கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனத்தின் 19ம் திருத்தச் சட்டத்தின் 91ம் சரத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமையுடைய ஒருவர் இலங்கைப் பாராளுமன்றில் உறுப்புரிமை வகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள கீதா குமாரசிங்க அந்த குடியுரிமையை இதுவரையில் ரத்து செய்யவில்லை எனவும் அது தொடர்பிலான ஆவணங்கள் எதனையும் அவர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் கீதா குமாரசிங்க இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் கீதா குமாரசிங்க காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.