ஜோர்டானில் இன்று தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 15 பேருக்கு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனையை ஒழிப்பதாக அறிவித்த ஜோர்டான் மன்னர் அப்துல்லா நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்திருந்த போதும் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையொப்பம் இடாமல் இருந்து வந்தார்.
எனினும் ஜோர்டானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் மீண்டும் மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தமைக்கு ஏற்ப மீண்டும் கடந்த 2014ம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அம்மான் நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், ஜோர்டான் உளவுத்துறை அதிகாரிகள் ஐந்துபேர் கொல்லப்பட்ட தாக்குதல், இஸ்லாமிய கொள்கைக்கு மாறாக எழுதி வந்ததாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நஹித் ஹத்தாரின் படுகொலை ஆகிய தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையை பத்து குற்றவாளிகள் மற்றும் கடும் குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேலும் ஐந்து பேர் என மொத்தம் 15 பேருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜோர்டான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.