பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக இணைந்து கொண்டு சுமார் 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தான் இன்று உரையாற்றுவதாக தெரிவித்த அவர் சிலர் தமது செயற்பாட்டை நாட்டை காட்டிக் கொடுத்ததாகவும் துரோகமிழைத்தாகவும் விமர்சித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற்ற போதும் அனைத்து மக்களையும் சமமாக நடத்தி hட்டை கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகள், வன்முறைகளுடன் பயணித்தாகவும் விலைமதிப்பற்ற மனித வளங்கள் மற்றும் வாழ்க்கை என்பவற்றை இழந்தோம் எனத் தெரிவித்தார்.
மேலும் இலங்கையை நீதியான ஆட்சியை கட்டியெழுப்ப கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர் சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லிணக்க கலந்தாய்வுச் செயலணி பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மங்கள உரையாற்றுவார்
Feb 28, 2017 @ 07:41
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்ற உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வுகள் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில ஆரம்பமாகியது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அரசாங்கத்தால் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அடுத்துவரும் காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும்வெளிவிவகார அமைச்சர் தமது உரையில் விளக்கமளிக்க உள்ளார்.
இதற்கமைய, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கு மேலும் 18 முதல் 24 மாத கால அவகாசத்தை மங்கள கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை தொடர்பான விவாதங்கள் மார்ச் 2 ஆம், 18 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.