அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பான கடிதத்துக்கு சசிகலா தரப்பினால் இன்று தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் உரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலராகி இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராஜ்யசபா நாடாமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா முதலில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினரும் கட்சி விதிப்படி இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது எனவும் பொதுச்செயலர் என்பவர் பொதுக்குழு மற்றும் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி விதி எனவும் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சசிகலாவிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் பெங்களூரு சிறைக்கே கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் உரிய விதிகளின்படிதான் தான் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டதாக டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இன்று சசிகலாவின் பதிலை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.