இலங்கை விமானப்படைக்கு சொந்தமான காணிகளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு விமான முகாம் அமைந்துள்ள காணி 2002ம் ஆண்டில், பிரபாகரனினால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை எனவும் இவை அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் என்பதற்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு காணி காரியாலயத்திற்குள் புகுந்து ஆவணங்களை தீயிட்டு அழித்த புலிகள், காணிகளை அபகரித்துக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியின் ஒரு பகுதியில் புலிகள் விமான ஓடுபாதையொன்றை அமைத்ததுடன் ஏனைய பகுதிகளில் மாவீரர் குடும்பங்களை குடியமர்த்தியதாகவும் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் படையினர் குறித்தப் பகுதியை கைப்பற்றிய போது மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்த இடங்களை விட்டு தப்பிச்சென்றனர் எனவும் குறித்த கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.