக் காட்டில் முதிரை மரங்கள் பொலியும். இடையே மருதமும் நெய்தலும் மருவும் நிலப்பரப்பில் தென்னை செழித்து வளரும். நட்ட தென்னம்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க வளர்ந்து குலைதள்ளும். என்றொரு விவசாயி சொன்னார். அங்குள்ள மேய்ச்சற் தரைகளில் வளரும் மாடுகள் ஏரிகள் பெருத்து கம்பீரமாகக் காட்சியளிக்கும்.

இதுதான் கேப்பாப்பிலவு. அந்த நிலத்தின் பூர்வ குடிகள் கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளுக்கு குறையாமல் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 360 குடிகள் தேறும். அவர்களின் பின்வந்த தலைமுறையினர் கச்சான் பயிர் செய்வதற்காக வெட்டித்திருத்திய காடே பிலக்குடியிருப்பாகும். பிந்நாளில் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டதனால் பிலக் குடியிருப்பை மூடி மந்து வளர்ந்திருந்தது. 2005ல் புலிகள் இயக்கம் இடம்பெயர்ந்த மக்களுக்கு பிலக் குடியிருப்பில் ஒரு வீட்டுத் திட்டத்தை உருவாக்கி கொடுத்தது. ஒரு குடும்பத்திற்கு கால் ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு பின்னர் அரசாங்க பெமிற்றும் வழங்கப்பட்டது. பிலக் குடியிருப்பைப் போலவே புலிகள் இயக்கம் அப் பிரதேசத்தில் சூரி புரம் என்ற ஒரு குடியிருப்பையும் உருவாக்கியது.

பிலக் குடியிருப்பிற்கு பின்னே புலிகள் இயக்கத்தின் வான் படைத்தளம் ஒன்று இருந்தது. அந்த வான்படைத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உலங்கு வானூர்திகள் ஒரு மாவீரர் நாளின் போது முள்ளியவளை துயிலும் இல்லத்தின் மீது மலர்களை தூவிச் சென்றன.

2009 மே மாதத்திற்குப் பின் புலிகளின் வான்படைத்தளம், பிலக் குடியிருப்பு ,சூரி புரம் உட்பட கேப்பாப்பிலவின் பெரும் பகுதியை படையினர் தம்வசப்படுத்தினர். காடும் கடலேரியுமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலப்பரப்பை படையினர் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரியான கணக்கு அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. சூரி புரம் கடந்த மாதம்தான் ஓரளவிற்கு விடுவிக்கப்பட்டது. கடந்த 25ம் திகதி அரசத் தலைவர் வருவதாக இருந்த ஒரு வைபவத்தில் சூரி புரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சீரற்ற காலநிலை காரணமாக அரசுத் தலைவரும் வரவில்லை சூரிபுரமும் விடுவிக்கப்படவில்லை. 4 நாட்கள் கழித்து சூரி புரம் விடுவிக்கப்பட்டது. இப்பொழுது பிலக் குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருகிறார்கள்.

அவர்கள் போராடத் தொடங்கிய பின் அப்பகுதிக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அரச அலுவலர்களையும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்நுழைவதற்கு படையினர் அனுமதித்தார்கள். அவ்வாறு சென்ற மக்கள் பிரதிநிதிகள் தரும் தகவல்களின்படி வான்படையினரின் தளத்திற்கு வெளியேதான் பிலக் குடியிருப்பு காணப்படுகிறது. எனவே அதை விடுவிப்பது பிரச்சினையாக இருக்காது என்று அவர்கள் அபிப்பிராயம் படுகிறார்கள்.

இருக்கலாம். சூரி புரத்தைப் போல பிலக் குடியிருப்பையும் அரசாங்கம் விடுவிக்கலாம். ஆனால் கேப்பாபிலவு பிரதேசத்தில் காட்டையும் கடலையும் உள்ளடக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கூட்டுப்படைத் தளத்தை அவர்கள் கைவிடுவார்களா? முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் படைச்செறிவு அதிகமுடைய பகுதிகளில் ஒன்றாக அக்கூட்டுப்படைத்தளம் காணப்படுகிறது. கேப்பாப்பிலவு பிரதான சாலையை இடையில் வழிமறித்து கூட்டுப்படைத்தளம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மக்கள் பாவனைக்கென்று தளத்தைச் சுற்றிச் செல்லும் ஒரு தற்காலிக கிரவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலையூடையாகச் செல்லும் பொழுதும் ஒரு பெரும் தளத்தின் உள்வீதியூடாகச் செல்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அங்கு காணப்படும் பிரமாண்டமான கட்டுமானங்களைப் பார்க்கும் போது படையினர் அந்த இடத்திற்கு அதிக கேந்திர முக்கியத்துவத்தை வழங்குவதாக தெரிகிறது என்று மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். உண்மையாகவே அப்படியொரு கேந்திர முக்கியத்துவம் கேப்பாப்பிலவிற்கு உண்டா?

