அரச தோட்ட காணிகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி உன்னஸ்கிரிய ஏயார்பார்க் தோட்ட மக்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பில் மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளரின் அழைப்பின் பேரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்தையின்போது தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது என அரச அதிகாரிகள் எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
எனினும், எயாபார்க் தோட்டத்திலுள்ள சகல தொழிலாளர் குடும்பங்களுக்கும் குறைந்தது 2 ஏக்கர் காணி குத்தகைக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் , தேயிலை செய்கைக்கான மானிய உதவிகளை அரசு பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் இவ்விடயம் தொடர்பில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திகதி வழங்கப்படும் என சந்திப்பின் போது அறிவிக்கப்பட்ட போதிலும், கடிதத்தில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், தமக்கான உரிய தீர்வு கிடைக்கும்வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.