181
கிளிநொச்சி பரவிபாஞ்சானில் விடுவிக்கப்படாது உள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனவும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்தினால் உடனடியாகவே விடுவிக்கப்படும் என இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் தாங்கள் காணிக்குள் செல்லும் வரைக்கும் த ங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப்போதில்லை என பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலரை மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு படையதிகாரிகள் கரைச்சி பிரதேச செயலர், மாவட்டச் செயலக அதிகாரிகள் காணி உத்தியோகத்தார்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் இடம்பெற்றது.
அதன் பின்னர் கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், கரைச்சி காணி உத்தியோகத்தர் , கிராம அலுவலர், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படும் சில மக்களுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளகாணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் கருத்து தெரிவித்த படையினர் பரவிபாஞ்சான் பகுதியில் விடுவிக்கப்படாது உள்ள காணிகளில் விடுதலைப்புலிகளின் பாரிய கட்டிடங்களை தவிர ஏனைய காணிகள் மீண்டும் பொது மக்களினடம் கையளிக்கப்படும் ஆனால் அதற்கு முன்னதாக மக்களின் காணிகளை அதிகாரிகள் ஆவணங்களை கொண்டு உறுதிப்படுத்தி அடையாளப்படுத்த வேண்டும் அதற்காகவே இன்று நேரில் சென்று பார்க்கப்பட்டது. அதிகாரிகள் விரைவாக மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் போது படையினரும் விரைவாகவே குறித்த காணிகளை விடுவிப்பர் எனத் தெரிவித்தனர்.
படையினரின் தகவலின் படி கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் கையில் தற்போது பரவிபாஞ்சான் காணி விடுவிப்பு தங்கியுள்ளது அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையே கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் மக்களை விரைவாக அவர்களின் காணிகளுக்குள் செல்ல வழிவகுக்கும்.
இதேவேளை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பரவிபாஞ்சான் மக்கள் தாங்கள் தங்களது காணிகளுக்குச் செல்லும் வரை தங்களின ;கவனயீர்ப்பு பேராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளளனர்.
Spread the love