புலிகளின் ஆட்சிக் காலத்தில் கேப்பாப்பிலவில் ஒரு வான்படைத்தளம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது அப்பகுதிக்குள் புலிகள் இயக்கம் வெற்றிகரமான ஒரு ஊடறுப்புச்சமரை நடாத்தியது. இது தவிர போரின் இறுதி வாரங்களில் புலிகள் இயக்கப் பிரதானிகள் அப்பகுதி ஊடாக தப்பிச் செல்ல முற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. இம் மூன்று சந்தரப்பங்களையும் தவிர கேப்பாப்பிலவு ஒப்பீட்டளவில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு நிலப்பரப்பாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது படைத்தரப்பு அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கக்கூடும்.

முதலாவது காரணம் புலிகளால் பேணப்பட்ட ஒரு வான்படைத்தளத்தை தாங்களும் பேண வேண்டும் என்று அவர்கள் விரும்பக்கூடும். விடுதலைப்புலிகளின் விமானத் தளம் கேப்பாப்புலவுக்கு அருகாமையிலேயே இருந்தது. இதன் காரணமாகவே கேப்பாப்புலவில் இலங்கை விமானப்படையின் முகாம் அமைக்க வேண்டி ஏற்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.அந்த வான்படைத்தளம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கு ஹெலிகொப்டர்களைத் தவிர வேறெந்த விமானப் போக்குவரத்தும் இடம்பெறவில்லை என்று கிராம வாசிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஒரு சிறிய விமானம் அந்த ஓடுபாதையில் தரையிறங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வான்படைத்தளத்தை படைத்தேவைகளுக்காகவும், பொதுமக்களின் தேவைகளுக்காகவும் தாம் பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன் நேற்று முன்தினம்நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அவருடைய கூற்றை நிரூபிப்பதற்காகத்தான் ஒரு சிறிய விமானம் அங்கு தரையிறங்கியதா? அவ்வாறு எப்போதாவது ஒரு முறை ஒரு சிறு விமானம் தரையிறங்குவதற்கென்று அந்த இடத்தில் ஒரு வான்படைத்தளம் பேணப்படுகிறதா?

புலிகளின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அது ஒரு இரகசிய அமைவிடம். ஒரு அரசற்ற தரப்பாகிய புலிகளுக்கு தமது ஆட்சிப்பரப்பிற்குள் அப்படியொரு இரகசிய வான்படைத்தளத்தை பேண வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால் ஒரு அரசுடைய தரப்பிற்கும் அது பொருந்துமா? வன்னியை மையமாகக் கொண்டு புலிகள் சிந்தித்ததைப் போல கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஒரு அரசு சிந்திக்க வேண்டிய தேவை என்ன?

தம்மை எதிர்த்துப் போராடிய புலிகள் இயக்கத்தின் படை வியூகங்களின் மீது இலங்கை அரச படைகளுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று இதை வியாக்கியானப் படுத்தலாமா? அல்லது புலிகளின் வான்படைத்தளத்தை தாங்களும் பேணுவதன் மூலம் அதை ஒரு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்களா? இக் கேள்விகள் இரணைமடு வான்படைத் தளத்திற்கும் பொருந்தும். ஓர் அரசற்ற தரப்பு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றிராத தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பேணிய இரகசிய வான்படைத்தளங்களை ஓர் அரசுடைய தரப்பும் பேண வேண்டிய தேவை என்ன? அவற்றை வெற்றிச் சின்னங்களாக பேணுவது என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் உண்டா? இது முதலாவது.

இரண்டாவது காரணம் கடைசிக்கட்டப் போரில் கேப்பாப்பிலவை ஊடுருவி புலிகள் ஒரு தாக்குதலை நடாத்தினார்கள். நாலாங்கட்ட ஈழப்போரில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புச் சமர்களில் ஒப்பீட்டளவில் கவனிப்புக்குரிய சமர்களில் அதுவும் ஒன்று. கடைசிக் கட்டத்தில் சில குக்கிராமங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த நிலையில் படைச்செறிவு மிக்க ஒரு நிலப்பரப்பில் இருந்து தப்பிச் சென்று படைச்செறிவு குறைந்த ஒரு காட்டுப்பகுதிக்குள் பிரவேசிப்பது என்ற ஓர் உத்திக்கூடாகச் சிந்திக்கும் பொழுது கேப்பாப்பிலவுப் பகுதிதான் அந்நாட்களில் புலிகளுக்கு இருந்த ஒரே வாய்ப்பான வழியாகும். எனவே அந்நாட்களில் புலிகள் இயக்கத்தின் நோக்குநிலையில் அப்பகுதிக்கு கேந்திர முக்கியத்துவம் அதிகமிருந்தது. அதுஇலங்கை அரச படைகளுக்கும் பொருந்துமா?

