பன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது காணியை குத்தைக்கு வழங்குமாறு விடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டு சொந்தமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை பதினைந்தாவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று 18-03-2017 பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் மற்றும காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று சந்தித்து காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதனையடுத்து பதினைந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை இன்று மதியத்துடன் நிறுத்தியுள்ளனர்.
காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி மக்கள் கடந்த 04-03-2017 அன்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த காணியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் காணி தனியாருக்கு சொந்தமானது என்பதனால் அரசின் வீட்டுத்திட்டம் ,மலசல கூடம் உள்ளிட்ட எவ்வித உதவிதிட்டமும் இன்றி மிக மோசமான வாழக்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே அவர்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வுகோரி கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா அவர்களின் முயற்சி காரணமாக காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் அவர்களை பன்னங்கண்டிக்கு அழைத்துச் சென்று மக்களுடன் உரையாடியமைக்கு அமைவாக குறித்த பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாலதிவரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த காணி தனது அப்பா,சித்தப்பா உள்ளிட்ட ஏழு பேருக்கு சொந்தமானது எனவும் தான் கிளிநொச்சி காவேரி கலாமன்றத்திற்கு வேறு விடயம் ஒன்றுக்காக வந்திருந்தபோது ஊடகயவியலாளர் ஒருவரின் தகவலுக்கு அமைவாக அருடதந்தை யோசுவா தனது கவனத்திற்கு விடயத்தை கொண்டு வந்தார் எனவும் அதன்பின்னா் தாங்கள் அங்கு சென்று மக்களின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் தனது உறவினர்களுடன் தொடர்ச்சியாக பேசி இணக்கத்திற்குகொண்டு வந்து பன்னங்கண்டி மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை பன்னங்கண்டி மக்களின் பிரச்சினை காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன் தீர்வுக்கு வந்துள்ளது உடனடியாக காணி நில அளவை செய்யப்பட்டு அங்கு1990 களிலிருந்து வாழ்கின்ற சுமார் 65 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்தோடு அவர்களுக்கான வீட்டுத்திட்டமும் வழங்கப்படும் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பன்னங்கண்டி மக்களுக்கு காணிகளை குத்தைக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடுத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளாத காணி உரிமையாளர் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் குறித்த காணியை அந்த மக்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு தற்போது தீர்மானித்துள்ளனர்.
இதனை தவிர தங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க காரணமாக இருந்த மருத்துவர் மாலதிவரன் அருட்தந்தை யோசுவா மற்றும் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.