இப்படிப் பார்த்தால் கேப்பாப்பிலவிற்குரிய கேந்திர முக்கியத்துவம் எனப்படுவது ஒரு பௌதீக அடிப்படையிலானது என்பதை விடவும் அதிக பட்சம் உணர்வு ரீதியிலானது(emotional attachment) என்று எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறான இராணுவ நோக்கிலிருந்து வழங்கப்படும் வியாக்கியானம் பொருத்தமில்லை என்றால் அப்பகுதியை படையினர் தொடர்ந்தும் தம்வசம் வைத்திருப்பதற்கு வேறு பொருத்தமான காரணங்கள் இருக்க முடியுமா? வளம் மிகுந்த இறால் பெருகும் நந்திக்கடலையும் பெறுமதியான பெரு விருட்சங்கள் நிறைந்த பெருங்காட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க படைத்தரப்பு முற்படுகிறதா? கொண்டைமடுக் காட்டுப் பகுதிக்குள் முன்பு பெருந்தொகையாகக் காணப்பட்ட முதிரை மரங்கள் இப்பொழுது தறிக்கப்பட்டு விட்டதாக ஓர் அவதானிப்பு உண்டு. அண்மையில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற மக்கள் பிரதிநிதிகளும் தறித்து வீழ்த்தப்பட்ட மரங்களைக் கண்டிருக்கிறார்கள். இது தவிர போரில் கைவிடப்பட்ட பெருந் தொகுதிக் கால்நடைகள் அப்பகுதியில் பராமரிக்கப்படுவதாகவும் கிராம வாசிகள் தெரிவிக்கிறார்கள். தமது கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்லவதற்கு அனுமதிக்காத படைத்தரப்பு போரில் கைவிடப்பட்ட பெருந் தொகை மாட்டுப் பட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றொரு காரணம் இறுதிப் போர்க்களம் அது என்பதால் அக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட பொது சனங்களின் எச்சங்கள் அப்பகுதியிலேயே எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ இருக்கலாம் என்றொரு சந்தேகம். அவை போர்க்குற்ற விசாரணைகளுக்கு தேவையான சான்றுகளாகும். அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு படைத்தரப்பு விரும்பக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் முன்பு காணப்பட்ட உயரமான காவற்கோபுரங்கள் தற்பொழுது அநேகமாக நீக்கப்பட்டு விட்டன. ஆனால் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புச் சாலையில்குறிப்பாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்தஉயரமான காவற் கோபுரங்கள் இப்பொழுது சீமெந்துக் கட்டுமானங்களாக நிரந்தரமாக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. கடைசிக் கட்டப் போர் நடந்த ஒரு பகுதி என்பதைத் தவிர ஒப்பீட்டளவில் கேந்திர முக்கியத்துவம் குறைந்த ஒரு நிலப்பரப்பு அது. அப்பகுதிக்கு இப்பொழுது கொடுக்கப்படும் முக்கியத்துவம் எனப்படுவது இறுதி வெற்றியை நினைவு கூரும் ஓர் உணர்ச்சிகரமான விவகாரமா? அல்லது போர்க்குற்ற ஆதாரங்களை இல்லாமற் செய்வதற்கா?

எனவே மேற்கண்டவைகளின் அடிப்படையில் சிந்தித்தால் கேப்பாப்பிலவு உட்பட இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த பகுதிகளில் படைச் செறிவும், படைப் பிரசன்னமும் குறைக்கப்படுவதற்கு மேலும் அதிக நாட்கள் எடுக்கும் என்றே தோன்றுகிறது. கேப்பாபிலவு போராட்டம் காரணமாக சில சமயம் பிலவுக் குடியிருப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படையினர் விடுவிக்கக்கூடும். அல்லது இப்படிப்பட்ட போராட்டங்களைக் கண்டு காணிகளை விடுவிப்பது என்பது போராடியே காணிகளை விடுவிக்கலாம் என்ற ஒரு துணிச்சலை தமிழ் மக்களுக்கு கொடுத்து விடக்கூடும் என்று படைத்தரப்பு அஞ்சக்கூடும். எனவே இவ்வாறான போராட்டங்களைக் கண்டு காணிகளை முழு அளவிற்கு விடுவிக்கக் கூடாது என்றும் படைத்தரப்பு சிந்திக்கக்கூடும்.

அப்படி பகுதியாகவோ முழுமையாகவோ பிலக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டாலும் கூட யுத்த வெற்றி வாதத்தின் வாழும் நூதன சாலைகளில் ஒன்றாகக் காணப்படும் ஒரு வான்படைத்தளத்தின் நிழலில் தான் அந்த மக்கள் மீளக்குடியமர வேண்டியிருக்கும். முல்லைத்தீவு மாவட்டத்தில் படைச்செறிவு அதிகமுடைய ஒரு கூட்டுப் படைத்தளத்தின் பின்னணிக்குள்தான் அவர்கள் குடியிருக்க வேண்டியிருக்கும். அப்படிக் குடியேறிய பின்னரும் கூட நந்திக்கடலில் பொலியும் இறால்களையும் கொண்டைமடுக் காட்டில் வளரும் மரங்களையும் அவர்கள் முழுமையாக நுகர முடியாதிருக்கும். அவர்களுடைய கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்வதற்கும் தடைகள் தொடர்ந்துமிருக்கும். இத்தடைகளை அகற்றுவதற்கு அவர்கள் தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கும்.தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின்; எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்த அதே நந்திக்கடல் நிராயுதபாணிகளான இந்த மக்களின் போராட்டத்திற்கும் சாட்சியாக இருக்கும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More